Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றம் வரலாறு நெடுகிலும் ஞாபகப்படுத்தப்படவேண்டியது


வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம் நிகழ்ந்து 22வருடங்கள் நிறைவடைவதையிட்டு, யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், மற்றும் சமூகப்பொறுப்புகளை மையப்படுத்தி அஷ்-ஷெய்க் அய்யூப் அஸ்மின் (நளீமி) - பணிப்பாளர் தகவல் வழிகாட்டல் மத்திய நிலையம்- யாழ்ப்பாணம்- அவர்களுடன் யாழ் முஸ்லிம் மேற்கொண்ட விஷேட நேர்காணல்.

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் தற்போதைய நிலை யாது..?

நாம் எவருமே எண்ணியிராத சந்தர்ப்பத்தில் எம்மீது பலவந்தமாக வெளியேற்றம் திணிக்கப்பட்டது. நிர்ப்பந்தமாக நாம் இருப்பினைத் தொலைத்தோமதெமது எதிர்காலம் குறித்து தீர்க்கமான நிலைப்பாடுகள் அற்ற சூழலில் யுத்தம் நிறைவுக்கு வந்து நாம் மீண்டும் குடியேறுவதற்கான சூழல் உருவாகியது, அதுவும் நாம் எதிர்பாராத நிலையில் ஏற்பட்டதுவே. எனவே நாம் திட்டமிடலில்லாத சமூகமாகவே மீளவும் குடியேறியுள்ளோம், இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் மீளவும் குடியேறியுள்ள முஸ்லிம்களின் நிலைகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு எவ்வித மாற்றங்களையும் எம்மால் அவதானிக்க முடியாதுள்ளது என்ற சம்பிரதாயமான பதிலையே என்னாலும் சொல்ல வேண்டியுள்ளது. 2011 ஜனவரி மாதத்தில் வடக்கில் மீளக்குடியேறுவதற்கான சூழ்நிலை உருவாகியபோது ஏராளமானவர்கள் மீளவும் குடியேறும் எண்ணத்துடன் யாழ்ப்பாணத்தில் பதிவுகளை மேற்கொண்டிருந்தார்கள்.  ஆனால் வீடமைப்பு வசதிகள், மீள்குடியேற்ற ஊக்குவிப்புகள்  தொழில் வாய்ப்புகள், போன்ற சாதகமான நடவடிக்கைகள் எதுவும் மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கு கிடைக்கவில்லை என்ற ஒரு பாரிய ஆதங்கம் இருக்கின்றது. ஆனால் அவற்றையும் தாண்டி முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் எவ்வித முன்னேற்றங்களும் இடம்பெறாமைக்கான பல்வேறு காரணிகள் இருக்கின்றன. 

தரவுகளின் அடிப்படையில் கூறுவதாயின் மீளக்குடியேற்றத்திற்காக பதிவுகளை மேற்கொண்ட 2400 குடும்பங்களுள் 550 குடும்பங்களே யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாகத் தங்கியிருக்கின்றார்கள், ஏனையோர் மீளக்குடியேற்றத்திற்காக காத்திருக்கின்றார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் என எவற்றை அடையாளப்படுத்துகிறீர்கள்?

