புலிகளினால் கொல்லப்பட்ட யாழ் முஸ்லிம் விளையாட்டு வீரர்கள்..!
புலிகளால் கடத்திக் கொலைசெய்யப்பட்ட வீரர்களை யாழ் முஸ்லிம் உதைப்பந்தாட்ட அணி நினைவு கூறுகின்றது
(ஜான்ஸின்)
1990 செப்டம்பர் 26ஆம் திகதி புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட அப்துல் மஜீட் ஜலீஸ் (30 வயது) பின்னர் புலிகளால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டார். இவருக்கு கொழும்புக்கு வர புலிகள் அனுமதிப்பத்திரம் வழங்காததால் புலிகளுடன் வாக்குவாதப்பட்டுள்ளார். இதனை விசாரணை செய்ய அழைத்துச் சென்ற புலிகள் அவரை சித்திரவதை செய்து கொலை செய்திருந்தனர்.
புலிகளால் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட யாழ்ப்பாண முஸ்லிம்கள் அகதி முகாம்களில் தொழில்கள் இன்றி இருந்தனர். அவர்களில் சிலர் வவனியா சென்று நாட்டாமை தொழில் செய்து வந்தனர். இந்நிலையில் சில நேரங்களில் வயதான தமிழ் மூதாட்டிகளை தமது சைக்கிள்களில் ஏற்றி புலிகளின் எல்லையான தாண்டிக்குளத்துக்கு கொண்டு சென்று விடுவர்.
இப்படி அவர்கள் செய்துவந்த ஒரு நாள் அன்று 1991 மே மாதம் 23ஆம் திகதி புலிகள் ஊடுறுவி அவர்களை ஆயுத முனையில் கடத்திச் சென்றிருந்தனர். அவர்களில் ஒருவர் தப்பியோடிவர ஏனைய ஏழு பேர் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். மறுநாள் புலிகளின் பிரதேசங்களிலிருந்து வவுனியா வந்த தமிழ் மக்கள் ஓமந்தையில் ஏழு பேர் கண்கள் தோண்டப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மரங்களில் கட்டி வைத்திருப்பதாகவும் அவர்கள் முஸ்லிம்கள் என்று சில புலிகள் முனுமுனுத்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு அநியாயமாக கொல்லப்பட்ட முஸ்லிம்களில்
ஜலீஸ் அப்துல் கபூர் நஜீப் (அப்போது 28வயது –ஒரு பிள்ளையின் தந்தை)
கமால் அஜ்மயின் (அப்போது 26வயது –இரண்டு பிள்ளைகளின் தந்தை),
அப்துல் மஜீட் நஜீப் (அப்போது 31வயது –இரண்டு பிள்ளைகளின் தந்தை)
ஆகியோர் யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகத்தின் தலை சிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களாவர்.
சபருல்லாஹ் (28 வயது)
அப்துல் ஜப்பார் சுபைர் (அப்போது 29வயது –இரண்டு பிள்ளைகளின் தந்தை)
போன்றவர்கள் யாழ் முஸ்லிம் அணியன் தீவிர ரசிகர்கள் ஆவர். அதில் நகீப், அஜ்மயின் மற்றும் முத்து முஹம்மத் முனாஸ் (கீப்பர்) ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகளை திருமணம் முடித்தவர்கள். அவர்களில் முனாஸ் மட்டும் தப்பி ஓடி வந்து விட்டார்.
இவர்கள் கொலை செய்யப்பட்டது 2009 ஆம் மே மாதம் 19ஆம் திகதி முழு வன்னிப் பிரதேசத்தையும் இராணுவம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பின்னரே உறுதிப்படுத்தப்பட்டது. இவர்கள் கொலை செய்யப்பட்டு பல்லாண்டுகள் கடந்தாலும் இவர்களுடன் விளையாடி கலந்துரவாடியவர்கள் நெஞ்சங்களில் இவர்கள் இப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கான ஜனாஸாத் தொழுகையை யாழ் முஸ்லிம் விளையாட்டுக் கழகத்தினர் புத்தளம் ரத்மல்யாய பள்ளிவாசலில் நடத்தியிருந்தனர். யாழ்ப்பாண முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்ட இந்நாட்களில் அவர்களையும் நினைவு கூருதல் அவசியமாகின்றது.
எல்லாம் வல்ல இறைவன் அண்ணார்களின் பாவங்களை மன்னித்து சகீதுகளுடைய கூட்டத்தில் அவர்களை சேர்த்தருள்வானாக! ஆமீன். யாரப்பல் ஆலமீன்.
Post a Comment