"பேஸ்புக்" பாவனையும் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளும்..!
(அபூ ஆஸியா - காத்தான்குடி)
இன்றைய உலகின் நவீன கண்டுபிடிப்புக்களில் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக மாறியிருப்பது தொடர்பாடல் துறையாகும்.முழு உலகையும் ஒரு உள்ளங்கைக்குள் அடக்கிவிடும் அளவிற்கு இன்று தொடர்பால் சாதனங்களின் வளர்ச்சி மேம்பட்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.
அதேபோன்று தொடர்பாடல் துறையின் உச்சகட்டமான internet(சர்வதேச வலையமைப்பு) பாவனையும் மக்கள் மத்தியில் சிறுவர்கள் முதற்கொண்டு முதியவர்கள் வரையில் மிகவும் மலிந்து காணப்படுகிறது.முன்னொரு காலத்தில் இன்டர்நெட் என்றால்,சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது.
ஆனால் இன்று அதன் சந்தைப் பெறுமதி வெகுவாகக் குறைந்து கையடக்கத் தொலைபேசிகளிலேயே நாள்முழுவதும் இன்டர்நெட் பாவிக்ககூடிய அளவிற்கு மலிந்து காணப்படுகிறது.
இந்த இன்டர்நெட் மற்றும் நவீன தொடர்பாடல் வசதிகள் போன்ற மனிதனின் கண்டுபிடிப்புக்கள் எதனை நாம் எடுத்தக் கொண்டாலும் அதில் மனிதனுக்கு அதிகம் நன்மைகள் இருப்பதைப் போன்று பல தீயவைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
நவீன தொடர்பாடல் வசதிகளால் ஒரு காலத்தில் தொலை தூரத்தில் இருந்த எத்தனையோ விடயங்கள் இன்று நம் கைக்கெட்டும் தூரத்தில் காணப்படுகின்றன.இதனால் நன்மைகளும் உண்டு,அதேபோன்று சில சமூகத்தீமைகளும் உள்ளன.
இன்டர்நெட் யுகத்தின் அதீத வளர்ச்சியில் பேஸ்புக் சமூக வலையமைப்பினை ஒரு மைல்கல்லாக குறிப்பிடலாம்.அந்தளவிற்குபேஸ்புக் ஆனது இன்று உலகின் மூலை முடுக்கெங்கும் விரிந்து வியாபித்துக்காணப்படுகின்றது.
இளைஞர்களின் இணையத்தள உலகில் பேஸ்புக் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறதென்றால்,அது மிகையாகாது.
பேஸ்புக் வலையமைப்பை பாவிக்காதவர்கள் எவரும் இல்லை என்று சொல்லக் கூடியளவிற்கு அதன் பயன்பாடு இன்று அதிகரித்துக் காணப்படுகிறது.
பேஸ்புக் என்றால் என்ன?
பேஸ்புக்(facebook)என்பது ஒரு சமூக வலைய இணையத்தளமாகும்.இது 2004ம் ஆண்டு முதன்முதலில் தொடங்கப் பட்டது.இதன் தலைமையகம் கலிபோர்னியாவில் உள்ளது.
மேலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டு பதினைந்து நாடுகளில் இது இயங்குகிறது.
பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களுடைய புகைப்படம், சொந்த விருப்பங்கள், தொடர்பு கொள்ளும் விபரம் போன்ற தகவல்களைக் கோப்புகளாக இத்தளத்தில் பதிவு செய்யலாம். தான் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட தகவல்களை யாரெல்லாம் அறிந்து கொண்டார்கள், யாரெல்லாம் தன்னைப் பற்றிய தகவல்களைத் தேடினார்கள் என்று அறிந்து கொள்ளலாம்.
அத்தோடு தங்களால் சுயமாக ஒரு இணையத்தளத்தினை வடிவமைத்துக் கொள்ளமுடியாதவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைகின்றது.எனவே இதன் மூலம் தான் ஒரே நேரத்தில் முழு உலகிற்குமே ஒரு தகவலை வெளிப்படுத்திவிடுவதற்கு ஒரு சிறந்த சாதனமாகவும்பேஸ்புக் தொழிற்படுகிறது.
சமூகத்திற்குத் தேவையான நல்ல பல கருத்துக்கள்,செய்திகள் போன்றவற்றை அறிவதற்கும் அறிவிப்பதற்கும் மிகவும் இலகுவான ஒரு பொறிமுறையாக இது நோக்கப்படுகின்றது.