இது ஒரு முக்கியமான கேள்வியாகும், யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் பல்வேறு சவால்கள் இருக்கின்றன. என்னைப் பெறுத்தவரையில் அவற்றை இரண்டாக பிரித்து நோக்க முடியும் என நினைக்கின்றேன். ஒன்று அகக் காரணிகள் (உள்வீட்டு காரணிகள்) அடுத்து புறக்காரணிகள் (வெளியில் இருந்துவரும் காரணிகள்). இவற்றுள் மிகவும் முதன்மையாக தீர்க்கப்படவேண்டியது அகக் காரணிகள் (உள்வீட்டு காரணிகள்) என்னும் பகுதியையாகும். இங்கே நான் முன்வைக்கும் கருத்துகள் தனிப்பட்ட விதத்தில் புரிந்துகொள்ளப்படக்கூடாது, அத்தோடு எமது சமூகத்தின் உள்வீட்டு விவகாரம் என்பதனால் உணர்ச்சிவயப்பட்டு நோக்கப்படாமல் இங்கே இருக்கும் யதார்த்தங்களைக் கண்டுகொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரைக்கும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் சமூகப் பங்கெடுப்புகளில் இலங்கையின் ஏனைய நகர்ப்புற முஸ்லிம் சமூகங்களை விடவும் 20வருடம் பின்னே இருப்பதாகவே  கருதுகின்றேன். 1990களில் புலிகள் பலவந்தமாக வெளியேற்றியபோதும் அதன் பின்னரான இடம்பெயர்வு வாழ்வின்போதும் 2009களின் பின்னரான மீளக்குடியேற்றக் காலங்களிலும் அடையாளப்பட்டுத்தப்பட்ட்ட சமுதாய இலக்கு நோக்கி வழிக்காட்டப்படாத சமூகமாகவே யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் இருந்தது, இன்றும் இருக்கின்றது. இதற்கான மிக அடிப்படை காரணம் யுத்தம், பலவந்த வெளியேற்றம், சிதறடிக்கப்பட்ட சமூக வாழ்வு என்பவற்றோடு இணைந்ததாக யாழ் முஸ்லிம் சமூகத்தில் காணப்பட்ட அறிவுசார் சமூகத்தின் பொடுபோக்கான நிலைப்பாடுகளுமாகும். இன்றும்கூட இந்த நிலை தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன இதன் தாக்கங்கள் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் எல்லா செயற்பாடுகளிலும் தாக்கம் விளைவிக்கின்ற ஒன்றாக இருக்கின்றது. இது மீளக்குடியேற்றத்தையும் வெகுவாகப்பாதிக்கின்றது. இதன் விளைவுகளாக 

· நாம் ஏன் மீளவும் குடியேறவேண்டும், மீளக்குடியேற்றத்தில் இருக்கும் சாதகமான நிலைகள் என்ன, மீளகுடியேறாது விட்டால் எத்தகைய இழப்புகளை நாம் சந்திப்போம், போன்ற விடயங்களை சிந்திப்பதை விட்டும் அறிந்துகொள்வதை விட்டும்  அதற்காகத் தயாராக்குவதை விட்டும் மக்களைத் தடுக்கப்படுகின்றார்கள்.

· இருப்பு சார்ந்து யாழ் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற பாரிய சவால்கள் குறித்தும் இருப்பின் அவசியம் குறித்தும் அறிந்துகொள்வதற்கும் அதன்படி செயலாற்றுவதற்கும் முஸ்லிம் தலைவர்களும் புத்திஜீவிகளும் பின்வாங்குகின்றார்கள் 

· அதிகார, அரசியல், தலைமைத்துவ, பதவிநிலைப் போட்டிகள் மிகுந்த சமூகமாக யாழ் முஸ்லிம் சமூகம் மாற்றப்படுகின்றது.

· ஈமானிய கண்ணோக்கில் சமூக வழிகாட்டல் என்னும் அம்சம் அறவே கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாத நிலை தோன்றுகின்றது.

அடுத்து புறக்காரணிகள் (வெளியில் இருந்துவரும் காரணிகள்) வடபுலத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமையானது ஒரு நீண்ட நிகழ்ச்சி நிரலையும் ஒரு பாரிய பின்புலத்தையும் கொண்ட ஒரு விடயமாகும் எனவே அதனை அமுல் நடாத்திய புலிகள் இயக்கம் இன்று இல்லை, இதன் காரணத்தினால் குறித்த நிகழ்ச்சி நிரல் முற்றாக இல்லாமலாகிவிட்டது என்று அர்த்தப்படாது. அவை ஏதோ ஒரு விதத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடைகளை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன. அரசியல் கட்சிகள், அரச அதிகாரிகள், ஊடகங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், சமூகத்தலைவர்கள், மதத்தலைவர்கள் என்னும் பல்வேறு வடிவங்களில் அத்தகைய சவால்கள் எம்மை நோக்கி வந்த வண்ணமேயிருக்கின்றன. அவற்றை விரிவாக இங்கே குறிப்பிட முடியாவிட்டாலும் யதார்த்தமான நிலைமைகள் இதுவேயாகும்.
இந்தச் சவால்களை வெற்றிகொள்ள எவ்வாறான நடவடிக்கைகள் முடுக்கி விடப்படவேண்டும்?

