'ஒபாமா கொல்லப்படலாம்' என எழுதியவரின் வேலை பறிபோனது
கலிபோர்னியாவில் உள்ள ஐஸ்கிரீம் பார்லரில் பணியாற்றுபவர் டெனிஸ் ஹெல்ம்ஸ் (வயது 24). அமெரிக்க அதிபராக ஒபாமா மீண்டும் பதவி ஏற்ற பின்னர், இவர் தனது டுவிட்டர் வலைப் பக்கத்தில் ஒபாமாவின் வெற்றி குறித்து தன் கருத்தை பதிவு செய்திருந்தார்.
அதில், ‘இன்னும் 4 ஆண்டுகளுக்கு அதிபராக பதவி வகிக்கும் காலத்தில் ஒபாமா கொல்லப்படலாம்’ என்று அவர் எழுதியிருந்தார்.
இந்த கருத்து, டுவிட்டரில் கணக்கு வைத்துள்ள பலருக்கிடையே பரிமாறப்பட்டது. எதிர் கருத்தாக ஆவேச குரல்களும், கண்டனக்கனைகளும் எழுந்தன. இந்த எதிர்ப்பை கண்டு மிரண்டுப்போன டெனிஸ், அந்த கருத்தை டுவிட்டரில் இருந்து நீக்கி விட்டார்.
ஆனால், அந்த கருத்தை ஏன் நீக்க நேர்ந்தது? என்பதற்கான புதிய விளக்கத்தை அவர் டுவிட்டரில் எழுதியுள்ளார்.
‘எனது கருத்து இவ்வளவு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. ஃபாக்ஸ் தொலைக்காட்சி எனது வீடு தேடி பேட்டி எடுக்க வந்து விட்டது. நான் மதவாதி என்றும் குறும்புக்காரி என்றும் சிலர் நினைக்கிறார்கள். என் மனதில் பட்ட கருத்தை நான் வெளியிட்டேன். ஒபாமாவை நானே கொல்லப் போகிறேன் என்று நான் கூறவில்லை. ஆனால், அப்படி சம்பவம் நடந்தால், அதற்காக நான் கவலைப்படப் போவதும் இல்லை’ என்று ஓர் புதிய தன்னிலை விளக்கத்தை அவர் டுவிட்டரில் மீண்டும் பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையில், அவர் வேலை பார்த்து வந்த ஐஸ்கிரீம் பார்லர் நிர்வாகம் அவரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
Post a Comment