Header Ads



வடக்கு முஸ்லிம்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக்கொடுக்க முன்வாருங்கள் - றிசாத்


(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிய செயற்பாடுகளில்  கவனம் செலுத்தப்படுகின்ற மிக முக்கியமானதும், மீள்குடியேற்றத்திற்கான சாதமான சமிக்ஞைகள் வெளிப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதுமான காலகட்டத்தில் கொண்டாடப்படுகின்ற ஹஜ்ஜூப் பெருநாள் தினத்தில் அனைத்து மக்களுக்கும் அமைதியையும் சுபீட்சமான வாழ்வையும் அளிக்க வேண்டுமெனப் பிரார்த்திப்பதாகவும், வாழ்த்துவதாகவும்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிஷாட் பதியூதீன் தனது ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: 

ஓவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இலங்கை வாழ் முஸ்லிம்களின் மறக்க முடியாத மாதமாகவும், அக்டோபர் மாதத்தின் இறுதி வாரம் வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட வாரமாகவும் நினைவு கூரப்பட்டு வருகின்றது. வெளியேற்றப்பட்ட மக்களின் மீள்குடியேற்றமும், இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளும் தீர்க்கமுடியாத பின்னணிகள் கொண்டதாக இருந்து வருகின்ற போதும் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்த எனது முழுமையான அர்ப்பணிப்புடனான அக்கறையின் பயனாக பல்வேறு செயற்றிட்டங்களை, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளத்தக்க சாதகமான சூழ்நிலைகள் உருவாகியிருக்கின்றன. 

இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தற்போது சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளனர். இவர்களின் பிரச்சினைகளையும், தேவைகளையும் நிறைவு செய்வதற்கான செயற்பாடுகளை நான் மேற்கொண்டு வருகின்றேன். மேலும் மீளக்குடியேறிய மக்களுக்கான வீடமைப்பு மற்றும் தொழில், வாழ்வாதார நடவடிக்கைகளையும் கட்டம் கட்டமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம்.

இத்தகைய சூழ்நிலையில், அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் போற்றுகின்ற ஈகைத் திருநாளைக் கொண்டாடுகின்றோம். இத்தினத்தில் நாட்டில் முரண்பாடுகளற்ற இன ஜக்கியமும், முஸ்லிம்களுக்கு நிம்மதியானதும் சுபீட்சமானதுமான வாழ்வு அமையப் பிரார்த்திக்கிறேன். முக்கியமாக இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்காக முஸ்லிம்கள் யாவரும் இத்தினத்தில் பிரார்த்திக்குமாறும் வேண்டுகிறேன்.

தியாகத்தை போற்றி நிற்கும் இத்திருநாளில் இலங்கை முஸ்லிம்கள்,வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் முன்வருமாறும் அமைச்சர் றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.