ஓரிரு வசனங்களில் இதற்கான விடைகளைத் தந்துவிட முடியாது, இது பாரிய வேலைத்திட்டத்தை வேண்டி நிற்கும் வினாவாகும்.  ஏலவே குறிப்பிட்டதுபோல இரண்டு சவால்களை நாம் எதிர்கொள்கின்றோம். 

முதன்மையாக அகக்காரணிகளை நிவர்த்திக்கும் ஒழுங்கில் நோக்கும் பொழுது; அடிப்படைச் சமூக நலன் என்பதைத் தனியாகவும், சமூகச் செயற்பாடு என்பதை தனியாகவும் புரிந்துகொள்கின்ற சமூகச் செயற்பாட்டாளர்கள் உருவாகுவதே இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான முதன்மையான தீர்வாக சொல்லப்படவேண்டும். அடிப்படைச் சமூக நலன் என்பது மிகவும் பொதுவானது. இங்கே எமது அரசியல், சமூக, அந்தஸ்து வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் தீர்மானங்களை மேற்கொள்ள கடமைப்படுகின்றோம், சமூகச் செயற்பாடுகள் என்பது நான் மேலே குறிப்பிட்ட வேறுபாடுகளை சுமந்து நிற்பது. பொதுவாக ஒவ்வொரு சமூகச் செயற்பாட்டாளனும் தனது செயற்பாடுகளின் பின்னணியில் தனக்கென வகுத்துக் கொள்ளப்பட்ட அரசியல், சமூக, அடைவுகளை எதிர்பார்க்கின்றான். அது தவறான  விடயமல்ல. ஆனால் அத்தகைய சுயஇலாப நோக்கங்கள்; அடிப்படைச் சமூக நலனில் எதிர் மறையான விளைவுகளை ஏற்படுத்தும்போது அது சர்ச்சைக்குள்ளாகின்றது. 

உதாரணமாக மீள்குடியேற்றம் என்பது ஒரு அடிப்படைச் சமூக நலன் சார்ந்த அம்சமாகும். மீள்குடியேற்ற செயற்பாட்டின்போது அரசியல் நலன்களை முதன்மைப் படுத்தப்படுத்தினால் அங்கே சர்ச்சைகள் உருவாகின்றன. அல்லது பிரதேச, வர்க்க நலன்கள் முதன்மைப்படுத்தப்படும்போது சர்ச்சைகள் உருவாகின்றன. இதேபோன்று சமூகத்தின் பொதுவான பிரச்சினைகள், எதிரிகளைக் கையாளுதல், சமூகத்தீமைகளைக் கையாள்தல் போன்ற விடயங்களில் இவ்விதி பொருந்தும். பொதுவாக எமது யாழ் ம்முஸ்லிம் சமூகத்தின் சமூகச் செயற்பாட்டாளர்கள் தமது சொந்த அல்லது கட்சி நலன்களை முதன்மைப்படுத்துகின்றார்கள். இதனால் ஒரு சீரான சமூகச் செயற்பாட்டினுள் சமூகச் செயற்பாட்டாளர்களால் நுழைய முடிவதில்லை. இந்நிலை முதன்மையாகச் சீர்செய்யப்படவேண்டும். 

அடுத்து புறக்காரணிகள் விடயத்தில்;  வெளியேற்றும் மனோநிலை கொண்டோரின் செயற்பாடுகளை முறியடிக்க தேசிய சர்வதேசிய தொடர்புகள், சர்வதேசிய அரசுகளுடனான தொடர்புகள், அரச சார்பற்ற நிறுவனங்களுடனான தொடர்புகளை வலுப்படுத்துவதனூடாகவும் குறித்த விடயத்தை தேசிய, சர்வதேசிய மயப்படுத்துவதனூடாகவும் எதிர்கொள்ள முடியும் என நினைக்கின்றேன்.

யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் ஸ்தாபக செயலாளர் என்றவகையில் சம்மேளனத்தின் செயற்பாடுகள் தற்போது உறங்கு நிலையில் காணப்படுவதாக கூறப்படுகிறதே இது குறித்து…. 

