Header Ads



கொழும்பில் வடக்கு முஸ்லிம்களின் சிறை வாழ்க்கை..! (ஒரு நேரடி ரிப்போர்ட்)



(பஷீர் அலி)

''இந்தக் கேம்ப்ல இருந்து வந்த தல தெறிச்சதுகள்தான் இந்தக் காரியத்த பண்ணியிருக்கும் என்று எல்லாக் குற்றங்களையும் எங்கட தலையிலயே அள்ளிப் போடுறாங்க. எங்களுக்கு இங்க இருக்கேலா இங்கிருந்து வெளியேறணும்''

அகதி முத்திரை குத்தப்பட்டு புறக்கணிப்புக்குள்ளாகியுள்ள ஓர் இடம் கொழும்பில் இருக்கின்றமையைக் கேள்வியுற்று சென்று பார்த்தபோது தலை சுற்றிப்போனது!

புலிப் பாசிசத்தின் உச்சகட்ட கொடுமை அரங்கேறிய வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் எச்சங்கள் புத்தளம், நீர்கொழும்பு, குருனாகல் எனப் பரவிக் கிடக்க, தலைநகர் கொழும்பில் மனித இனமாகவே மதிக்கப்படாதளவு ஒதுக்கப்பட்டு ஒரு கிராமம் இருப்பதைப் பார்த்தபோது நெஞ்சு முட்டிய சோகத்தைத் தவிர்க்க முடியவில்லை.

1990இல் புலிகளின் பலவந்த வெளியேற்ற அறிவித்தலோடு வடக்கு முஸ்லிம்கள் உடுத்த உடையுடன் வெளியேறுகிறார்கள். புத்தளம் மாவட்டத்தில் பெரும்பாலானோர் தங்கிவிட, நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக சிதறிச் செல்கிறார்கள்.

தலைநகர் கொழும்பில் வாழைத்தோட்டம், புதுக்டை, மாளிகாவத்தை, பஞ்சிகாவத்தை, வெள்ளவத்தை போன்ற இடங்களில் சில குடும்பங்கள் தஞ்சம் புகுகின்றன.

இப்பிரதேசங்களை சேர்ந்த 200 குடும்பங்களை ஒன்றாக சேர்த்து கொழும்பு 15, முகத்துவாரத்திலுள்ள காக்காதீவு என்ற இடத்தில் ஒரு அகதி முகாம் உருவாகிறது. அந்த அகதிக் கிராமத்தின் கவனம் இரு தசாப்தங்கள் கடந்தும் இன்னும் தொடர்வதும் அது பற்றி வெளிஉலகுக்குத் தெரியாமல் இருப்பதும்தான் பரிதாபத்துக்குரிய கதை!

அரச நிறுவனங்கள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மாளிகைகளும் ஆடம்பர தனியார் குடியிருப்புக்களும் கம்பீரமாய் நிற்கின்றன. மட்டக்குழி முகத்துவாரம் கடற்கரை முன்றலை ஊடறுத்துச் செல்லும்போது காக்காதீவின் பலகை வீடுகள் எம்மை வரவேற்கின்றன. மழைத்துளிகள் விழுந்தாலும் வெள்ளம் எடுத்துவிடும் நிலையில் பள்ளக் காணி ஒன்றில் நூறு குடும்பங்களுக்குத் தீப்பெட்டி அளவுகளில் அமைக்கப்பட்ட குடியிருப்புகள்.

ஆண்களுக்கு நான்கு பெண்களுக்கு நான்கு  என 8 பொதுக் கழிவறைகள். குளித்து உடைகள் துவைத்துக் கொள்ள இரு குளியலறைகள். பக்கத்து மாடி வீடுகளின் கழிவுகள் வந்து விழப் போதுமாக சிறு சிறு இடைவெளிகளைத் தவிர வேறு இடைவெளிகள் இல்லாத பலகைகளிலான ஒற்றைச் சுவருடன் கூடிய கோச்சிப் பெட்டி போன்ற தொடர் குடியிருப்புகள். 

சூரியனையே வீட்டுக்குள் அழைத்து உட்கார வைக்கும் தகரக் கூரைகள். வெக்கை தாங்கவும் முடியவில்லை வெளியில் தூங்கவும் இடமில்லை என்ற திறந்த வெளிச் சிறைக்குள் சிக்கித் தவிக்கும் அந்த நூறு குடும்பங்களின் கண்ணீர்க் கதைகளைக் கொஞ்சம் கேளுங்கள்.

தொண்னூறாம் ஆண்டு புலிகளால் வெளியேற்றப்பட்ட நாங்கள் கொழும்புக்கு வந்து சேர்ந்தோம். ஆங்காங்கே சிதரிக் கிடந்த எங்களை ஓரே இடத்தில் குடியமர்த்த முன்னாள் எம்.பி. அபூபக்கர் நடவடிக்கை எடுத்தார்.

