Header Ads



காஸா மக்களை இறைவன் தனது கையில் வைத்திருந்தான் - ஹமாஸ் தலைவர் தெரிவிப்பு



ஹமாஸ் அமைப்பின் தலைவர் காலித் மிஷால், “இஸ்ரேல் தனது இலக்கை எட்ட தவறியது” என தெரிவித்துள்ளார்.  இரு தரப்பு யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு இணக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கெய்ரோவில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் காலித் மிஷால் இவ்வாறு குறிப்பிட்டார்.

“கடந்த 8 தினங்களாக காசா மக்களை இறைவன் தனது கையில் வைத்திருந்தான். இஸ்ரேல் தனது அனைத்து இலக்குகளில் இருந்து தோல்வியை கண்டது.” என்றார்.

இதன்போது யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு மத்தியஸ்தம் வகித்த எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கும் காலித் மிஷால் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். 

இதன்போது அவர் ஈரானுக்கும் தனது நன்றியை தெரிவித்தார். ஈரான் தமது ஆயுத சக்தியை பலப்படுத்தியதாக மிஷால் குறிப்பிட்டார். “எகிப்து தேர்வு செய்த அதன் தைரியம் மிக்க தலைவர் மொஹமட் முர்சிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எகிப்து பொறுப்புடனும் பலஸ்தீன மக்களின் தேவைகளை புரிந்து கொண்டும் செயற்பட்டது” என அவர் கூறினார்.

இஸ்ரேல் - காசா யுத்த நிறுத்த உடன்படிக்கையின்படி காசாவுக்கு பொருட்களை கொண்டு செல்ல இஸ்ரேல் வாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. காசாவில் ஹமாஸ் அமைப்பு ஆட்சிக்கு வந்த பின் கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் அந்த பகுதி இஸ்ரேலினால் முடக்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிய உடன்படிக்கையின்படி காசா எல்லைக்கான அனைத்து வாயில்களும் திறக்கப்படும் என மிஷால் கூறியுள்ளார். எனினும் யுத்த நிறுத்தத்தை இஸ்ரேல் மீறுவது குறித்தும் காலித் மிஷால் எச்சரித்தார். “நீங்கள் உடன்பட்டால் நாமும் உடன்படுகிறோம். நீங்கள் உடன்படாவிட்டால் எமது கையில் ஆயுதம் இருக்கிறது. நாம் தொடர்ந்து ஆயுதங்களுடனேயே இருப்போம்” என்று மிஷால் கூறினார்.

சிரியா விவகாரத்தில் ஹமாஸ் அமைப்புக்கும் ஈரானுக்கும் இடையில் முரண்பாடு நிலவி வரும் நிலையிலேயே காலித் மிஷால் ஈரான் மீது நன்றி தெரிவித்தார். ஈரானின் பஜ்ர் 5 ரொக்கெட் மூலம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் வர்த்தக தலைநகரான டெல் அவிவ் மற்றும் ஜெரூசலம் வரை தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.