''அராஜக தீர்ப்பு'' - 10 வயது பலஸ்தீன சிறுவனை குறிபார்த்து சுட்டவன் விடுதலை
கடந்த செவ்வாய்க்கிழமை (30/10/2012) 10 வயதுப் பலஸ்தீன் சிறுவனைப் படுகொலை செய்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைச் சிப்பாய்க்கு இஸ்ரேலிய வழக்கு மன்றம் நிரபராதி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2008 ஆம் ஆண்டு ரமல்லா நகரை அடுத்துள்ள நிளின் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் சட்டவிரோதமாக எழுப்பிய பிரிவினைச் சுவருக்கு சாத்வீகமாக எதிர்ப்புத் தெரிவித்து அமைதிப் பேரணியில் கலந்துகொண்டனர்.
அப்பேரணியினரைக் கலைக்குமுகமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது. அதன்போது அஹ்மத் மூஸா எனும் 10 வயதுச் சிறுவனின் தலையைக் குறிவைத்து மேற்படி இராணுவச் சிப்பாய் இரண்டு முறை துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், அச்சிறுவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்தான்.
தனது உயிருக்கு எத்தகைய அச்சுறுத்தலும் அற்ற நிலையிலும் சிறுவன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இஸ்ரேலிய இராணுவச் சிப்பாய் மீது வழக்குப் பதிவாகி இருந்தது. பல்வேறு தவணைகளுக்குப் பின் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற விசாரணையின்போது, "குறித்த சிப்பாயின் துப்பாக்கிப் பிரயோகத்தினால்தான் சிறுவன் கொல்லப்பட்டான் என்பதற்குப் போதிய சான்று இல்லை என்பதால், குற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதி" என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தான் அமைதிப் பேரணியினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக குறித்த இராணுவச் சிப்பாய் வாக்குமூலம் வழங்கியிருந்த நிலையிலும் இப்படி அநீதியான தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதையிட்டு குழந்தையைப் பறிகொடுத்த குடும்பத்தினர் உள்ளிட்ட பலஸ்தீனர்கள் பெரும் மனக்கொதிப்புக்கு ஆளாகியுள்ளனர். inneram
Post a Comment