1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் பாடசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்ட கொழும்பு 15, முகத்துவாரம் காக்காதீவில் உள்ள சதுப்பு நிலக் காணி ஒன்று, அங்கு பாடசாலை நிர்மாணிப்பதற்கான சாத்தியமே இல்லை என்ற காரணத்தினால் கைவிடப்பட்டிருந்தது. அக்காணியிலேயே நாம் குடியமர்த்தப்பட்டோம்.

நாம் இங்கு வரும்போது இது சதுப்பு நிலமாகவும் பாம்புகள் நிறைந்த பற்றைக் காடாகவும் பார்ப்பதற்குப் பயங்கரமாகக் காணப்பட்டது.

மனிதன் வசிப்பதற்கான எந்த அடிப்படை வசதியும் இங்கு இருக்கவில்லை. ஆனாலும், சொத்து செல்வங்களை இழந்து வெறுங் கையோடு வந்திருந்த எங்களுக்கு வேறு தெரிவு எதுவும் இருக்கவில்லை. 

தற்காலிகமாக சிறிது காலம் இருந்து விட்டு எமது தாயகத்தில் மீள்குடியேறிவிடலாம் என எண்ணியிருந்தோம். ஆனால், இந்த அசௌகரியமான சூழலிலேயே 22 வருடங்களைக் கழித்து விட்டோம்.

அந்தக் காலப் பகுதிக்குள் பல அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சி செய்துவிட்டன. ஆனால், எங்கள் தலையெழுத்துத்தான் மாறவே இல்லை. ஆரம்பத்தில் 200 குடும்பங்கள் இந்த முகாமில் இருந்தோம். அவற்றில் 100 குடும்பங்கள் வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டன.

தற்போது 100 குடும்பங்கள் இங்கு எஞ்சியிருக்கின்றன. எங்களுக்கு வேறு பிரதேசத்திற்கு செல்வதற்கான எந்த வசதியும் ஆதாரமும் இல்லை இப்படிச் சொல்கிறார் 42 வயதான ஹஸன்.

சுற்றி வர மதிலமைத்து பெரிய வாயிற் கதவு ஒன்றைப் போட்டு அதற்குள் சிலரை அடைத்து வைத்து குறிப்பிட்ட நேரத்துக்கே உள்ளே வரவும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படும் ஒரு நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதுவெல்லாம் மன்னர் காலத்துக்கு முற்பட்ட அடிமைத்துவ சமூகத்தின் செயல் என்றுதானே சொல்வீர்கள்! ஆனால், இந்த காக்காதீவு முகாம் மக்களை ஆரம்பத்தில் இப்பிரதேத்தைச் சேர்ந்த சில அடிவருடிகள் அப்படி அடிமைகள் போன்று நடத்திய சம்பவம் கேள்வியுற்றபோது இதயம் ஒரு தடவை ஆடிப் போனது.

அகதிகளுக்கு வருகின்ற நிவாரணங்களைத் தம் வீடுகளில் இறக்கி எடுத்து வயிறு வளர்த்து அம்மக்களை அடிமைகள் போல் நடத்திய காட்டாட்சி அனுபவம் குறித்து யாராவது கேள்விப்பட்டீர்களா? வெளியுலகத்துக்குதான் இந்த விடயம் தெரியுமா?

'கேம்ப்' பிள்ளைகள் என்ற காரணத்துக்காகக் கூப்பிட்டு வேலை வாங்குவதும் பாடசாலையில் எந்த மாணவன் குற்றம் செய்தாலும் இந்தத் தலை தெறித்ததுகள்தான் செய்திருக்கும் என மாணவர்களின் தலையில் அள்ளிப் போடும் அநியாயம் குறித்து எந்த மனித உரிமை அமைப்பாவது வாய்திறக்கிறதா? குறைந்தபட்சம் இப்படியோர் அநியாயம் தலைநகரிலேயே நடக்கிறது என்று எந்தவோர் அமைப்புக்காவது தெரியுமா? 

யுத்தம் இருக்கும்வரை வருடா வருடம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கிவந்த செஞ்சிலுவைச் சங்கமும் யுத்தம் முடிந்த கையோடு அதையும் நிறுத்திக் கொண்டது. எங்களால் படிக்கக்கூடியளவு வசதிகள் எதுவும் இல்லை. வீட்டு சூழலும் இல்லை ஒரு சிறிய அறையும் சமையலறையும் மட்டுமே உள்ள இந்த பலகை வீடுகளில் எப்படிப் படிக்க முடியும் என வருந்துகிறார்கள் அங்குள்ள சின்னஞ் சிறார்கள்.

