சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - வழி தவறிய சகோதரன்
(ஊடகவியலாளர் சண் தவராஜா எமது இணையத்திற்கு அனுப்பியிருந்த கட்டுரையொன்றை இங்கு பதிவிடுகிறோம்)
(சண் தவராஜா)
மனித வாழ்வில் மனதுக்குப் பிடித்தமில்லாத பல விடயங்கள் நடந்து விடுவதைத் தடுக்க முடியாது எனத் தெரிந்தும் அதனைத் தடுத்துவிட மனம் ஏங்கும். ஏதாவது ஒரு காரணத்தினால் அது நடந்து விடாமற் போகாதா என மனம் ஏங்கிய வண்ணமேயே இருக்கும். ஆனால், அதனையும் மீறி அந்த விடயம் நடந்துவிடும்போது மனம் பாரிய அவஸ்தைக்கு உள்ளாகும்.
கிட்டத்தட்ட இதைப் போன்ற உணர்வே சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்கான சம்மதத்தை ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு வழங்குவதாகத் தெரிவித்த போதில் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. இறுதித் தருணம் வரை சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொள்ளச் சம்மதிக்காதா என – அதற்கான சாத்தியங்கள் அறவே இல்லை என நன்றாகத் தெரிந்திருந்தும் - ஏங்கிய தமிழ் உள்ளங்கள் பல இலட்சங்கள். அவர்களது அந்த எதிர்பார்ப்பானது, மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்டம் நிர்மூலம் ஆக்கப்பட்ட பின்னாளில், தமிழ் மக்களுக்கான ஆகக் குறைந்தளவான அதிகாரப் பரவலாவது கிட்டக்கூடாதா என்ற ஆதங்கத்தின் விளைவே.
உணர்ச்சி பூர்வமான, தமிழ் இனவாத ஊடகத்துறையைப் பெரிதும்; கொண்டுள்ள தமிழ் இனம், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முடிவைப் பலவாறாக விமர்சித்துத் தனது பழியைத் தீர்த்துக் கொண்டது. தொடர்ந்தும் அத்தகைய கருத்துக்களே ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டும் வருகின்றன. அது புரிந்து கொள்ளப்படக் கூடிய ஒன்றே ஆயினும் பொதுவில் தமிழர் தாயகத்திலும், குறிப்பாகத் தென் தமிழீழத்திலும் மிகவும் அவசியமான தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்கு இத்தகைய கருத்துக்கள் எந்தளவு தூரம் உதவும் என்ற அடிப்படையில் இந்த விடயம் அணுகப்படாமை வேதனை தருவதாக உள்ளது.
இந்நிலையில், சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஏற்படுத்தியுள்ள ஆட்சியின் சாதக பாதகங்களை புதியதொரு கண்வோட்டத்தில் பார்ப்பது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரு மாகாணத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாத ஆட்சி அமைவது முரண்பாடான ஒரு விடயமே என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே போன்று, தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் ஒன்றிணைவிலான ஆட்சி அமையாமற் போனமையும் துர்ப் பாக்கியமே. (ஆனால், இவை இரண்டும் - வாய்ப்பிருந்தும் - அமையாமற் போனமைக்குக் காரணம் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியே என்பது தனியாகக் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயம்.)
அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் ஒரு இனம், தனது அரசியல் கோரிக்கைகளை ஜனநாயகப் பிரதிநிதித்துவ வழிமுறைகளுக்கு ஊடாக வலியுறுத்துவதற்கான ஒரு வாய்ப்பு மறுக்கப் பட்டுள்ளமை ஒரு பின்னடைவே. இந்தப் பின்னடைவானது, எத்துணை தாக்கமுடையது என்பது புதிய முதலமைச்சர் நஜீப் ஏ மஜீட் வழங்கியுள்ள செவ்வியில் தெளிவாகப் புரிகின்றது. முன்னைய முதலமைச்சர் பிள்ளையான் கிழக்கு மகாணத்திற்கு காணி, மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தேவையில்லை என்று மாத்திரமே கூறி வந்தார். புதிய முதலமைச்சரோ, சிறி லங்காவைப் போன்ற பரப்பளவில் சிறியதொரு நாட்டிற்கு மாகாணசபை முறைமையே தேவையற்ற ஒன்று எனக் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாம் பாரபட்சமாக நடத்தப் படுகின்றொம் என்ற தமிழ் மக்களின் புரிதலின் விளைவாகவே தனிநாடு கோரிய தமிழ் மக்களின் போராட்டம் உருவானது. அந்தப் போராட்டத்தின் விளைவாக உருவாகிய மாகாணசபை அமைப்பை அவசியமற்ற ஒன்று எனக் கூற முனைவது, வரலாற்றில் இருந்து பாடம் கற்க மறுக்கும் போக்கையே உணர்த்தி நிற்கின்றது.
