Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்களை கட்சியின் ஒழுக்காற்று குழு விசாரித்தது


(எம். சுஐப்)

கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவளித்தமை மிகச் சரியானதே என அந்தக் கட்சியின் குழுக்களின் தலைவர் மாகாண சபை உறுப்பினர் ஏ,எம்.ஜெமீல் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்கள் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பில் கட்சி மட்டத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்தே அவர் கருத்து தெரிவித்தார். 

தலைமை அவ்வப்போது எடுக்கும் சமூகத்தின் நன்மை கருதிய தீர்மானம் போலவே நாமும் அதனை முன்னுதாரணமாகக் கொண்டு சமூகத்தின் நன்மை கருதியே இதற்கு ஆதரவளித்தோம். இதில் எந்தத் தவறுமில்லையே. எந்த விசாரணைகளையும் நாம் எதிர்நோக்கத் தயார் என அவர் குறிப்பிட்டார். 

திவிநெகும சட்டமூலம் மாகாண சபையின் அதிகாரங்களைப் பறிப்பதாகக் கூறுகின்றனர். கிராமிய அபிவிருத்தி தொடர்பான இந்த அதிகாரங்கள் மாகாணசபைக்கு இருந்த காலத்தில் கிழக்கு மாகாணசபை அதைப் பயன்படுத்தியதா? வெறுமனே சிலர் இதுபற்றி கூக்குரல் இடுவதால் என்ன பயன்? 

‘திவிநெகும’ மூலம் மத்திய அரசு அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது அந்தப் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் அரசுடன் ஒத்துழைத்து நல்ல பல காரியங்களைச் செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார். 

இதேவேளை இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக அவசர அவசரமாக வாக்களித்த மாகாணசபை உறுப்பினர்களை விசாரணை செய்ய மு.கா உயர்பீடம் மூவர் கொண்ட ஒழுக்காற்று விசாரணைக்குழுவொன்றை நியமித்திருந்தது. கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளர் நாயகம் ஹஸனலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகியோரைக் கொண்ட இந்த ஒழுக்காற்று விசாரணைக்குழு மாகாணசபை உறுப்பினர்கள் எழுவரையும் தனித்தனியாக விசாரணை செய்துள்ளது. 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளனர். ஒழுக்காற்று விசாரணைக்குழு விசாரணைகள் தொடர்பிலான அறிக்கையை அரசியல் அதி உயர்பீடத்துக்கு சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

மாகாண சபை உறுப்பினர்கள் என்னதான் கருத்துகள் தெரிவித்தபோதும் கட்சியின் சிரேஷ்ட முக்கியஸ்தர்கள் இவர்களின் செயற்பாட்டில் திருப்தியில்லாத நிலையிலேயே உள்ளனர். கட்சி மேல்மட்ட கோரிக்கைகளை அலட்சியம் செய்து அவசரக்குடுக்கைகளாகச் செயற்பட்டவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஒரு சாரார் கோரிக்கை விடுக்கின்றனர். கட்சியின் கட்டுக்கோப்பையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

1 comment:

  1. மக்களை மயக்க விசாரணை என்ற பெயரில் மற்றுமோர் நாடகம்.... . .!!!
    ரவூப் ஹக்கீம் செய்யும் தவறுகளை யார் விசாரிப்பது ??

    ReplyDelete

Powered by Blogger.