நூறு குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் தமது வெளித் தேவைகளுக்காகப் பயன்படுத்த 4 பொது மலசல கூடங்களே காணப்படுகின்றன. இரவு வேளைகளில் இயற்கைத் தேவைக்கு செல்ல பெண்களுக்கு முடிவதில்லை. சந்தேகங்களும் பிரச்சினைகளும் கலாசார சீரழிவுகளும் நடக்க இது காரணமாக அமைகிறது. வெளியில் சொல்வதற்கு வெட்கமாய் இருக்கும் ஆயிரம் கலாசார சீரழிவுகள் இந்த நெருக்கடி நிலையால் உருவாகியிருக்கிறது என இங்குள்ள பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த முகாமில் உள்ளவர்களுக்கு கொழும்பில் வாக்குரிமையோ வேறு பதிவுகளோ இல்லாததினால் அவர்களால் பல விடயங்களை இழக்க நேரிடுகிறது. இங்கு வாக்குப் பதிவுகள் இருந்தாலாவது, இங்குள்ள அரசியல்வாதிகளினூடாகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதற்கான எந்தவோர் ஏற்பாடும் இல்லை. யாழ்ப்பாணத்தில் ஏதாவது தேர்தல் நடந்தால் பஸ்களில் வந்து ஏற்றிக் கொண்டு புள்ளடிகளை வாங்கிவிட்டு கொண்டுவந்து நடுத் தெருவில் இறக்கிவிடுகிறார்களாம்.

இங்குள்ள மொத்த 400 வாக்காளர்களில் பலரின் பெயர்கள் வெட்டப்பட்டு 70 வாக்காளர் அட்டைகள் மட்டுமே கடைசியாகக் கிடைத்தாக முறையிடுகிறார் இங்குள்ள ஒருவர். தமது தேவைகள் குறித்து சந்திக்கச் சென்றால் இங்குள்ள கிராம சேவகர் கடுமையான வார்த்தைகளினால் அவமதிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சில என்.ஜி.ஓ.க்களும் சமூகத் தலைமைகள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்பவர்களும் இந்த அகதி மக்களை விற்று, வயிறு வளர்த்து, மாளிகைகளைக் கட்டிய சகப்பான சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. அதனால் இவ்வாறான பல அமைப்பினர் மீதும் தனிநபர்கள் மீதும் இம்மக்கள் கடுப்புடனேயே இருப்பது தெரிகிறது.

இங்குள்ள பொரும்பாலானவர்கள் பயண பேக் தயாரித்தல், ஆட்டோ ரெக்ஸின் தைத்தல் குஷன் தைத்தல் போன்ற கைத்தொழில்களையே செய்து வருகின்றனர். ஒரு சிலர் சொந்த முதலீட்டில் தமது வீட்டிலேயே சிறிய அளவில் இத் தொழிலை செய்கின்றனர். இதற்கு வாய்ப்பில்லாத பல இளைஞர்கள் வெளி நிறுவனங்களுக்குச் சென்று இத் தொழிற்துறையில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் இங்கிருந்து சென்றாலோ சொந்த ஊரில் மீள்குடியேறினாலோ அங்கு குறித்த இத்தொழிலுக்கான சந்தை இன்றி பெரிதும் பாதிக்கப்பட நேரிடும் என அஞ்சுகிறார்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்தபோது மேற்குறித்த தொழிற்துறைகளில் தாமே கால்பதித்திருந்தாகவும் இப்போது இத் தொழில்களை அங்குள்ள தமிழர்கள் செய்து வருவதினால் தமக்கு அங்கு தொழில் செய்ய வாய்ப்பு அற்றுப் போயுள்ளதாகவும் இத்தொழிலில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.

மேலும், வெளியேற்றத்துக்கு முன்னர் இவர்கள் தொழில் செய்துவந்த இடங்கள் இன்று அபிவிருத்தி செய்யப்பட்டு பாரிய வியாபாரத் தலங்களாக விருத்தி செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த இடங்ககளில் மீண்டும் தொழிற்துறையை ஆரம்பிக்க வேண்டுமானால் பல இலட்சம் ரூபாய்களை முதலீடு செய்தே அந்த வியாபாரத் தலங்களை வாடகைக்குப் பெற வேண்டும். இது இம்மக்களின் தற்போதைய பொருளாதார நிலையில் எட்டாக்கனிதான்.

