தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்களின் அடைவு மட்டம் தொடர்பான தேசிய மட்ட மதிப்பீடு
(எஸ்.எல். மன்சூர்)
இலங்கைப் பாடசாலைகளில் எட்டாம்தரத்தின் கல்வி தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்கு அவசியமான அபிவிருத்திசார் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் நோக்குடன் தேசிய மட்டத்திலான மதிப்பீடு நடைபெறவிருக்கின்றது. இது தொடர்பாக நாட்டிலுள்ள 441 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு கல்வியமைச்சின் அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டலின்கீழுள்ள உலக வங்கியின் உதவியுடனும், கொழும்பு பல்கலைக்கழக கல்விபீடத்திலுள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மதிப்பீட்டு நிலையம் (NEREC) ஊடாக இவ்வாணடு(2012) தரம் 8இல் கல்வி பயிலும் மாணவர்களின் அடைவு மட்டத்தை மதிப்பிடுவதற்கான பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 3,4,5 ஆகிய தினங்களில் மும்மொழிகளிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் அடிப்படையில் கிழக்கு மாகாணத்திலுள்ள சகல கல்வி வலயங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் தரம் 8இல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இது தொடர்பான பரீட்சை நடைபெறவிருகின்றது. கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சர்வதேச கணித சோதனை (TIMS) ஆகிய பாடங்களில் மாணவர் பெற்றுள்ள அடைவுமட்டங்களை அறிந்து கொள்ளும் நோக்குடன் இவ்வாய்வு நடாத்தப்படுகின்றது.
அத்துடன் இப்பரீட்சையுடன் சம்பந்தப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர் ஆகியோருக்குமான வினாக்கொத்துக்களும் சமர்ப்பிக்கப்பட்டு தகவல்கள் பெறப்படவுள்ளன. பெற்றுக் கொள்ளப்படவுள்ள அனைத்து தகவல்களையும் கொண்டு எதிர்காலத்தில் தரம் 8க்கான புதிய கல்விச்சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், கற்றல் கற்பித்தல் விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தவும் இவ்வாய்வு உதவியாக அமையும் என தேசிய கல்வி ஆய்வு மற்றும் மதிப்பீட்டு நிலையத்தின் பணிப்பாளரான பேராசிரியர் மா. கருணாநிதி தெரிவித்தார்.
இத் தேசிய மதிப்பீடு தொடர்பாக அக்கரைப்பற்று கல்வி வலயத்திலிருந்து நான்கு பாடாசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ள. அதில் அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள மின்ஹாஜ் மகாவித்தியாலயம், பாலமுனை அல்- ஹிதாயா வித்தியாலயமும் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இக்கடமைகளுக்கான இணைப்பாளர்களாக அக்கரைப்பற்று வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்களான எஸ்;.எல். மன்சூர், ஏ.எல். செய்னுதீன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு மேற்படி மதிப்பீட்டுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment