மியன்மார் முஸ்லிம்கள் சென்ற படகு ஆழ்கடலில் கவிழ்ந்தது - 135 பேர் காணாமல் போயினர்
மியான்மர் நாட்டில், பூர்வீக குடிமக்களுக்கும், வங்காள தேசத்தில் இருந்த சென்ற குடியேறியவர்களுக்கும் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. குடியேறிய வங்காள தேசத்தினர் தங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
சமீபத்தில் வங்காள தேசத்தினருக்கு எதிராக தொடங்கிய கலவரத்தில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். நிறைய சொத்துக்கள் சூறையாடப்பட்டன. உயிருக்கு அஞ்சிய மக்கள் மலேசியாவில் தஞ்சம் அடைகின்றனர். வங்காள தேசத்துக்கும் தப்பி வருகின்றனர்.
அகதிகள் முகாம்களில் தங்கி இருப்பவர்களும் கள்ளத்தனமாக படகுகள் மூலம் தப்பி, விரும்பிய நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். ரோஹிங்கியா முகாமில் தங்கி இருந்த முஸ்லிம்களில் 135 பேர், மலேசியாவுக்கு தப்பிச் செல்ல ஒரு படகில் புறப்பட்டனர்.
வங்காளதேச கடலில் சென்று கொண்டிருந்த போது, அந்த படகு பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. அனைவரும் ஆழ்கடலில் மூழ்கினர். அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள், கடலில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
படகோட்டி உள்பட 6 பேரை மட்டுமே உயிரோடு மீட்க முடிந்தது. மீதமுள்ள 130 பேரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணியில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கடலோர காவல் படையினரும், உடல்கள் கரையில் ஒதுங்கி கிடக்கின்றனவா? என்று தேடுகின்றனர்.
சட்ட விரோதமாக அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றி வந்ததே, படகு விபத்துக்கு காரணம் என்று, வங்காளதேச போலீஸ் அதிகாரி முகம்மது பர்காத் குற்றம் சாட்டினார்.
Post a Comment