யாழ்,கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் செயற்பாடுகள் உறங்கு நிலையில் காணப்படுகின்றது என்று குறிப்பிட முடியாது. மாற்றமாக எமது சமூக செயற்பாட்டாளர்களின் நிலைகளை வெளிப்படுத்தும் கண்ணாடியாக சம்மேளனம் காணப்படுகின்றது, என்று குறிப்பிடவேண்டும். ஒரு சமூகத்தைப் பிரதிபலிக்கும் அம்சங்களாக சமூக நிறுவனங்கள் காணப்பட்டுகின்றன, சமூக நிறுவனங்களின் கூட்டமைப்பாக சம்மேளனம் காணப்படுகின்றது. சமூக நிறுவனங்களின் உறங்கு நிலை சம்மேளனத்தினூடாக வெளிப்படுகின்றது. இந்த வினாவிற்கு பதிலளிப்பதனூடாக சம்மேளனம் குறித்து எனக்கிருக்கும் நிஜமான தோற்றப்பட்டை அல்லது எதிர்பார்ப்பை முன்வைக்க விளைகின்றேன். 

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு சுயாதீனமான சமூக அமைப்புகள், ஜும் ஆப் பள்ளிவாயல்கள், பள்ளிவாயல்கள், இருக்கின்றன, அதேபோன்று பல சமூகச் செயற்பாட்டாளர்கள் வேறுபட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள், இவர்கள் அனைவரையும் அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அடையாளம், சுயாதீனமான செயற்பாடுகள் என்பன காணப்படுகின்றன. 

யாழ்ப்பாணம் கிளிநொச்சி முஸ்லிம் சமூகத்தின் அடிப்படைச் சமூக நலன்களைக் கருத்தில்கொண்டு இத்தகைய சமூக அமைப்புகள், சமூகச் செயற்பாட்டாளர்கள், நிறுவனங்கள்  இடையே ஒரு இணைப்பை ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சியே சம்மேளனமாகும். 

இதன்படி ஒவ்வொரு அமைப்பும் தமது சுயாதீனமான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும், அவற்றின் சமூகப் பங்களிப்புகளை ஒருங்கிணைக்கும் ஒழுங்குபடுத்தும் அமைப்பாக சம்மேளனம் இயக்கத்தில் இருக்கும். எனவே சமூகத்தின் அடிப்படை நலனைக் காக்கும், முன்கொண்டு செல்லும் வலுவான கூட்டமைப்பாக சம்மேளனம் இருக்கும் என்பதுவே எமது எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் இங்கே வேறொரு தொழிற்பாட்டை நாம் அவதானிக்கின்றோம், சம்மேளனம் உருவாக்கப்பட்டதும் ஏனைய அமைப்புகள் செயலிழந்து போயின, பல சமூக அமைப்புகள் இறந்த நிலையிலேயே சம்மேளனத்தில் அங்கம் பெற்றன ஓரளவு இயக்கத்தில் காணப்பட்ட அமைப்புகளும் இயங்காமல் தூக்க நிலைக்கு சென்றுவிட்டன. இதன் விளைவாக சம்மேளனம் யாழ் முஸ்லிம்களின் சமூக அமைப்பாக அடையாளப்படுத்தப்படுகின்றது. நாளடைவில் ஏனைய அமைப்புகள் தேக்க நிலைக்குச் சென்றதைப்போல சம்மேளனமும் தேக்க நிலைக்குச் செல்லும், அதன் பின்னர் புதிய சமூக அமைப்புகள் மீண்டும் பூச்சியத்தில் இருந்து தோன்ற ஆரம்பிக்கும்.

இது ஒரு ஆரோக்கியமற்ற நிலையாகும், நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல எமது சமூகம், சமூகச் செயற்பாடுகள் விடயத்தில் 20 வருடங்கள் பின் தங்கியே இருக்கின்றது என்ற கருத்தானது இதன் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்படுகின்றது. சமூகத்தில் இருக்கும் சுயாதீனமான அமைப்புகள் தமது செயற்பாடுகளை மீளவும் ஆரம்பிக்க வேண்டும். அதனூடாக சம்மேளனம் பலமான அமைப்பாக கட்டியெழுப்பப்படும். 

