மாகாண சபை முறைமையை ஒழிப்பதா..? அமைச்சர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள்..!
மாகாணசபைகளை உருவாக்கிய 13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர்கள் மத்தியில் கருத்து முரண்பாடு எழுந்துள்ளது. இதன்காரணமாக அமைச்சரவை இரண்டாகப் பிளவுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மாகாணசபைகள் முறைமைக்கு ஒருதரப்பு ஆதரவளிக்கின்ற அதேவேளை, ஜாதிக ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற கூட்டணிக் கட்சிகள் 13வது திருத்தத்தை உடனடியாக இல்லாதொழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருவதாக, அரசின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாகாணசபை முறையை ஒழிப்பதற்கான நேரம் வந்து விட்டதாக பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அண்மையில் கூறியிருந்தார்.
அதேவேளை, அரசில் அங்கம் வகிக்கும் ஏனைய கூட்டாளிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி போன்றன 13வது திருத்தத்தை இல்லாதொழிக்கக் கூடாது என்று வலியுறுத்தி வருகின்றன.
13வது திருத்தத்தையும் மாகாணசபை முறைமையையும் அரசாங்கம் இல்லாதொழித்தால், அது நாட்டை இன்னொரு வன்முறை, மோதலுக்கு தள்ளிச் செல்லும் என்று இடதுசாரிக்கட்சிகள் எச்சரித்துள்ளன. மாகாணசபை முறைமைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு ஜாதிக ஹெல உறுமய தயாராகி வருவதாக, தகவல்கள் கிடைத்துள்ளன.
இதற்கிடையே மாகாணசபை முறைமை மற்றும் 13வது திருத்தத்தின் எதிர்மறை காரணிகள் தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணி ஏற்கனவே பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ச,
“வடக்கு, கிழக்கு மாகாணசபைகள் செயற்படாத நிலையில் மாகாணசபை முறை ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால் அவை செயற்படத் தொடங்கும்போது, பிரபாகரன் துப்பாக்கி ரவைகளால் அடைய முற்பட்டதை விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகள் சட்ட அங்கீகாரத்துடன் பெறுவதற்கு முனைவார்கள்.
மாகாணசபைகளின் தாளத்துக்கு ஏற்ப ஆட்சி செய்ய வைத்து, அவர்கள் நாட்டைச் சீர்குலைக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்தநிலை தொடருமேயானால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெற்கிலுள்ள மக்களை ஆளும் காலம் வெகுதொலைவில் இல்லை.“ என்று எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே மற்றொரு அமைச்சரான வாசுதேவ நாணயக்கார, 13வது திருத்தத்தை ஒழிக்க விடமாட்டோம் என்று கூறியுள்ளார். “இத்தகைய விவாதங்களை நடத்துவது அவமானம், குற்றம். இது பிரச்சினைகளை இன்னும் மோசமடையவே செய்யும். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள், இந்த விவகாரத்தை ஒரு பரிதாப நிலையாக காண்பித்து அரசாங்கத்தை, பொறியில் தள்ள முனைகின்றன” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
SLMC may support the Gvt. To demolish the 13th amendment !!!!! No wonder Hakeem will get another tour to Paris!!!!!!
ReplyDelete