இதுபோன்று இன்னும் பல ஏராளமான நன்மைகள் இதில் இருந்தாலும்,இன்றைய காலசூழ்நிலையில் இளைஞர்,யுவதிகளை இன்னும் அவர்களின் கலாச்சாரம்,பணம்,கற்பு போன்றவைகள் எதிர்பாராத விதமாக சூறையாடப்படுவதிலும் பறிபோவதிலும் பேஸ்புக் வலையமைப்பு பெருமளவில் தாக்கம் செலுத்துகிறது.
பேஸ்புக் வலையமைப்பில் நட்பு என்னும் பெயரில் தொடங்குகின்ற ஆண் பெண் உறவுகள்,சட்டிங்(chatting) எனப்படும் அரட்டையடித்தல் மூலமாக தகாத உறவுகளுக்கு வழிகோலுகின்றன.
இவ்வலையமைப்பினை சற்று உற்று நோக்கினால் பெண்களின் பெயர்களில் உள்ள தரவுகளுக்கு எப்போதும் ஒரு ஆண்கள் வட்டம் சூழ்ந்து கொண்டிருப்பதை யதார்த்தமாகவே காணலாம்.
பேஸ்புக் தளத்தில் தொடங்கிய உறவுகள் நட்பென்று,காதலென்று இறுதியில் இளம்பெண்களின் கல்வி,பணம்,மானம்,கற்பு என்பன நடுத்தெருவிற்கு வருகின்ற சம்பவங்கள் அடிக்கடி செய்திகள் வாயிலாக நம்மை வந்தடைகின்றன.
பேஸ்புக் சமூக வலையமைப்பானது,ஆரம்பிக்கப்பட்ட ஒரு சில வருடங்களிலேயே சீனா,வியட்நாம், ஈரான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான்,சிரியா,பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தடை செய்யப் பட்டது.இன்னும் ஜெர்மனியில் இதை தடை செய்வதற்கான முயற்சிகள் பரவலாக நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
மேற்குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் இதனை தடை செய்வதற்காகன காரணங்கள்;'மத அடிப்படைவாதத்திற்கு எதிரானது,மத வேற்றுமைகளை ஏற்படுத்தக் கூடியது,சமூக ரீதியான குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கு காரணமாக அமைகின்றது' என்பனவாகும்.
அத்தோடு பேஸ்புக் வாயிலாக தனி மனிதனின் எண்ணங்களையும், சிந்தனைகளையும் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற ஆதிக்க சக்திகள் நம்மை கண்காணிக்கும் ஒரு கருவியாக பயன்படுத்துகின்றன என்ற அதிர்ச்சியான தகவலையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு தனிமனிதனும் எவ்வாறு சிந்திக்கிறார்கள்,எவ்வாறான கருத்துகளை பரிமாறிக்கொள்கிறார்கள், எந்தெந்த நாட்டு மக்கள் எப்படி சிந்திக்கிறார்கள் போன்ற தகவல்கள் நமக்கே தெரியாமல் கண்காணிக்கப்படுகின்றன.
இஸ்லாத்தின் பார்வையில் சமூகவலைத்தளங்கள்.
இஸலாம் பொதுவாக மனித நாகரீகத்தியின் வளர்ச்சியினை எந்தவகையிலும் தடை செய்யவில்லை.காரணம் இஸ்லாம் ஒரு முற்போக்கு சிந்தனையுள்ள மார்க்கம்.மனிதன் தான் வாழ்வதற்குத் தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொள்வதற்கு இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கிறது.
அதேபோன்று பெண்களின் கல்வி வளர்ச்சியில் அதிகம் கரிசனை காட்டுகின்ற ஒரேயொரு மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
ஆனால்,நாகரீகம் என்ற போர்வையில் இஸ்லாமியக் கலாச்சாரம்,பெண்களின் மானம் போன்றவைகள் சூறையாடப் படுவதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
எங்கு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கு மூன்றாவதாக ஷைத்தான் வந்துவிடுகிறான். ((நபி மொழி))
பேஸ்புக் வலையமைப்பை எடுத்துக் கொண்டால்,இதிலுள்ள சட்டிங்(chatting) வசதியினைப் பயன்படுத்தி ஆண்பெண் இருவரும் தனிமையில் உரையாட முடியும்.இவ்வாறு சட்டிங்(chatting) செய்யும்போதுதான் அவர்களுக்குள் தவறான உறவுகள் உருவாகின்றன.இறுதியில் அவை சமுதாய சீர்கேடுகளுக்கு வழிசமைக்கின்றன.