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு, யாழ்ப்பாணத்திலும், யாழ்ப்பாணத்திற்கு வெளியிலும் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்கள் எத்தகைய சேவைகளை வழங்குகின்றன?

யாழ்ப்பாண முஸ்லிம்களுக்காக நிறுவப்பட்டுள்ள அமைப்புகள் இரண்டு தேவைகளுக்காக நிறுவப்பட்டுள்ளன ஒன்று அரசியல் தேவைகள், அடுத்து அரசியல் அல்லாத சமூகத் தேவைகள். அரசியல் சார்ந்த அமைப்புகள் குறித்து இங்கே கருத்து வெளியிடுவது பொறுத்தமானதாக இருக்காது. சமூகத் தேவைகளுக்காக நிறுவப்பட்டுள்ள அமைப்புகளில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் அமைப்புகள் தகவல் சேகரிப்பினை முதன்மைப்படுத்தும் அமைப்புகளாகவே இயங்குகின்றன, அவை ஓரிரு சமூக மேம்பாட்டு பணிகளிலும் ஈடுபடுகின்றன, யாழ்ப்பாணத்திற்கு வெளியில் இயங்கும் அமைப்புகள் அங்கு வாழும் யாழ் முஸ்லிம்களுக்கான சமூக நலப்பணிகளை முதன்மைப்படுத்தி இயங்குகின்றன. இருப்பினும் யாழ் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பிரதானமாகக் கொண்ட அமைப்புகளை எம்மால் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்திடையே காண முடியாமல் இருக்கின்றது.

தென்னிலங்கை முஸ்லிம் நிறுவனங்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கான சேவைகள் எந்தவகையில் அமைந்துள்ளன?

தென்னிலங்கை முஸ்லிம் நிறுவனங்களைப் பொறுத்தவரை அவற்றுக்கும் வடபுல முஸ்லிம் சமூகத்திற்கும் இடையே போதுமான தொடர்புகள் இருப்பதாக நான் உணரவில்லை, பொதுவான வீடமைப்பு மீள்கட்டுமானப்பணிகள் என பொதுவான அரச சார்பற்ற நிறுவனங்களின் பணிகளையே அவற்றால் மேற்கொள்ள முடியுமாக இருக்கின்றது. மாற்றமாக வடபுலத்தின் மீள்குடியேற்றம் என்னும் பெரும்பகுதியை புரிந்துகொண்டு செயலாற்றுகின்ற நிலைமை இன்னமும் ஏற்படவில்லை. அவ்வாறான ஒரு நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். 

SFRD, Muslim Aid, MFCD, போன்ற நிறுவனங்கள் வடபுலத்தில் நிகழ்ச்சித் திட்டங்களைக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரச சார்பற்ற நிறுவனங்களாகும், அதே போன்று இஸ்லாமிய இயக்கங்களும் வடபுலத்தில் கவனம் செலுத்துகின்றன, குறிப்பாக ஜமாஅதே இஸ்லாமி, தௌஹீத் ஜமாஅத் போன்ற இயக்கங்கள் காத்திரமான பணிகளை வடபுலத்தில் மேற்கொள்கின்றார்கள், ஆனால் அவர்கள் வடபுலத்தில் மக்கள் மயப்படுத்தப்படவேண்டிய தேவை அதிகம் இருக்கின்றது.

வடபுலத்திற்கும் அறபு நாடுகளுக்குமான தொடர்பினை குறித்த இஸ்லாமிய இயக்கங்களால் ஏற்படுத்த முடியும், அதனூடாக காத்திரமான பங்களிப்புகளை மேற்கொள்ள முடியும். அதுமாத்திரமல்ல தென்னிலங்கையில் தங்கியிருக்கும் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு ஊக்க சக்தியாக தென்னிலங்கை முஸ்லிம்கள் அவசியம் தொழிற்படவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்கள் மீது தமிழ் உயர் அதிகாரிகளின் பாரபட்சம் தொடர்வதாக குற்றம் சுமத்தப்படுகிறதே. இதிலுள்ள யதார்த்தங்கள் யாவை..?

