Header Ads



ஒபாமாவுக்கு எதிரான பெண் தனது கணவரை பழி தீர்த்தார்..!


அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓட்டளிக்காததால், கணவன் மீது கார் ஏற்றினார் மனைவி. படுகாயம் அடைந்த கணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்தது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்ட ஒபாமா 2வது முறையாக வெற்றி பெற்றார். அரிசோனா மாநிலம் போனிக்ஸ் பகுதியில் வசிப்பவர் ஹாலி சாலமன் (28). இவர், குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட மிட் ரோம்னியின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. 

ஆனால், ஒபாமா வெற்றி பெற்றதால் வருத்தத்தில் இருந்தார். இந்நிலையில், ஹாலியின் கணவர் டேனியல் சாலமன் (36), கடந்த சனிக்கிழமை வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து ஹாலியும் டேனியலும் காரசாரமாக விவாதித்தனர். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இருவரும் வீட்டில் கார் நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்தனர். ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த ஹாலி, திடீரென காரை ஸ்டார்ட் செய்து கணவன் மீது மோத முயற்சித்தார். அதிர்ச்சி அடைந்த டேனியல் தப்பி ஓடினார். விளக்கு கம்பத்தின் மீது மறைந்து கொண்டார். 

ஆனால், காரை தாறுமாறாக ஓட்டிய ஹாலி, அவர் மீது மோதுவதிலேயே வெறியாக இருந்தார். வேறு வழியின்றி தெருவுக்கு ஓடினார் டேனியல். அப்போது காரை அவர் மீது வேகமாக மோதினார். இதில் காரின் அடியில் டேனியல் சிக்கி படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஹாலியை கைது செய்தனர். இதுகுறித்து கில்பர்ட் போலீஸ் நிலைய செய்தித் தொடர்பாளர் ஜெஸ்சி சேன்ஜெர் கூறுகையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் டேனியலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும் அவர் உயிர் பிழைத்து கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.