தமிழ் மக்களின் அரசியற் கோரிக்கைகள் தனியே தமிழ் மக்களின் எதிர்கால நலவாழ்வுக்கான ஒன்று மாத்திரமல்ல. அது தமிழ் பேசும் மக்கள் என்ற வரையறைக்குள் அடங்கும் தமிழர் தாயகப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களின் நலவாழ்வுக்குமானதே. இதனை முஸ்லிம் அரசியல் தலைமைகள் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள முன்வராவிட்டாலும், உள்ளடக்கத்தில் தமிழ் மக்களின் போராட்டத்தின் விளைவு தமிழர் தாயகத்தில் வாழும் முஸ்லிம் மக்களின் விடுதலையையும் உள்ளடக்கியதாகவே உள்ளது என்பதே உண்மை.
ஆனாலும், துர்வாய்ப்பாக தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் இந்த உண்மையைப் பண்பளவில் வெளிக்காட்டத் தவறியது மட்டுமன்றி முஸ்லிம் மக்களுக்கு இந்த உண்மையைப் புரிய வைக்கவும் தவறிவிட்டது. இந்தத் தவறைச் சுய விமர்சனத்துக்கு உட்படுத்தி முஸ்லிம் மக்களின் நலன்களையும் உள்ளடக்கி அரசியலை முன்னகர்த்திச் செல்வதற்கான தலைமைத்துவம் தமிழ் மக்கள் மத்தியிலும், அதற்கான தேவையைப் புரிந்து கொண்டு தமிழ் பேசும் இனங்களுக்கான விடுதலையை வென்றெடுக்க ஒன்றிணந்து பயணிக்கத் தேவையான தலைமைத்துவம் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் இல்லாமை இன்றைய நிலையில் ஒரு பாரிய இடைவெளியாகவே தென்படுகின்றது. இந்த இடைவெளி கிட்டிய எதிர்காலத்தில் நிரப்பப்படக் கூடிய ஏதுநிலைகளும் தென்படாமை கவலைதரும் விடயமாகும்.
கிழக்கு மாகாணத் தேர்தல்களின் பின்னான நிலைமைகள் கிழக்கும் வடக்கும் தாமதமின்றி இணைக்கப் பட்டாக வேண்டும் என்பதை முன்னிலும் விட அதிகம் வேண்டி நிற்கின்றன. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலத்தில் மருந்துக்குக் கூடத் தமிழர்கள் இல்லாத ஒரு ஆட்சி உருவாக்கப் பட்டுள்ளமை ஒரு தற்செயல் நிகழ்வல்ல. பிரித்தாழும் தந்திரத்தின் உச்சக் கட்டமாக மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் இந்த நிலை சிங்களப் பேரினவாதத்தால் உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ் - முஸ்லிம் மக்களிடையே புரையோடிப் போயுள்ள இன முரண்பாட்டைக் கொம்பு சீவிவிடும் நோக்கிலேயே தமிழர்கள் கிழக்கு மாகாண மந்திரி சபையில் தவிர்க்கப் பட்டுள்ளார்கள். இவ்வாறு தமிழர்கள் எவருமே மந்திரி சபையில் இடம்பிடிக்காமற் போனமை இரா சம்பந்தன் அவர்களின் தவறே எனப் பகிரங்கமாகவே பசில் ராஜபக்ஸ கூறியிருப்பதானது தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் திருப்பிவிடும் கபட நோக்கிலானது என்பது சிறு பிள்ளைக்குக் கூடப் புரியும்.
சிங்களத்தக்கு வால் பிடிப்பதால் தமிழர்கள் கிழக்கு மாகாணத்தை ஆளலாம் எனக் கனவு கண்டவர்கள் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். அதேநேரம், கருணா செய்த துரோகத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த கிழக்கு மாகாண மக்களையும் துரோகிகளாக வகைப்படுத்த நினைக்கும் யாழ் மேலாதிக்கவாதிகளும் விழித்துக் கொள்ள வேண்டிய தருணமிது. தமது பேதங்களை மறந்து தமிழ் மக்கள் தமக்குள் ஒற்றுமைப்படாது விட்டால் விளைவு எத்துணை விபரீதமாக முடியும் என்பது மற்றுமொரு முறை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படும் முடிவை எடுத்ததன் பின்னணி தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அது பற்றி நாம் கதைப்பது பொருத்தமாக இருக்காது. அந்த முடிவு தொடர்பில் கருத்துக் கூற உரித்துடையவர்கள் அக் கட்சிக்கு வாக்களித்த மக்களே. ஆனால், தமிழர்களுக்கு மிகவும் தேவையான முஸ்லிம் மக்களின் நல்லெண்ணத்தையும், அவர்களை ஓரளவுக்கேனும் பிரதிநிதித்துவம் செய்யும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நல்லெண்ணத்தையும் எதிர்காலத்தில் எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் தமிழர் தலைமைகள் கவனம் செலுத்த வேண்டும். கட்சி பேதங்களை மறந்து முஸ்லிம் மக்களுடன் ஒரு தொடர்பாடலை ஏற்படுத்தத் தக்க பொறிமுறை ஒன்றை அவை கண்டறிய வேண்டும். இதுவொன்றே கிழக்கில் தமிழ் மக்களுடன் 'பிட்டும் தேங்காய்ப் பூவும்' போல வாழும முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஒரே வழி.
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட முன்வந்தமை தொடர்பில் விசனமடைந்துள்ள முஸ்லிம் புத்திஜீவிகள், ஆன்மீகவாதிகள், நலன்விரும்பிகள் பலர் இருக்கின்றார்கள். அவர்களை இனங் கண்டு காலந் தாழ்த்தாது அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள தமிழர் தலைமைகள் முனைய வேண்டும்.
அதேபோன்று, சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எடுத்த முடிவு எமக்கு உவப்பானதாக இல்லாத போதிலும் அத்தகையதொரு முடிவை எடுப்பதற்கான ஜனநாயக உரிமை அக் கட்சிக்கு உள்ளது என்பதைப் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டு தொடர்ந்தும் ஒரு ஐக்கியத்தைக் கட்டி வளர்ப்பதற்கான முன்முயற்சிகளைத் தமிழர் தலைமைகள் மேற்கொள்ள வேண்டும்.
எமது இளைய சகோதரன் வழிதவறிச் சென்று விட்டான் என்பதற்காக அவனை ஒரேயடியாக ஒதுக்கி வைத்துவிட முடியாது. புத்திமதி கூறி அவனை அரவணைத்துக் கொள்வதே அறிவுடைய மூத்த சகோதரன் செய்யக் கூடிய காரியம். அதனைத் செய்யும் வல்லமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளதா எனும் நியாயமான சந்தேகம் உள்ள போதிலும், இன்றைய சூழலில் அவ்வாறு நடைபெற வேண்டும் என எதிர்பார்ப்பதைவிட தமிழ் மக்களுக்கு வேறு தெரிவு இல்லை என்பதே யதார்த்தம்.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தல் காலத்திலும் முடிவுகள் வெளியான பின்னரும் தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும் பல்வேறு கருத்துக்கள் முஸ்லிம் அமைப்புக்கள், கட்சிகள் மத்தியில் இருந்தும் தனி நபர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் இருந்தும் வெளிவந்திருக்கின்றன, வெளிவந்து கொண்டும் இருக்கின்றன. இத்தகைய நட்புச் சக்திகளை இனங் கண்டு, அவர்களோடு தொடர்பு கொண்டு உறவை வளர்த்தெடுக்க வேண்டிய பணியிலும் தமிழர் தலைமைகள் கவனஞ் செலுத்த வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் கட்டியெழுப்பப்படும் தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமை இன்றைய சூழலில் தமிழர்கள் தமது அரசியல் இலக்கை அடைவதற்கான முன் நிபந்தனை என்பதைப் புரிந்து கொள்வதிலேயே இச் செயற்பாட்டின் வெற்றி தங்கியுள்ளது என்பது வெறும் கூற்றல்ல.
Post a Comment