நிச்சயமாக அவ்வாறான சில செயற்பாடுகளை நாம் வடபுலத்தில் அவதானிக்கின்றோம். தமிழ் உயர் அதிகாரிகள் என்னும்போது ஒட்டுமொத்தமாக எல்லா தமிழ் உயர் அதிகாரிகளும் முஸ்லிம்களுடைய விடயத்தில் பாரபட்சமாக நடந்துகொள்கின்றார்கள் என்று நாம் கருதமுடியாது. மாற்றமாக பக்கச்சார்பு எண்ணங்கொண்ட அல்லது முஸ்லிம்களுடைய மீள்குடியேற்றத்தை விரும்பாத அரச அதிகாரிகள் இவ்வாறு நடந்துகொள்கின்றார்கள், என்று நாம் கூறமுடியும். யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல, பொதுவாக வடமாகாணத்தில் இத்தகைய நிலைமையினை நாம் பரவலாக உணர்கின்றோம். மன்னார் நீதிமன்ற விவகாரம் போன்று வெளியில் வராத ஏராளமான நிகழ்வுகள் வடபுல முஸ்லிம்கள் விடயத்தில் நடந்தேறுகின்றன. மீள்குடியேற்றப் பதிவுகளில் காட்டப்படும் பாரபட்சங்கள், வாக்காளர் பதிவுகள், உதவித்திட்டங்களுக்கான முன்மொழிவுகள் என பொதுவாக முஸ்லிம்கள் புறக்கணிப்புகளைச் சந்திக்கின்றார்கள்.

யாழ் மாநகர சபையில் அதிகாரத்தில் இருக்கும் ஐந்து முஸ்லிம் பிரதிநிதிகளினால் கூட இன்றுவரை சொல்லும்படியாக யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எவ்வித நலன்களையும் பெற்றுத்தருவது சாத்தியமற்றுப்போயிற்று. அது மாத்திரமல்ல தொழில் அனுமதிப் பத்திரங்கள், சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதிப்பத்திரங்கள் என பல்வேறு வகைகளில் முஸ்லிம்கள் நெருக்குதல்களுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள்.

குறிப்பாக வர்த்தகத்தில் ஈடுபடும் முஸ்லிம்கள், அங்காடி வியாபாரிகள் என பலரும் தொல்லைகளை அனுபவித்த வண்ணமேயிருக்கின்றார்கள்.  

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்களில் ஒருதொகையினர் ஐரோப்பிய நாடுகளில் வாழும் நிலையில் அவர்களிடமிருந்து யாழ்ப்பாண முஸ்லிம் பிரதேசங்களுக்கு எத்தகைய உதவிகள் அவசியமென்பதை அறியத்தரமடியுமா?

ஐரோப்பாவில் வாழும் யாழ் முஸ்லிம்கள் பெரிதாக யாழ்ப்பாண முஸ்லிம்களின் விவகாரங்களில் கரிசனை காட்டவேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அவர்கள் அங்கு ஒரு பலவீனமான நிலையிலேயே இருக்கின்றார்கள்; இதனை ஐரோப்பிய தேசங்களில் இருந்து இலங்கைக்கு வந்து செல்கின்ற யாழ் முஸ்லிம்களை சந்திக்கின்றபோதும் அவர்களுடன் உறையாடுகின்றபோதும் நாம் அறிந்துகொள்கின்றோம். சீரற்ற தொழில் நிலைகள், அதிகப்படியான செலவினங்கள் என்பவற்றை அதற்கான காரணங்களாக அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அவர்களிடம் இருந்து நாம் எதிர்பார்க்கும் ஒரேயொரு விடயம் என்னவெனில் உங்களால் முடிந்தவரை யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் வட்டாரத்தில் விற்கக் காத்திருக்கும் காணிகளை கொள்வனவு செய்யுங்கள், அது ஒரு மிகப்பெரிய முதலீடாகும், நீங்கள் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாக இதுவே இன்றைய திகதியில் அமைந்திருக்கின்றது.

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் யாழ் முஸ்லிம் இணையத்தின் செல்வாக்கு? யாழ் முஸ்லிம்களுக்கு இந்த இணையம் பணியாற்றவேண்டிய பணிகள் யாவை? என குறிப்பிடமுடியுமா?