இன்னும்
இதில் மிகமுக்கியமான விடயம்,நமது முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இதன் பின் விளைவுகளை அறிந்தோ அறியாமலோ தம் குடும்பத்தவர்களின் புகைபடங்களை இதில் பதிவுசெய்கின்றனர்.திருமண நிகழ்வுகளின் போது,மற்றும் ஏனைய சந்தர்ப்பங்களின் போது எடுத்துக் கொண்ட தங்களின் குடும்ப புகைப்படங்களை இடுகின்றனர்.
நமது குடும்பத்தில் உள்ள பெண்களின் மானத்தைப் பாதுகாக்க வேண்டிய நமது சகோதரர்கள் செய்கின்ற இவ்வாறான காரியங்களினால் நமது சகோதரிகளை உலகின் எங்கோ ஒரு மூலையில் உள்ள ஒரு ஆண் பார்த்து ரசிக்கிறான்.
இன்னும் அப்புகைப்படங்கள் தற்போதுள்ள நவீன வசதிகளைப் பயன்படுத்தி தவறான முறையில் எடிட் செய்யப்பட்டு இறுதியில் நமது பெண்களின் வாழ்க்கையும் சீரழிந்து போவதற்கு காரணியாக அமைகின்றது.
நம் இஸ்லாமிய ஆண்களும், பெண்களும் இதுபோன்ற தவறான செயல்களை உணர்ந்து எச்சரிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியமாகும்.
அத்தோடு இன்றைய கலாச்சார சீர்கேட்டின் உச்சகட்டமாக நோக்கப் படுவதுதான்,பெண்பிள்ளைகள் பெற்றோருக்குத்தெரியாமல்
வீட்டை விட்டு ஓடிப்போதல்.
இன்றைய ஆய்வுகளின் படி அந்நிய ஆடவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தங்களின் கற்பை இழந்து நடுவீதிகளில் நிற்கும் பெண்களின் நிலை நாளுக்குநாள் அதிகரித்து வருவதை தினந்தோறும் செய்திகளின் வாயிலாக அறியமுடிகிறது.
இதில் அதிகமானவர்கள் பேஸ்புக் மூலமாகவே ஏமாற்றப்படுகிறார்கள்.இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இவ்வாறான சம்பவங்கள் தினந்தோறும் நடந்துகொண்டே இருக்கின்றன.
தனது பெற்றோருக்குத் தெரியாமல்,கணவனுக்குத் தெரியாமல் அந்நிய ஆடவனுடன் வெளியேறி அவனிடம் தன் பணம்,கற்பு போன்றவற்றை பறிகொடுக்கிறாள்.
அந்த ஆடவனோ தனது தேவை முடிந்ததும் எங்காவது ஒரு இடத்தில் வைத்துக் காணாமல் போய்விடுகிறான்.
அவனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய இப்பெண்ணோ,மீண்டும் வீட்டிற்கு வர முடியாமல் அன்றாடம் உணவுக்கே திண்டாடுகின்ற நிலைமையில் தனது வாழ்வாதாரத்திற்காக விபச்சாரத்தையே தொழிலாக மேற்கொள்கின்ற அவல நிலை இன்று காணப்படுகின்றது.
ஆண்கள் பாவத்தில் ஈடுபடுவதற்குப் பெண்களும் பெண்கள் பாவம் செய்வதற்கு ஆண்களும் உதவிசெய்கின்ற நடைமுறைக்கு பேஸ்புக்சமூக வலைத்தளம் அடித்தளமிடுகின்றது.
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையயடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் -மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
(அல் குர்ஆன்:24:21)
ஒரு பெண் அல்லது ஒரு ஆண் சட்டிங்(chatting) செய்யும்போது நாம் மார்க்க விடயங்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்வோம் அல்லது சமூகத்திலுள்ள பிரச்சினைகள் தொடர்பாகப் பேசுவோம் என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்.
அவ்வாறு கூறி தன்னையொரு நல்லவர் என காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்.அதற்காக பெண்களிடம் நான் உங்களின் சகோதரனைப் போன்றவன் என்றும் சொல்லிக் கொள்வார்கள்.ஆனால் பிரச்சினை இங்குதான் ஆரம்பிக்கிறது.
இஸ்லாத்தைப்ப பொறுத்தவரைக்கும் அது,உடன்பிறப்புக்களை மாத்திரமே சகோதரர்களாக பார்க்கிறது.ஒரு அந்நிய ஆண் ஒரு அந்நிய பெண்ணுக்கு எந்த வழியிலும் சகோதரனாக முடியாது.வெறும் சடவாதக் கருத்துக்களை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை.
