இலங்கை 110 பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, 100 பரிந்துரைகளை நிராகரித்தது
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பூகோள கால மீளாய்வு அமர்வில் இந்தியா, பெனின், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் இணைந்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள 100 பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
கடந்த 1ம் நாள் நடைபெற்ற விவாத்தின் போது 99 நாடுகளும் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில், இந்த மூன்று நாடுகளும் இணைந்து 210 பரிந்துரைகள் அடங்கிய தீர்மான அறிக்கையை இன்று சமர்ப்பித்திருந்தன.
இந்த அறிக்கையை ஐ.நாவுக்காக ஸ்பெய்ன் தூதுவர் சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையின் 110 பரிந்துரைகளை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், 100 பரிந்துரைகளை நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை இலங்கை விபரித்துள்ளது.
அதேவேளை, பூகோள கால மீளாய்வுக் கூட்டம் குறிப்பிட்டதொரு நாட்டை இலக்கு வைத்து செயற்படுவதாகவும், இந்த நடைமுறைகள் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பிளவை ஏற்படுத்த முனைவதாகவும் கியூபா, சீனா, ரஸ்யா ஆகிய நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
இந்தத் தீர்மானத்துக்குப் பதிலளித்து உரையாற்றிய அமைச்சர் மகிந்த சமரசிங்க, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் செயலகத்துக்கு இரண்டு வாரங்களுக்குள் தனது உறுதிமொழிகளை அனுப்பும் என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment