Header Ads



ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஹஜ் பெருநாள் வாழ்த்து..!


உலகெங்கிலும் பரந்துவாழும் தங்களது சகோதர முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை இஸ்லாமிய சமூகத்திற்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்துள்ள ஹஜ் வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தியாகத் திருநாளான இந்த ஹஜ்ஜுப் பெருநாள் இஸ்லாமிய உலகின் மிகப் பெரும் வருடாந்த நிகழ்வான ஹஜ் யாத்திரையையும் உயர்ந்த தியாகத்தையும் நினைவூட்டுகிறது. இவ்வருடமும் ஆயிரக்கணக்கான இலங்கை முஸ்லிம் யாத்திரிகர்கள் புனித மக்கா நகரில் பல இலட்சக்கணக்கானவர்களுடன் இணைந்து ஹஜ் கடமையை நிறைவேற்று கின்றனர்.

பல்வேறு தேசங்களையும் கலாசாரங்களையும் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து அல்லாஹ்வின் மகத்துவத்தை பரைசாற்றுகின்ற இக்காட்சி இஸ்லாமிய உலகின் ஐக்கியத்தை அடையாளப்படுத்துவதாயுள்ளது.

தங்களது சமயத்தின் உள்ளார்ந்த பண்பான இந்த ஐக்கிய உணர்வுடன் இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டினதும் எமது மக்களினதும் முன்னேற்றத்திற்காக குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். மகிழ்ச்சி நிறைந்த இந்த ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் ஏனைய எல்லா சமூகங்களுடன் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் தேசிய ஐக்கியத்துடன் சுபீட்சமாக வாழ்வதற்கு அவர்களின் அர்ப்பணத்தை வலுப்படுத்தவேண்டும். இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஈத் முபாரக் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.