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் யாழ் முஸ்லிம் இணையத்தளம் குறிப்பிட்டுச்சொல்லும் அளவுக்கு தாக்கம் செலுத்துகின்ற ஒன்றாக இருக்கின்றமையினை எம்மால் பொதுவாக காண முடிகின்றது. அதற்கு நாம் அதனது இயக்குனர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் சொல்லிக்கொள்தல் அவசியமாகும். யாழ் முஸ்லிம்களின் இணைய ஊடகத்தேவைக்காகத் தொடக்கப்பட்ட இந்த இணையம் தற்போது தேசிய முஸ்லிம்களின் இணைய ஊடகத்தேவையினை நிறைவேற்றுகின்றது. இருப்பினும் யாழ் முஸ்லிம் சமூகத்தின் இணைய ஊடகத்தேவை இன்னமும் மிகைத்த அளவிலேயே இருக்கின்றது. யாழ் முஸ்லிம் இணையத்தில் யாழ் முஸ்லிம்களுக்கான பிரத்தியேக பக்கம் ஒன்றும் தேசிய சர்வதேசிய முஸ்லிம் சமூகத்திற்கான பக்கமொன்றும் வடவமைக்கப்படுமாயின் அது வரவேற்கத்தக்கது, யாழ் முஸ்லிம் இணையம் யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஊக்குவிக்கும் அடிப்படையில் இயங்குமாக இருப்பின் அது வரவேற்கத்தக்கது.

வடபுல முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் 22வது ஆண்டு நினைவு நிகழ்வுகளின் பிரதம ஏற்பாட்டாளர் என்றவகையில் குறித்த நிகழ்ச்சி தொடர்பில் ….

வடபுல முஸ்லிம்களின் இருப்பு புலிகளினால் பலவந்தமாகப் பறிக்கப்பட்டமையானது வடபுல முஸ்லிம்களின் வாழ்வில் என்றுமே மறக்கப்பட முடியாத நிகழ்வாகும். இது வரலாறு நெடுகிலும் ஞாபகப்படுத்தப்படவேண்டிய ஒரு விடயமாகும். இதனை ஞாபகப்படுத்துவதானது மீண்டும் இவ்வாறான ஒரு நிகழ்வு ஏற்படாதிருக்க வழிசெய்யும் என்பதுவே இதன் அடிப்படைத் தாத்பரியமாகும். இம்முறை எமது நினைவு தின நிகழ்வுகளை நாம் பின்வரும் முக்கிய விடயங்களை அடிப்பட்டையாகக் கொண்டு ஏற்பாடு செய்கின்றோம்.
வடக்கு முஸ்லிம்களினதும் தாயகமே!

வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தையிட்டு நாம் வருத்தமடைகின்றோம்!

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் துரிதமடைய நாம் எல்லோரும் ஒத்துழைப்போம்!

வடபுலத்தில் தமிழ் முஸ்லிம் நல்லுறவு செழிக்க நாம் உறுதிபூணுவோம்!

இந்த அடிப்படைக்கருத்துகளோடு வடபுலத்தின் தமிழ் சமூகத்தை இணைத்துக்கொள்வதும் அவர்களது பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்வதுவும் எமது பிரதான நோக்கமாக இருக்கின்றது. வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தை பொதுவாகவும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தை குறிப்பாகவும் குறிக்கின்ற ஒக்டோபர் 30ம் நாள் ஒரு விஷேட நிகழ்வையும் ஒன்றுகூடலையும் நாம் ஏற்பாடு செய்திருக்கின்றோம். மேற்படி ஒன்றுகூடலில் “யாப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருக்கின்ற காரணிகள் “ என்னும் மகுடத்தில் பேராசிரியர் எச்.எஸ் ஹஸ்புல்லாஹ் அவர்களும் “யாழ் மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எவ்வாறு ஒத்துழைப்பு நல்கலாம்” என்னும் தலைப்பில் பேராசிரியர் இரா. சிவச்சந்திரன் அவர்களும் விஷேட பகிர்வுகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சபையோரின் கருத்துக்களையும் உள்வாங்கும் நிகழ்வும் இணைக்கப்பட்டுள்ளது. 




No comments

Powered by Blogger.