மலர் வாடாமல் தேன் எடுக்கப்போகிறதாம் அரசாங்கம்..!
(எம்.ஜே.எம். தாஜுதீன்)

'வரி செலுத்துவோர் கௌவத்துக்கு உரியவர்கள்" என்ற தொனிப் பொருளுடன் நவம்பர் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையில் வரி வாரம் பிரகடனம் செய்யப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மல்லிகா சமரசேகர இன்று புதன் கிழமை தெரிவித்தார்.
வரி வாரம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று புதன் கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஆணையாளர் மேலும் கூறியதாவது:
வரி அறவிடுவதன் முக்கியத்துவத்தை பொது மக்களுக்கு அறிவுறுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் வரி வாரம் அமுல்படுத்ததப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் வழங்கிய உறுதி மொழக்கிணங்கவே இந்த வரி வாரம் பிரகடனப்படுத்தப்படுகின்றது.
வருமான வரி - வெட் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்புதல் தொடர்பான வரி என்பன தொடர்பில் மக்கள் மத்தியில் தோன்றியள்ள அச்சத்தையும் சந்தேகத்தையும் நீக்குவதும் வரி செலுத்துவோரை கௌரவித்து ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
நவம்பர் முதலாம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையில் நாடளாவிய ரீதியில் நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொது மக்களுக்கான மாவட்டரீதியாலன கருத்தரங்குகள்- மக்கள் சந்திப்புக்கள்- துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்- திணைக்களத்துக்கான புதிய கட்டடம் திறந்துவைப்பு மற்றும் சமூக சேவைகள் என்பன இந்த வரி வாரத்தில் இடம்பெறும்.
மலர் வாடாமல் தேன் எடுக்கும் முறையில் பொது மக்களை அவதிக்குள்ளாக்காமல் வரி அரவிடுவதற்கான புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். எமது திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் தோன்றியுள்ள தப்பபிப்ராயங்களை நீக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதற்காக உடன் தொடர்புகொள்ளக்கூடிய புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
அரசாங்கத்துக்குக் கிடைக்கும் உள்நாட்டு வருமானத்தில் 50 சதவீதத்தை எமது திணைக்களமே அறவிடுகின்றது. 8 லட்சத்து 97 ஆயிரம் பேர் இலங்கையில் வரி செலுத்துகின்றனர்.
2010 ஆம் ஆண்டில் 328 மில்லியன் ரூபாவூம் 2011 ஆம் ஆண்டில் 442 மில்லியன் ரூபாவும் வரியாக அறவிட்டுள்ளோம். இவ்வருடம் 512 மில்லின் ரூபாவை அறிவிட நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மாதம் ஒன்றுக்கு 5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும். வருமான வரி செலுத்தாத 1736 பேருக்கு எதிராக திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
துறைமுகங்கள் அமைத்தல் மற்றும் விமான நிலையங்கள் அமைத்தல் போன்ற முக்கிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு பொது மக்களின் வரிப்பணமே பயன்படுத்தப்படுகின்றது. எனவே இந்த வரி வாரத்தை வெற்றிகரமாக நடத்தி இது தொடர்பில் மக்களை அறிவுறுத்தும் நடவடிக்கைகளுக்கு சகல ஊடகங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment