Header Ads



திவிநெகுமே சட்டமூல ஆதரவு பிரச்சாரத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் (படங்கள்)


(சௌஜீர் ஏ முகைடீன்)

அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செயற்படவுள்ளேன். கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அமைச்சரவையிலே ஒரு தமிழ் மகன் அமைச்சராக நியமிக்கப்படவில்லை அந்தக் குறையினை என்னால் நிவர்த்தி செய்ய முடியும். தமிழ் மக்களுக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றனவோ அவைகளை அறிந்து எல்லாவற்றையும் நிறைவேற்ற காத்திருக்கின்றேன் என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். 

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகம் ஏற்பாடு செய்திருந்த திவிநெகும அறிவூட்டல் கருத்தரங்கு கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளரும் முன்னால் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருமாகிய ஏ.ஏ.அசீஸ் தலைமையில் அம்பாறை நகரசபை மண்டபத்தில் இன்று  திங்கட்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்வைபவத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா, மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், கல்முனை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், அக்கரைப்பற்று முதல்வர் சக்கி அதாவுள்ளா, உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.   

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கு திவிநெகும மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் திருத்தச் சட்டம் தொடர்பாக தெளிவூட்டும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,

 இந்த கிழக்கு மாகாணத்திலே ஓடுகின்ற  இரத்த ஆறு இப்போதுதான் எமது ஜனாதிபதியினால் 2009ம் ஆண்டு நிறைவுக்கு கொண்டுவரப் பட்டிருக்கின்றது. அதன் பின்புதான் அபிவிருத்திப் பணிகள் இங்கு நடை பெறுகின்றது என்பதை நான் சுட்டிக்காட்ட வேண்டும். ஆகவே எங்களுக்கு ஒரு பாரிய பொறுப்பு இருக்கின்றது. நாங்கள் மக்களின் சேவகர்கள். மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு சேவைசெய்வது எமது கடமை என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் ஒருபோதும் எஜமானர்கள் என்ற எண்ணத்தில் இருக்கக் கூடாது. 

உங்களுக்கு தெரியும் கடந்த 1978ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த விகிதாசார பிரதி நிதித்துவத்தின் மூலமாக இந்த உள்ளூராட்சி மன்றங்களில் மட்டுமல்ல மாகாண சபைகளிலே பாராளு மன்றத்திலே இந்த தேர்தல் முறையிலே பல மாற்றங்களும் பல அசௌகரியங்களும்  எங்களுக்கு ஏற்பட்டதை நாங்கள் அறிவோம். இதன் மூலமாகத்தான் உள்ளூராட்சி சபைகள் முன்பு மக்களோடு ஒன்றாக அன்னியோன்னியமாக இருந்த அந்த தலைவர்கள் இன்று பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியில் ஒவ்வொரு அங்கத்தவர்களும் தாங்கள் மற்றயவர்களை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற அளவுக்கு இந்த தேர்தல் முறை இருக்கின்றது. 

ஏனென்றால் ஒரு பிரதேச சபை தேர்தலை எடுத்துக்கொண்டால் அந்தப் பிரதேசம் முழுவதும் ஒரு அங்கத்தவர் சென்று பாடு பாடவேண்டும். ஆனால் முன்னைய காலங்களிலே அந்த வட்டார தேர்தல் முறையின் மூலமாக அந்த வட்டாரத்திலே உள்ள மக்களின் தேவைகளை அந்த அங்கத்தவர் கவனிக்கின்றபோது அந்த வட்டாரத்திலே யாரை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று மக்களுக்கு சேவை செய்கின்றவர்களை நல்லவர்களை அன்று அந்த மக்கள் தெரிவு செய்தார்கள். வட்டார தேர்தல் முறை மூலமாக பல கோடிக்கணக்கான பணங்களை செலவு செய்ய வேண்டிய தேவைப்பாடு இல்லை. அந்த மக்களுக்கு சேவை செய்கின்றவர்கள் நிச்சயமாக இந்த புதிய தேர்தல் முறை மூலமாக  தெரிவு செய்யப்படுவார்கள். 

இதன் காரணமாகத்தான் ஜனாதிபதி அவர்களும்  அமைச்சரவையும் ஒன்று சேர்ந்து இந்த முறையை மாற்றி அமைத்து மக்களுக்கு  சேவை செய்யக் கூடிய அந்த பழைய முறைப்படி இந்த தேர்தல் முறையை  மாற்றி அமைக்க வேண்டும் என்ற ஏற்பாட்டின் படிதான் இந்த உள்ளூராட்சி திருத்த சட்ட மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆகவே இந்த தேர்தல் திருத்தம்  காலத்தின் தேவையாக இருக்கின்றது. இன்று இத்தேர்தல் முறை உள்ளூராட்சி சபைகளில் மட்டு மல்ல மாகாண சபைகளுக்கும் பாராளு மன்றத்திற்கும் விகிதாசார பிரதிநிதித்துவம் இல்லாது ஒழிக்கப்பட்டு தொகுதிவாரியான முறை அமுல் படுத்தப்பட்டால் இந்த நாட்டிலே  அமைதியும் சுபீட்சமும் ஏற்படும் என்று நான் என்னுகின்றேன்.  

ஆகவே தான் இந்த திருத்தம் மிக முக்கியமானது. இன்றைய ஜனாதிபதி அவர்களின் அனுசரணையோடு எமது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் திவிநெகும என்ற திட்டத்தை இந்த நாட்டிலே அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் அடிப்படையிலே நிச்சயமாக வறுமை ஒழிப்பு திட்டத்தை​ நாங்கள் வெற்றிபெற முடியும் என்ற வகையிலேதான் இத்திட்டத்திற்கு கிழக்கு மாகாண சபையிலே நாங்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளோம். 

மூவின மக்களும் வாழ்கின்ற இந்த கிழக்கு மாகாணத்திலே எல்லோரும் ஒன்றுபட்டு சாதி,சமய,கட்சி வேறுபாடு இல்லாது நாங்கள் ஒன்று சேர்ந்து கிழக்கு மாகாணத்தை கட்டி எழுப்ப பாடு படவேண்டும் என உங்களை அன்பாக வேண்டிக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார். 











No comments

Powered by Blogger.