உழ்ஹிய்யாவை ஷரீஆ கூறும் வழிகாட்டல்களைப் பேணி நிறைவேற்றுவோம்
(அஷ்-ஷைக் எஸ்.ஏ.எம். ஜவ்பர்)
உழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வணக்கமாகும். அதனை கட்டாயமான ஒரு சுன்னத் என்றும் இஸ்லாம் கூறுகின்றது. இதற்கு முன் வாழ்ந்த பல சமூகத்தாரும் செய்து வந்த ஒரு வணக்கமாகவும் இது விளங்குகின்றது. அதனை நிறைவேற்றுபவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இஸ்லாம் எல்லாவித உயிர்களையும் மதிக்கின்றது. அவைகளுக்கு நோவினை செய்வதை தடுக்கின்றது. மேலும் கருணை காட்டும்படி ஏவுகின்றது. ஒரு மிருகத்திற்கு உணவு கொடுக்காது சிரமம் கொடுத்த ஒரு மனிதரைப் பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாய் பேச முடியாத இப் பிராணியின் விடயத்தில் அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள் என எச்சரிக்கையும் செய்தார்கள்.
எனவே இவ்வணக்கத்தைப் புரியும் ஒருவர் இவ்வுயிர்கள் மீது கருணை கொண்ட நிலையில் இறைக்கட்டளை என்ற ஒரே காரணத்திற்காக இவ்வணக்கத்தை புரிகிறார். ஆதலால் இவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறி முறைகளையும் பேணிச் செய்வது கடமையாகும். அப்பொழுதுதான் இவ்வணக்கத்தின் மூலம் எதிர்பார்க்கப்படும் சிறப்புகளை அடைந்து கொள்ளமுடியும். அல்லாஹ் தஆலா திருமறையில் “அதன் மாமிசமோ அல்லது அதன் இரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. உங்களுடைய இறை அச்சம்தான் அவனை அடையும்.” என்று கூறுகிறான். அத்தியாயம் : அல்ஹஜ்ஜு வசனம் : 37
உழ்ஹிய்யா வணக்கத்தை நிறைவேற்றுவோர் பின்வரும் ஷரீஆவின் கடமைகளை பின்பற்ற கடமைப்பட்டுள்ளனர்.
1. எச்சந்தர்ப்பத்திலும் எவ்விதத்திலும் மிருகங்களுக்கு நோவினை கொடுக்கக் கூடாது.
2. அறுக்கப்படவுள்ள மிருகத்தை உணவு நீர் முதலியவற்றை வழங்கி பராமரித்தல் வேண்டும்.
3. ஒரு மிருகம் அறுக்கப்படும் காட்சியை ஏனைய மிருகங்கள் காணாத வண்ணம் பார்த்துக் கொள்ளல் வேண்டும்
4. அறுப்பதற்கு கூர்மையான கத்தியை பயன்படுத்த வேண்டும்.
5. கத்தியை கூர்மையாக்கும் போது மிருகங்கள் காணாத வண்ணம் நடந்து கொள்ளல் வேண்டும்
6. மிருகம் அறுக்கப்படுவதற்கு முன் ஓய்வு கொடுக்கப்படல் வேண்டும்.
7. சுத்தம் பேணப்படல் வேண்டும்.
8. அண்டை அயலவருக்கு தொல்லை கொடுக்காத வண்ணம் இக் கடமை நிறை வேற்றப்படல் வேண்டும்.
9. பிற மதத்தவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் நடந்து கொள்ளல் வேண்டும்.
இவ்வழிகாட்டல்களையே நாட்டுச்சட்டமும் வலியுறுத்துகின்றது என்பதனை கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
இம் முறை அய்யாமுத் தஷ்ரீக்குடைய இரண்டாம் நாள் (பிறை 12) அதாவது திங்கட்கிழமை போயா தினமாக இருப்பதனால் அன்றைய தினம் உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவதை முற்றாகத் தவிர்த்து நாட்டுச் சட்டத்தைப் பேணி நடக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது. பெருநாள் தினம் அதாவது சனிக்கிழமை, மற்றும் ஞாயிறு, செவ்வாய் போன்ற தினங்களில் உழ்ஹிய்யாக் கடமையை நிறைவேற்றலாம்.
Post a Comment