Header Ads



ஜனாஸா நிகழ்வில் ஆக்கிரமிப்பு இஸ்ரேல் வெறியாட்டம் - 5 பேர் வபாத், 20 பேர் காயம்


(Tn)

இஸ்ரேல் - காசா எல்லைப் பகுதியில் தொடரும் மோதல்களில் 6 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதில் காசா நகருக்கு அருகிலுள்ள ஷிஜையா பகுதியில் இறுதிக் கிரியை நிகழ்வொன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். பிறிதொரு வான் தாக்குதலில் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் பலியானதாக காசாவை ஆளும் ஹமாஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு தொடக்கம் காசா நகரில் இருந்து இஸ்ரேல் எல்லையோர நகரங்கள் மீது 50 க்கும் மேற்பட்ட ரொக்கெட் தாக்கதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் செய்திகள் குறிப்பிடுகின்றன. மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு சாதாரண குடி மக்களுக்கு பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதன்போது காசாவிலுள்ள பல்வேறு தளங்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. “இஸ்ரேல் பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கும் செயல்களுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படை தொடர்ந்து பொறுத்திருக்காது. இஸ்ரேல் தேசத்திற்கு எதிராக தீவிரவாதத்தை பயன்படுத்துபவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம்” என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் இஸ்ரேலின் நடவடிக் கைக்கு எதிராக தொடர்ந்தும் எறிகணை தாக்குதல் நடத்தப்படும் என ஹமாஸ் அமைப்பு எச்சரித்துள்ளது. “பொது மக்கள் இலக்கு வைக்கப்படுவது அபாயகரமான நடவடிக்கையாகும். அதனைப் பொறுத்திருக்க முடியாது. இஸ்ரேலின் குற்றச் செயல்களுக்கு எதிராக பதில் கொடுக்க எமக்கு முழு உரிமை உள்ளது” என ஹமாஸ் அமைப்பு ஏ.பி.செய்திச் சேவைக்கு கூறியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் - காசாவுக்கு இடையில் நீடித்த வன்முறைகளை தொடர்ந்தே நேற்று முன்தினம் இரு தரப்புக்கும் இடையிலான கடும் மோதல் ஆரம்பமானது. கடந்த வியாழக்கிழமை இஸ்ரேல் மற்றும் காசா இராணுவத்திற்கு இடையில் எல்லையில் ஏற்பட்ட மோதலின் போது 13 வயது பலஸ்தீன சிறுவன் கொல்லப்பட்டான். பின்னர் காசா - இஸ்ரேல் எல்லை வேலி பகுதியில் சுரங்கப்பாதை ஒன்று வெடிக்கச் செய்யப் பட்ட போது இஸ்ரேல் இராணுவ வீரர் ஒருவர் காயமடைந்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறியது. தவிர, கடந்த வாரத்தில் எல்லையில் ரோந்து சென்ற மூன்று இஸ்ரேல் இராணுவ வீரர்கள் குண்டு தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.

இதில் எல்லை ஓரத்தில் சுரங்கப்பாதைகள் தோண்டுவதை ஹமாஸ் அமைப்பு யுத்த தந்திரமாக பயன்படுத்தி வருவதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்த சுரங்கப்பாதையூடே இஸ்ரேல் படை வீரர்களை தூக்கிச் செல்ல அல்லது கொல்வதற்கு ஹமாஸ் செயற்படுவதாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் கூறினார்.

எனினும் சிறுவன் கொல்லப்பட்டதற்கு பதிலடியாகவே இஸ்ரேல் படை வீரர்கள் மீது குண்டு தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவான இஸ் அல்தின் கஸ்ஸாம் படை கூறியுள்ளது.

இதனிடையே வன்முறைகளில் ஈடுபடும் காசா பகுதி மீது கடுமையான தாக்குதலை தொடுக்க திட்டமிடப்பட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார். “எம்மீது நடத்தப்படும் தாக்குதலை பார்த்துக் கொண்டு இஸ்ரேல் அமைதியாக இருக்காது என்பதை உலகம் அறிந்து கொள்ள வேண்டும். எமது நடவடிக்கைக்கு நாம் தயாராகி வருகிறோம்” என்று நெதன்யாகு எச்சரித்தார். இஸ்ரேலின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடந்தது. அந்த கூட்டத்தின் போதே நெதன்யாகு இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

இஸ்ரேல் - காசாவுக்கு இடையில் தொடர்ச்சியாக எல்லைப் பகுதியில் 12 மணி நேர மோதல் நீடித்ததைத் தொடர்ந்தே நேற்று இஸ்ரேல் அமைச்சரவை கூடியது. இந்த மோதலில் இஸ்ரேல் இராணுவத்தினர் சென்ற ஜீப் வண்டி மீது காசாவிலிருந்து பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலிலேயே நான்கு இஸ்ரேல் இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர்.

“எமது கிராமங்கள், நகரங்கள் மீது நாள்தோறும் ரொக்கெட்டுகள் வந்து விழுந்தவண்ணம் உள்ளன. ஒரு ஜனநாயக நாட்டினால் அதனை தொடர்ந்து பொறுத்திருக்க முடியாது. இது இவ்வாறு தொடர்ந்தால் எமது மக்களை பாதுகாக்க நாம் பாரிய மற்றும் சக்தி வாய்ந்த தாக்குதல் ஒன்றை முன்னெடுக்க வேண்டி வரும்” என இஸ்ரேல் நிதி அமைச்சர் யுவல் இஸ்டெயினிட்ஸ் எச்சரித்துள்ளார்.

இதன் போது சனிக்கிழமை இரவு இஸ்ரேல் காசாவின் 7 இலக்குகள் மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஆயுதக் கிடங்கு, ஆயுத உற்பத்தி மையம் மற்றும் இரு ரொக்கெட் தாக்குதல் பகுதிகள் உள்ளடக்குவதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.

எனினும் இந்த தாக்குதல்களில் 32 பேர் காயமடைந்ததாக ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சர் அஷ்ரப் அல் குத்ரா கூறியுள்ளார். இதில் 10 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் குத்ரா கூறினார். இதில் 20 வயது மதார் அபூ அதா, 17 வயது மொஹமத் ஹராரா, 15 வயது அஹட் ஹராரா மற்றும் 18 வயது அஹமட் டர்சாவி ஆகிய சிவிலியன்கள் பலியாகியுள்ளனர்.

இதில் 2009 ஆம் ஆண்டு புதுவருட காலத்தில் காசா மீது இஸ்ரேல் 22 தீனங்கள் பாரிய தாக்குதல்களை நடத்தியது. இதில் 1,400 பலஸ்தீனர்களுக்கு மேல் கொல்லப்பட்டனர். அப்போது இஸ்ரேலில் பொதுத் தேர்தலுக்காக பிரசாரங்கள் இடம்பெற்று வந்த நிலையிலேயே அந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இஸ்ரேலில் எதிர்வரும் ஜனவரியில் மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளன. தற்போது 2009 ஆம் ஆண்டின் சூழலே இஸ்ரேலில் நிலவுவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.


No comments

Powered by Blogger.