ஆ.ம. அகமது மீராசாஹிபு ஹாஜியார்
காத்தான்குடியின் மூத்த தலைவர் ஆ.ம. அகமது மீராசாஹிபு ஹாஜியார் அவர்கள் இன்று (04.11.2012) வபாத்தானார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்)
ஆ.ம. ஹாஜியார் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் இவர்கள் சமய, சமூக, அரசியல் துறைகளில் ஆழக் காற்பத்தித்துத் தொண்டு செய்த ஒருவர்.
காத்தான்குடி பட்டின சபையின் ஏழாம் வட்டார உறுப்பினராக நீண்ட காலம் பதவி வகித்து உள்ளூர் அரசியலில் பிரகாசித்தவர்.
காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாயலின் நிருவாகியாகவும், அதன் தலைவராகவும் பணியாற்றி அப்பள்ளிவாயலின் மூலம் இவ்வூரின் சமயத் துறைக்குப் பெரிதும் பங்களிப்புச் செய்தவர். அபள்ளிவாயலின் நிருவாக சபைத் தலைவராக இருந்த போதிலும், அப்பதவிக்கு அப்பால், அதன் ஊழியர் போன்று சேவகம் செய்தவர். தொழுகை வேளைகளில் “அதான்” சொல்வதில் அவர் முந்திக்கொள்வார். சுகவீனமுற்றுப் படுக்கையில் இருக்கும்வரை “அதான்” சொல்வதில் அவர் பெருவிருப்புடன் ஈடுபட்டார். பள்ளிவாயலிலேயே தனது நேரத்தின் பெரும்பகுதியைக் கழித்தார். அங்கு நடைபெறும் சகல நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு சிறப்பித்தார்.
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் உருவாகுவதற்கு முன்னின்று உழைத்தவர்களில் அவரும் ஒருவர். அதன் தலைவராக பல தடவைகளில் பதவி வகித்து சகல செயற்பாடுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் சகல செயற்பாடுகளிலும் ஆரம்ப காலந்தொட்டு ஈடுபட்டவர்.
காத்தான்குடியில் தஜ்வீத் கலாசாலை தோற்றம் பெறுவதற்கு காலாக அமைந்தவர் இவரே. மெத்தைப் பள்ளிவாயலின் நிருவாகத்தால் அக்கலாசாலை நடாத்தப்பட வேண்டும் என்று ஆலோசனை வழங்கி இன்றுவரை அது மிகச் சிறப்பாக செயற்பட வழிவகுத்தவர். குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்திச் சபையின் ஆரம்பகால உறுப்பினர். அதன் மூலம் நமது பிரதேச குர்ஆன் மத்ரஸாக்களின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்தவர்.
இவ்வூரில் ஏற்பட்ட அனர்த்தங்களின் பொழுதெல்லாம் மக்கள் துயர் துடைக்கப் பெரிதும் தொண்டாற்றினார். மார்க்கப் பிரச்சினைகள் ஏற்பட்ட வேலைகளிலும் அவற்றை சுமுகமாகத் தீர்த்து வைக்கத் தன்னால் முடிந்த பங்களிப்புக்களைச் செய்தார்.
அவர் தலைமை தாங்கி சம்மேளனத்தை வழிநடாத்திய காலகட்டத்தில் சில கசப்பான அனுபவங்களும் அவருக்குக் கிடைத்தன. அவற்றையெல்லாம் பொறுமையோடு சகித்து, துணிச்சலுடன் செயற்பட்டார். அவரது தலைமத்துவக் காலத்தில்தான் ஸகாத் சீரமைப்பு முயற்சி இடம்பெற்றது. இம்முயற்சியில் இரவுபகலாக ஈடுபட்டு உழைத்தார்.
இவ்வூரில் ஒரு பெரிய செல்வந்தராக இருந்தவர். எனினும் சுகபோக வாழ்க்கை மேற்கொள்ளாது மக்களோடு மக்களாக நின்று சமூகப்பணி செய்தார். பொதுவாக, இவ்வூரிலுள்ள சமய, சமூக, கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அவரது சேவையைப் பெற்றுள்ளன. விவசாயத் துறையில் ஆர்வத்துடன் ஈடுபட்டவர். வயலில் இறங்கி வேலை செய்தவர். அதனால், இலங்கை அரசாங்கத்தால் “விவசாய மன்னர்” பட்டம் வழங்கிக் கௌரவிப்பாட்டவர்.
இவ்வாறு பல்வேறு துறைகளில் பணியாற்றி 97வது வயதில் வபாத்தான ஆ.ம. ஹாஜியார் அவர்களது மறுவுலக ஈடேற்றத்திற்காகப் பிரார்த்திக்கின்றோம். அவரது தூய்மையான சமூகப்பணிகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக. அதற்குரிய நிரப்பமான கூலியை வழங்குவானாக. அவரது மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக. அதனைச் சுவர்க்கப் பூஞ்சோலையாக மாற்றி வைப்பானாக. ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை அன்னாருக்கு அருள்வானாக.
அவர்களது பிரிவால் துயரருறும் குடும்பத்தினர், உறவினர் போன்ற அனைவருக்கும் எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்னலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்.
ReplyDelete