Header Ads



13 ஐ பாதுகாக்க போராடுவோம் - அமைச்சர் ஹக்கீம் அறிவிப்பு



இந்த அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருக்கும் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச போன்றோர் கூறிவருவதைப் போல, அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள மாட்டாது எனவும், அவர்களது நிலைப்பாட்டிற்கு எதிரான அபிப்பிராயத்தை கொண்டுள்ள அரசாங்கத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் சிலர் கைகோர்த்துவருவதாகவும் அக் கட்சியின் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

காலியில், இஸ்லாமிய புத்தாண்டையொட்டி நடத்தப்பட்ட முஹர்ரம் போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற அலிப் மத்ரஸா மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவத்தில் செவ்வாய்க்கிழமை (27) மாலை நடைபெற்ற போது அதில்  பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். காலி, தலாபிடிய கோங்கஹ வீதியில் இந் நிகழ்வு இடம்பெற்றது. மத்ரஸாவின் அதிபர் மௌலவி சாகிர் ஹூசைன் இந் நிகழ்வுக்கு தலைமை தாங்கினார்.  

முன்னதாக காலி மல்ஹருஸூல்ஹியா தேசிய பாடசாலை பரிசளிப்பு விழாவிலும் அமைச்சர் ஹக்கீம் பிரதம அதிதியாக பங்குபற்றியதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், காலியில் 850 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள பாரிய நீதிமன்ற கட்டிடத் தொகுதி அமையவுள்ள இடத்தையும் நீதியமைச்சர் ஹக்கீம், பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி, பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானாயக்கார மற்றும் நீதியமைச்சின் பொறியியலாளர் ஆகியோரும் சென்று பார்வையிட்டார். 

காலியில் நடந்த இஸ்லாமிய புத்தாண்டு நிகழ்வில் உரையாற்றும் போது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,   

அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச ஆகியோர் கூறிவருவதைப் போல அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நீக்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதற்கு நாங்கள் கையுயர்த்தப் போவதில்லை.  

அதிகாரம் பண்முகப்படுத்தப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கத்திற்கும், பகிர்வுக்கும் ஊடாக கொழும்புக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த அதிகாரம்  மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய செயல்பாடு இந் நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு பயனளிககக் கூடியவாறு 13 ஆவது திருத்தத்திலே உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும், அது இந்தியாவின் தலையீட்டுடன் ஏற்படுத்தப்பட்டது என்ற காரணத்தினால் வேறு விமர்சனப் பார்வை இருந்து வருகின்றது. 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தவரை, பாராளுமன்றத்திற்கு உள்ளும் புறமும், 13ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறது. அதற்கான போராட்டத்தில் நாம் அரச தரப்பிலும் கட்சித் தலைவர்கள் சிலருடன் ஓர் உடன்பாட்டுடன் உள்ளோம். 

13 ஆவதுதிருத்தம் மேலும் வலுவூட்டப்பட வேண்டும் என்ற அபிப்பிராயம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் சிலரிடம் காணப்படுகின்றது. 

சம்பிக்க ரணவக்க, விமல் வீரவங்ச போன்றவர்கள் மட்டும் தான் இந்த அரசாங்கத்தில் உள்ள கட்சித் தலைவர்கள் அல்லர். அவர்களின் போக்கிற்கு மாற்றமான நிலைப்பாட்டை உடைய என்னைப் போன்ற  இன்னும் கட்சித் தலைவர்களும் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளனர். நாங்கள் அரசாங்கத்துக்குள்ளே அவ்வாறான ஒரு கூட்டை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறோம். 

இன்று நான் காலியில் கலந்துகொண்ட நிகழ்வுகளில் ஒரு புதிய பரிமாணத்தை காண்கின்றேன். நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம் மாணவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் தங்களுடைய கல்வியை சிங்கள மொழியில் பயின்றாலும் கூட, காலி நகர்புறத்திலே கூடுதலான முஸ்லிம மாணவர்கள் சிங்கள மொழியிலே கல்வி கற்பதை நான் பார்க்கிறேன். இங்கு அரங்கேறிய எல்லா நிகழ்வுகளிலும், குறிப்பாக துஆப் பிரார்த்தனை, சொற்பொழிவுகள் என்பனவற்றில் அநேகமானவை சிங்களத்தில் இடம்பெற்றதை நான் அவதானித்தேன். 

இதற்கு மேலாக இங்குள்ள மல்ஹருஸூல்ஹியா தேசிய பாடசாலை உட்பட ஏனைய பாடசாலைகளிலும் முஸ்லிம் மாணவர்கள் சிங்கள மொழியில் கல்வி கற்பதை காணக்கூடியதாக இருக்கிறது. தமிழ் மொழியில் படிப்பவர்கள் சிங்கள மொழியில் கற்பவர்களை விட குறைவாகவே உள்ளனர். ரிச்மண்ட், மஹிந்த, புனித அலோசியஸ் போன்ற கல்லூரிகளில் சிங்கள மொழியில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்கள் உள்ளனர். 

இதில் ஒரு பாதிப்பும் இருப்பதை நான் பார்க்கிறேன். சிங்கள மொழியை படிக்கத்தான் வேண்டும், ஆனால்,  கொழும்பு, கண்டி போன்ற மாவட்டங்களில் பல்கலைக்கழக அனுமதியில் ஆகக் கூடிய இஸட் புள்ளிகளை பெறவேண்டிய நிலை இருக்கும் பொழுது அடுத்தபடியாக காலி, மாத்தறை மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் பல்கலைக்கழக அனுமதிக்கு கூடுதல் புள்ளிகள் தேவைப்படுகின்றன. 

