10 ஆண்டுகளுக்கு முன் உறைய வைக்கப்பட்ட விந்தணு மூலம் இரட்டை குழந்தைகள்
பிரேசில் நாட்டின் சாவ்பாவ்லோ என்ற இடத்தை சேர்ந்தவர் 61 வயது ஆன்டோனியா ஆஸ்ட்டி. இவரது கணவர் ஜோஸ். இவருக்கு வயது 55. இந்தத் தம்பதியர் திருமணமாகி கடந்த 30 ஆண்டுகளாக ஒரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று போராடினார்கள். இவர்களுக்கு இயற்கையாக குழந்தைப்பேறு வாய்க்கவே இல்லை. ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம் என நினைத்தால் அதுவும் மறுக்கப்பட்டது. காரணம் அவர்களின் முதுமை.
இந்நிலையில் செயற்கை முறையில் குழந்தைப்பேறு அடைய முடிவு எடுத்தனர். ஆஸ்ட்டி முதல்முறையாக 10 ஆண்டுகளுக்கு முன்பாக இதற்காக முயற்சி எடுத்தார். ஆனால் பலன் இல்லை. இரண்டாவது, மூன்றாவது முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இப்போது 4-வது முறையாக, 10 ஆண்டுகளுக்கு முன் உறைய வைக்கப்பட்ட விந்தணுக்கள், சினை முட்டையை இணைத்து டாக்டர்கள் செயற்கை முறையில் கருத்தரிக்க செய்து, அதை ஆஸ்ட்டியின் கருப்பையில் வைத்தனர். இப்போது பிரசவித்துள்ள ஆஸ்டி, ஒரு ஆண் குழந்தையையும், ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். மகனுக்கு ராபர்ட்டோ என்றும், மகளுக்கு சோபியா என்றும் பெயரிட்டு மகிழ்கிறார் இவர்.
Post a Comment