அமெரிக்க மாணவர்களின் அடையாள அட்டையில் 'மைக்ரோ சிப்'
அமெரிக்க பள்ளிகளில், மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறிய, அடையாள அட்டையில் பொருத்தப்பட்டுள்ள, "மைக்ரோ சிப்'க்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின், சில மாகாணங்களில் உள்ள பள்ளிகளில், அடையாள அட்டையில், "மைக்ரோ சிப்' பொருத்தப்பட்டு, ஜி.பி.எஸ்.,தொழில்நுட்ப முறைப்படி, மாணவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. வகுப்புகள் துவங்குவதற்கு முன்பாக, மணி அடித்த பிறகும், வராத மாணவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை அறிந்து, அதற்கேற்ப, அவர்களது வருகை பதிவேட்டில், "பிரசன்ட்' அல்லது, "ஆப்சென்ட்' போடப்படுகிறது.
கடந்த, 2005ம் ஆண்டே, கலிபோர்னியா மற்றும் ஹூஸ்டன் மாகாணங்களில், இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கடும் எதிர்ப்பால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில், இந்த திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. மாணவர்கள் கழிப்பறையில் இருந்தாலும், அவர்கள் சாப்பிடும் மதிய உணவில் என்னென்ன பதார்த்தங்கள் உள்ளன என்பதெல்லாம், "மைக்ரோ சிப்' மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. "இந்த நடைமுறையினால், எங்களது தனித்தன்மையை பாதிக்கிறது' என, ஆன்ட்ரியா என்ற மாணவி, கோர்ட்டில் மனு செய்துள்ளார். "பள்ளி நிர்வாகத்தின் இந்த நடைமுறை, கிறிஸ்துவ மதப்படி தவறானது' என, ஆன்ட்ரியாவின் பெற்றோரும், கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது: அடையாள அட்டையில் நாங்கள் பொருத்தியுள்ள, "மைக்ரோ சிப்' பள்ளி வளாகத்துக்குள் தான் வேலை செய்யும். அதற்கு மேல், மாணவர்களின் நடமாட்டத்தை அறிய வேண்டிய அவசியம், எங்களுக்கு இல்லை. ஆன்ட்ரியா சொல்வது போல, கழிப்பறையில் கூட, இந்த, "மைக்ரோ சிப்' சிஸ்டம் வேலை செய்வது சங்கடமாக இருந்தால், அடையாள அட்டையை கழற்றி வைத்துச் செல்லலாம்.
இவ்வாறு பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
Post a Comment