தங்களை நல்லவர்கள் எனக் காட்டிக் கொள்வதற்காக சகோதர எண்ணத்துடன்தான் பழகுகிறேன் என்று எவ்வளவுதான் கூறினாலும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் ஷைத்தான் அவர்களை வழி கெடுத்தே தீருகிறான்.
ஒரு அந்நிய ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் எனவே சகோதர உறவென்பது சாத்தியமே இல்லை என்பதை இஸ்லாம் உறுதியிட்டுக் கூறுகிறது.அதை நாட்டு நடப்புக்களும் அவ்வப்போது நிரூபிக்கின்றன.
எனவே இவ்வாறான் பேஸ்புக் போன்ற சமூக வலைய இணையத்தளங்களைக் கொண்டு நல்ல பல விடயங்களை மேற்கொண்டாலும் இன்று உலகளாவிய ரீதியில் இது பெரும்பாலும் துஷ்ப்பிரயோகம் செய்யப்படுவதே அதிகம்.
முஸ்லிம்களால் கொச்சைப்படுத்தப்படும் இஸ்லாம்.
பேஸ்புக் தளத்தில் தங்களின் பெயர்களை பாத்திமா,ஆயிஷா என பரிசுத்தமிக்க பெண்களின் பெயர்களை வைத்துக்கொண்டுள்ள எமது முஸ்லிம் சகோதரிகள்,அதில் கேட்கப்பட்டுள்ள பிடித்த நபர்,பிடித்த தொலைக்காட்சி நகழ்ச்சி,பிடித்த புத்தகம்,போன்றவற்றிற்கு முன்னால்,சினிமா நடிகர்களையும் ஷைத்தானின் வாரிசுக்களான இசையமைப்பாளர்களையும் சினிமா படங்களையும் கோடிட்டுக் காட்டுவதானது அன்னியர்கள் மத்தியில் இஸ்லாம் தொடர்பான கீழ்த்தரமான சிந்தனையை ஏற்படுத்துவதற்கு காரணியாக அமைந்து விடுகிறது.
இன்னும் மாற்றுமத மக்களுக்கு சினிமாவின் விபரீதத்தினை நாம் புரிய வைக்க எத்தனிக்கும் போது,"அதில் அதிகம் ஈடுபாடுகொண்டாவர்கள் முஸ்லிம்களாகவே உள்ளனர்" என்று அவர்கள் கூறுகின்றனர்.
இது இஸ்லாமிய தஃவா விற்கே பாரிய பின்னடைவை ஏற்படுத்துகின்றது என்பதை ஏனோ நம் சகோதர சகோதரிகள் சிந்திக்க மறுத்து விடுகின்றனர்.
நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் நாளை மறுமையில் நிச்சயம் நம் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படுவோம்.
எனவே நமது சிறுவர்கள்,மற்றும் பெண்பிள்ளைகளின் விடயத்தில் நாம் போதிய கவனம் செலுத்த வேண்டும்.
கணணி என்பது இப்போது சிறுவர் முதற்கொண்டு அனைவருக்கும் ஒரு இன்றியமையாததாக மாறிவிட்டது.ஆனால் அவற்றைக் கையாள்கின்ற நம் பிள்ளைகள் எவ்வாறான விடயங்களை அதில் பயன்படுத்துகிறார்கள்,எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதில் நாம் போதிய அறிவுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இன்று நமது சமூகத்தில் இருக்கின்ற ஒரு தவறான சிந்தனைதான்,பிள்ளைகளின் இரகசியங்களில் பெற்றோர்கள் தலையிடுவது கூடாதென்பது.உண்மையில் இதற்கும் இஸ்லாத்திற்கும் எதுவித தொடர்பும் கிடையாது.
பிள்ளைகளுக்கு தனியான அறை ஒன்றினை ஒதுக்கி அதற்குள் கணணி மற்றும் இன்டர்நெட் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் இன்றைய சூழலில் மிகவும் பரவலாகக் காணப்படுகின்ற ஒன்றாகும்.
இது பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்காக என்ற நல்ல நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் கூடுதலான சந்தர்ப்பங்களில் தமது பிள்ளைகள் தவறான வழிகளில் பயணிக்க இதுவே பிரதான காரணியாக அமைந்து விடுகின்றது.
பலரோடு சேர்ந்திருப்பதை விட தனித்திருக்கும் போதுதான் ஷைத்தானின் ஆதிக்கம் நம் அனைவர் மீதும் அதிகமாகக்காணப்படும்.
பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகளுக்காக தொந்தரவுகளற்ற முறையில் தனியறைகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் கையாள்கின்ற கணணி,தொலைபேசி போன்றவைகள் அனைவரும் கண்காணிக்கும்படியாக பொதுவான அறைகளில்,இடங்களில் இருப்பதே மிகவும் சிறந்ததாகும்.