இத்தகைய சூழ்நிலையில் காலி, மாத்தறை போன்ற மாவட்டங்களிலிருந்து பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் தமிழ் மொழி மூல முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். அத்துடன், இம் மாவட்டங்களில் இருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்படும் சிங்கள மொழி மூல முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகும். 

எனவே, இந்த நாட்டில் மன்னார், முல்லைத்தீவு, மொனராகலை, அம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து தான் குறைந்த இஸட் புள்ளிகளைப்பெற்ற மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கிறார்கள். பின்தங்கியனவாக கருதப்படும் அந்த மாவட்டங்களை விட காலி மாத்தறை மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்படும் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை குறைவானது என்பது கவலைக்குரியதாகும். இவ்வாறு தமிழ் மொழி மூலக் கல்வி இப் பிரதேசங்களில் பாரதூரமான வீழ்ச்சியை அடைந்துள்ளது என்பதை புள்ளிவிபரங்களின் ஊடாக கண்கிறேன். ஆகையால் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் புதிய பரிமாணம் கண்டிப்பாக கவனத்தில் கொள்ளப்படவேண்டியதாகும். 

தமிழ் மொழிப் பாடசாலைக்கான கல்வி வலயம் முன்பிருந்து பின்னர் மாகாண சபைகள் நிறுவப்பட்டபோது பண்முகப்படுத்தலோடு இல்லாமல் போய்விட்டது.  

அத்துடன், ஆன்மீக ரீதியான ஒரு ஆழமான ஈடுபாட்டை தென் இலங்கையிலே குறிப்பாக காலி, வெலிகம, மாத்தறை பிரதேசங்களிலே அவதானிக்க முடிகிறது. அவ்வாறே ஆன்மீக ரீதியான முரண்பாடுகளையும் காண முடிகிறது. 

தரீக்காக்களின் செயல்பாடுகளின் ஊடாக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு விதமான ஆன்மீக விழிப்புணர்ச்சி ஏற்பட்டதை மறுக்க முடியாது. காலாகாலம் இந்த நிலை பேணப்பட்டு வந்திருக்கிறது. 

ஆன்மீக ஈடுபாடு, அதையொட்டிய கலாசார, பண்பாட்டு பாரம்பரியம் என்பன வரவேற்கத்தக்கதாக இருப்பதை இந்த சமூகத்தில் உள்ள பண்முகத் தன்மையின் வெளிபாடாக நான் பார்க்கிறேன். அந்தப் பண்முகத் தன்மையையும், ஆன்மீக ஈடுபாட்டையும் நாம் வளர்த்துக்கொள்ளும் அதேவேளையில் பாடசாலை கல்வியில் அண்மைக்காலமாக காணப்படும் வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கும் வழிவகைகளை தேட வேண்டும். இப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினரோடு ஒன்றிணைந்து முஸ்லிம் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான முயற்சிகளில் ஈடுபட உள்ளேன். 

காலி என்பது முஸ்லிம்களின் ஒரு பூர்வீகப் பூமி என்றால் மிகையாகாது. பஹ்ஜதுல் இப்ராஹிமீய்யா என்பது இலங்கையில் உள்ள ஆகப் பழமை வாய்ந்த அரபு மத்ரஸாவாக திகழ்கின்றது. நூறு வருடங்களையும் தாண்டி அது இன்னமும் உயிர்துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது. வெலிகமயில் அமைந்துள்ள மத்ரஸதுல் பாரி இன்னொரு பழைய மத்ரஸாவாகும். பொதுவாக இலங்கையில் ஏனைய பிரதேசங்களில் மத்ரஸாக்கள் தோற்றம் பெறுவதற்கு முன்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தென்மேற்கு கரையோரப் பிரதேசத்தில் தான் மத்ரஸாக்கள் காணப்பட்டன என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும். 

அத்துடன், இங்கு வாழும் பெண்களுக்கு அரபுத் தமிழில் கூடிய பரீட்சயம் இருக்கின்றது. அரபுத் தமிழில் தலைபாத்திஹா ஓதுவதற்கு இங்குள்ள பெண்களுக்கு தெரியும். அவ்வாறே ரபியுல் அவ்வல் மாதத்தில் முபாரக் மாலை இன்று ஏழு நாட்கள் நபிகள் நாயகம் (ஸல்) மீது புகழ்பாடும் வரலாற்று சுருக்கத்தை அரபுத் தமிழில் பாடுவோரும் இப் பிரதேசத்தில் உள்ளனர். 

தமிழ் மொழியை அரபு லிபியில் எழுதும் மொழி நடையே அரபுத் தமிழ் என்று அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் இது வழக்கிழந்து அருகிச் சென்றாலும் தென்மேற்கு இலங்கையில் அது இன்னமும் ஓரளவு புழக்கத்தில் இருப்பது மகிழ்ச்சிக்குரியது.

இவ்வாறு அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.  மௌலவி பிஷ்ருல் ஹாபியும் இந் நிகழ்வில் உரையாற்றினார்.   

டாக்டர். ஏ.ஆர்.ஏ.ஹபிஸ்
ஊடகச் செயலாளர்  








2 comments:

  1. கடைசிவரைக்கும் இதே முடிவுல இருப்பாராமா ?
    சும்மா வாய்க்கு வந்ததயல்லாம் பேசப்படாது

    ReplyDelete
  2. Mr. Hackeem Unga pechu ellam nambiya kaalam pochu Kadaisiyil nadappathu ellorukkum nanraha therium.
    Allah vai Bayathu kollungal.

    ReplyDelete

Powered by Blogger.