Header Ads



பலஸ்தீன் மேற்குக்கரை தேர்தலில் பதா வெற்றி - விமர்சிக்கிறது ஹமாஸ்



(TN)

பலஸ்தீனின் மேற்குக் கரையில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற்றதாக ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பதா அமைப்பு அறிவித்துள்ளது. இந்த தேர்தலை ஹமாஸ் அமைப்பு புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.

எமது அரசியல் திட்டத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த வெற்றியை கருதுவதாக பதா அமைப்பின் பேச்சாளர் அஹ்மட் அஸ்ஸாப் அறிவித்துள்ளார். இதனையொட்டி மேற்குக் கரையில் பதா அமைப்பின் ஆதரவாளர்கள் நேற்று வெற்றியை கொண்டாடினர். இந்த தேர்தல் மேற்குக்கரையின் 93 நகரங்கள் மற்றும் கிராமங்களில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

எனினும் பலஸ்தீன மத்திய தேர்தல் ஆணைக் குழுவின் தலைவர் ஹன்னா நஸ்ஸர் தேர்தலின் இறுதி முடிவை உத்தியோகபூர்வமாக அறிவிக்காத நிலையிலேயே பதா அமைப்பு தமது வெற்றியை நேற்று காலை அறிவித்திருந்தது. இதில் மேற்குக் கரையில் வாக்களிக்க தகுதிபெற்ற 505,600 வாக்காளர்களில் 277,000 பேர் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் 54.8 வீதமான வாக்கு பதிவு இடம்பெற்றதாக ஹன்னா நஸ்ஸர் குறிப்பிட்டார்.

இது கடந்த 2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கு பின்னர் மேற்குக் கரையில் நடந்த முதலாவது தேர்தலாகும். கடந்த பொதுத் தேர்தலில் ஹமாஸ் அமைப்பு பாரிய வெற்றியை ஈட்டிக்கொண்டது. எனினும் இம்முறை தேர்தலை ஹமாஸ் புறக்கணித்ததால் பதா அமைப்பின் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தது. பதா அமைப்புடனான ஐக்கிய அரசு ஒன்றை அமைக்கும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்தே மேற்குக் கரை உள்ளூராட்சி தேர்தலை ஹமாஸ் புறக்கணித்தது.

இதனால் இந்த உள்ளூராட்சி தேர்தலில் பதா அமைப்பு வலுவில்லாத இடதுசாரி கட்சிகளை எதிர்த்து போட்டியிட்டது. எனினும் கடந்த சனிக்கிழமை தேர்தல் மேற்குக் கரையின் 354 மாநகர சபைகளின் 93 சபைகளுக்கே இடம்பெற்றது. இதில் 179 இடங்களுக்கு போட்டியின்றியே வேட்பாளர்கள் தேர்வாயினர். எஞ்சிய 82 பகுதிகளுக்கு எதிர்வரும் நவம்பர் 24 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் ரமல்லாவிற்கு அருகில் இருக்கும் எல்பைரா பாடசாலையில் தனது வாக்கை பதிவு செய்த ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாவில் தேர்தல் நடத்தப்படாதற்கு தமது அதிருப்தியை வெளியிட்டார். 'எமது சகோதரர்களான ஹமாஸ் அமைப்பினர் காசாவில் ஜனநாயக செயற்றிட்டத்தை கொண்டடு வருவார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம். அது உள்ளூராட்சி தேர்தல் மட்டுமல்ல பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தலையும் முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்' என்று மஹ்மூத் அப்பாஸ் குறிப்பிட்டார்.

எனினும் மேற்குக் கரை தேர்தல் பலஸ்தீனத்திற்குள் இரு அரசியல் கட்சிகளையும் மேலும் பிளவுபடுத்துவதாக அமைந்திருப்பதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது.  'இந்த தேர்தல் மேலும் பிளவை ஏற்படுத்துவதே ஒழிய தேசிய ஒற்றுமைக்கு வழிவகுக்காது. இது பலஸ்தீன மக்களுக்கான தேர்தல் அல்ல பதா அமைப்புக்கானது' என்று ஹமாஸ் அமைப்பின் பேச்சாளர் பவ்வி பர்ஹும் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். 


No comments

Powered by Blogger.