பாடசாலை செல்லும் பிள்ளைகள்,மற்றும் எமது வீடுகளில் இருக்கின்ற வயது வந்த பெண் பிள்ளைகள் பெற்றோருக்குத் தெரியாத முறையில் கணணியை கையாள்வதற்கு அதில் பரம ரகசியங்கள் எதுவும் கிடையாது.
அவ்வாறு அவர்கள் தொலைபேசி அழைப்புக்களையோ,இணையத்தளங்களின் பாவனையையோ பெற்றோருக்குத் தெரியப்படுத்துவதை விரும்பவில்லைஎன்றால்,இந்த இடத்தில்தான் அனைத்து தாய் தந்தையர்களும் உஷார் நிலையில் இருக்க வேண்டும்.
காரணம்,அவர்கள் எங்கோ ஒரு இடத்தில் தவறு இழைக்கிறார்கள்.
அவற்றை கண்ட மாத்திரத்திலேயே முளையில் கிள்ளி எறிந்து விட வேண்டும்.
அத்தோடு பாடசாலை,மற்றும் பிரத்தியேக வகுப்புக்களுக்கு சென்று வரும் நமது பெண் பிள்ளைகள் தொடர்பாக எமது குடும்பத்தின் மீது, சமூகத்தின் மீது அக்கறை கொண்ட எவராவது ஏதேனும் முறைப்பாடுகளை எம்மிடத்தில் கூறினால் அதை மிகவும் நிதானத்துடன் உரிய முறையில் அணுக வேண்டும்.
எமது பிள்ளைகள் கணணியைப் பாவிப்பதில் எமக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால்,அது தொடர்பான அறிவுள்ள ஒருவரை அணுகி கணனியின் பதிவுகளை பரிசோதித்துக் கொள்வது சிறந்தது.
இருந்தும் இன்று அதிகமான பெற்றோர்களிடம் இருக்கின்ற ஒரு தவறான சிந்தனைதான் "எமது பிள்ளைகளுடன் நாம் இவ்வாறெல்லாம் சந்தேகத்துடன் நடந்துகொள்வதால் அவர்கள் நம்மைப் பற்றி தவறாக எண்ணி விடுவார்கள்" என்பது.
ஆனால் அல்லாஹ் தனது திருமறையிலே இவ்வாறு எச்சரிக்கிறான்,
"நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள்.நாளை மறுமையில் நிச்சயம் உங்கள் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப் படுவீர்கள்"
அறிந்தோ அறியாமலோ நம் பொறுப்பில் இருக்கும் பெண்பிள்ளைகள், சிறுவர்கள் செய்யும் தவறுகளுக்காக சமுதாயத்தில் நாம் தலைகுனிவது மாத்திரமல்லாது மறுமையிலும் பதில்கூற வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்படுவோம்.
ஒரு விபரீதமான சம்பவம் நடந்ததன் பிறகு அதை நினைத்து வருந்துவதை விட,அவை நடப்பதற்கு முன்னாலேயே அவற்றிற்கான வாயில்களை அடைப்பதற்குரிய வழிமுறைகளைக் கைக்கொள்ளுதல் அறிவு பூர்வமானதாகும்.
இன்று நம் நாட்டில் முஸ்லிம்களின் கலாச்சாரத்தை தக்கவைப்பதில் நாம் எதிர்நோக்கியிருக்கும் சவால்,ஒருசில முஸ்லிம்களின் கலாச்சார சீர்கேட்டினால் முழு சமூகத்தின் எதிர்காலத்தையுமே கேள்விக்குறியாக்கி விடுகின்ற அபாயகரமான சூழ்நிலையினை ஏற்படுத்திவிடும் என்பதில் சந்தேகமில்லை.
முஸ்லிம்களின் சமூகக் கட்டமைப்பை சீர்குலைப்பதற்கென்றே அந்நிய சக்திகள் கங்கணம் கட்டிக் கொண்டு அலைகின்ற இத்தருணத்தில் எமது பெண்பிள்ளைகளின் விடயத்தில் நாம் மிகவும் உன்னிப்பாக இருத்தல் அவசியமாகும்.
எனவே,
மறுமையின் ஈடேற்றத்தை நோக்கிய நமது பயணத்தில் ஏற்படுகின்ற ஷைத்தானிய ஊடுருவல்களை முறியடித்து அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய நேரிய வழியில் வாழ்ந்து நம்மையும் நமது குடும்பத்தையும்,நமது சமூகத்தையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாக்க எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக.
Post a Comment