வறுமையின் கொடூரம்..! (படம் இணைப்பு)
இந்தியா - வறுமையால் வாடிய கார்பென்டர் நேற்றிரவு குடும்பத்துடன் சயனைடு குடித்தார். அவர்களில் கார்பென்டர், அவரது மனைவி மற்றும் 4 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். ஆபத்தான நிலையில் உள்ள ஒரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாளையில் நடந்த இந்த சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாளையங்கோட்டை கிருஷ்ணன் கோயில் கீழ தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (42), கார்பென்டர். மனைவி மாரியம்மாள் (38), பீடி சுற்றும் தொழிலாளி. இவர்களுக்கு மணிகண்டன், மகாதேவன், மகாராஜன் என்ற மகன்களும் மகாலட்சுமி, மலர்வனம் என்ற மகள்களும் இருந்தனர். சரியான வேலை கிடைக்காமல் ரவிசங்கர் வறுமையில் வாடினார்.
அவரது மனைவி பீடி சுற்றுவதன் மூலம் கிடைத்த வருமானம் வாய்க்கும் வயிற்றுக்குமே சரியாக இருந்தது. குழந்தைகளை படிக்க வைக்கவும் மருத்துவம் பார்க்கவும் முடியாமல் திண்டாடினர். இளைய மகள் மலர்வனம், மூளைவளர்ச்சி குறைந்து பிறந்ததால் மேலும் வேதனைப்பட்டனர். மூத்த மகன் மணிகண்டனை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருந்தது. இதற்காக அருகில் உள்ள டியூஷன் சென்டரில் அவனை சேர்த்தனர். ஓரிரு மாதங்களிலேயே கட்டணம் செலுத்த முடியாமல் டியூஷனை விட்டு நிறுத்தினர். மற்ற குழந்தைகளை ஆரம்ப பள்ளிக்குகூட அனுப்ப முடியவில்லை. இந்நிலையில், பாளை பகுதியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு நேற்று குடும்பத்துடன் சென்றார் ரவிசங்கர்.
அங்கு குழந்தைகளுக்கு மொட்டை போட்டார். மாலையில் எல்லாரும் வீடு திரும்பினர். குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தன. பின்னர், இரவு அனைவரும் படுத்துவிட்டனர். இன்று அதிகாலை வீட்டு கதவு திறந்திருந்தது. உள்ளே ஆள் நடமாட்டம் இல்லை. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த வெள்ளையம்மாள், ரவிசங்கர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அங்கு மாரியம்மாள் மற்றும் 4 குழந்தைகள் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். ரவிசங்கரும் ஒரு மகனும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். மர வேலைகளுக்கு பயன்படுத்தும் சயனைடை குளிர்பானத்தில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, தம்பதியினரும் குடித்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கும் ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரவிசங்கரையும் அவரது மகனையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ரவிசங்கர் பிற்பகலில் பரிதாபமாக இறந்தார். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தார். ரவிசங்கர் வீட்டில் கிடந்த 2 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர். அதில், தங்கள் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டிருந்தது.கடைசி குழந்தை மலர்வனம் மூளை வளர்ச்சி குன்றியதாக இருந்ததால் ரவிசங்கர் குடும்பத்தினர்.
வேதனையில் இருந்தனர். நேற்று விஜயதசமி என்பதால் அப்பகுதி குழந்தைகள் பலரை வித்யாரம்பம் நிகழ்ச்சிக்காக பெற்றோர் பள்ளிகளுக்கு அழைத்து சென்றனர். தங்கள் குழந்தைக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று ரவிசங்கர் வருத்தப்பட்டுள்ளார். இதை கடிதத்தில் அவரே குறிப்பிட்டுள்ளார். வறுமை வாட்டியதாலும் பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தாலும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாகவும் எழுதியுள்ளார்.
பள்ளிக்கு நன்கொடை
ரவிசங்கரின் வீடு மிக சிறியது. அங்கு அரசு வழங்கிய இலவச டிவி கூட கிடையாது. வீட்டில் இருந்த சிறிய ரேடியோவில் மட்டுமே அவ்வப்போது பாடல்கள் கேட்டு வந்தனர். பணம் இல்லாததால் எந்த வசதிக்குமே ஆசைப்படாமல் எளிமையாக வசித்து வந்தனர். இதனால் அக்கம் பக்கத்தினரிடம்கூட சகஜமாக பழக தயங்கி வந்தனர். ரவிசங்கர் எழுதியிருந்த கடிதத்தில், ‘என் வீட்டில் உள்ள பொருட்களை நான் படித்த சிஎம்எஸ் பள்ளி விடுதிக்கு நன்கொடையாக அளித்து விட வேண்டும்’ என கூறியுள்ளார்.
Post a Comment