இங்குள்ள பெரும்பாலான குடும்பங்கள் ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் வாடகை வீடுகளிலேயே குடியிருந்துள்ளனர். வெளியேற்றத்தின் பின்னர் கடந்த வருட சமாதானத் காலங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான இந்த இடங்கள் விற்கப்பட்டு விட்டன. அதனால் மீண்டும் அந்த இடங்களில் அவர்களால் குடியேற முடியாதுள்ளது. சொந்த இடமும் இன்றி ஏற்கனவே இருந்த தற்காலிக இடங்களும் கைமாறிப் போயுள்ள இந்த சவால்மிக்க மீள்குடியேற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் அம்மக்கள் இல்லை.

எனவே, மீள்குடியேற்றம், தொழில் ஏற்பாடுகள், உட்கட்டமைப்பு வசதிகள், இருப்பு ஏற்பாடு என்று வடக்கு முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பொதுப்படையான சில விடயங்கள் இவர்களுக்கும் பொருந்தும். ஆனாலும் இந்த முகாமில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே காணி அற்றNh என்பது நோக்கப்பட வேண்டியதாகும்.

இந்த முகாம்கள் எதிர்நோக்கும் மிகப் பெரிய பிரச்சினைதான் புத்தளம் உட்பட ஏனைய பிரதேச வடக்கு அகதிகள் போலன்றி இவர்கள் அடையாளம் காணப்படாமையாகும்.

இதனால் இவர்களது நெருக்கடி மிக்க வாழ்க்கைநிலை வெளி உலகுக்குத் தெரியாமல் இருப்பது ஒருபுறமிருக்க, ஏனைய பிரதேச அகதிகளுக்குக் கிடைப்பது போன்ற வாழ்வாதார உதவிகளும் இவர்களைச் சென்றடைவதில்லை.

1990ஆம் ஆண்டிலிருந்து 5 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு மாதாந்தம் வெறுமனே 1130 ரூபாவுக்கான வாழ்வாதார உதவியே அரசாங்கத்தால் வழங்கப்பட்டு வந்துள்ளது. யுத்தம் முடிவடைந்தவுடன் அந்த ஷபொகட் மணி|க்கும் மண் விழுந்திருக்கிறது.

5 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கான அனைத்து வகைச் செலவுக்கும் குறைந்தது ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாவாவது தேவை என்றிருக்கும் இன்றைய நாட்களில் மாதாந்தம் ஆயிரம் ரூபாவால் என்னதான் செய்துவிட முடியு? ஆனால் அதில் கூட மண் விழுந்திருப்பது இம்மக்களை இன்னும் நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது.

எனவே, வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு உள்ள பொதுவான பிரச்சினைகளுடன் இந்த முகாம் மக்களின் பிரச்சினைகள் தனித்துவமாகப் பேசப்பட வேண்டும். தவிர, தற்போதைக்கு இம்முகாம் மக்கள் கண்டு கொள்ளப்படாத சவால்கள் வெளி உலகுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

ஏனென்றால் கொழும்பிலுள்ள நிரந்தரக் குடியுரிமை கொண்ட சேரிப்புற மக்களின் இருப்பே இன்று கேள்விக்குறியாகியிருக்கிறது. 

ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்றப் போவதாகச் சொல்லிக் கொண்டு கொழும்பிலுள்ள சேரிப்புற குடியிருப்புக்களை அகற்றிவிட்டு அவ்விடங்களை கசினோ தளங்களாகவும் உல்லாச ஹோட்டல்களாகவும் மாற்றிக் கொண்டிருக்கிறது அரசாங்கம். நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கே இந்த நிலை என்றால், எந்த உத்தரவாதமும் வழங்கப்படாத இந்த ஷபுறம் போக்கு| நிலக் குடியிருப்பாளர்களின் எதிர்காலத்துக்கு என்ன உத்தரவாதம்?

எனவே, முறைப்படியான மீள்குடியேற்றம் நடக்கும் வரை நெருக்கடியான இந்த முகாம் குடியிருப்புகளுக்கு தற்காலிகத் தீர்வு வழங்கப்பட வேண்டும்.

இங்குள்ள மாணவர்களின் கற்றல் நடவடிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும்.

புலிகள் ஆடிய தாண்டவத்தின் எச்சங்களான இம்மக்களின் பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட வேண்டும். 

இதுவெல்லாம் நடக்காமல், மெனிக்பாம் முகாமை மூடிவிட்டு அகதிகள் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக சட்டைக் கொலரை உயர்த்திக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.


2 comments:

  1. .........ALLAHU AKBAR........

    ReplyDelete
  2. தேர்தல் காலங்களில் கொழும்பிலிருந்து போய் கிழக்கு மாகாணங்களில் வாய் பிழக்க கத்திக் கொண்டு திரியும் முஸ்லிம் அரசியில் வாதிகள்......இது விடயத்தில் என்ன செய்திருக்கின்றார்கள்????

    ReplyDelete

Powered by Blogger.