Header Ads



எம்மை பாதுகாப்பதற்கு எவருமில்லை - மியன்மார் முஸ்லிம்கள் கதறல்..!



(Tn)

ஒக்டோபர் 21 ஆம் திகதி முஸ்லிம்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையில் மீண்டும் கலவரம் வெடித்தது. இதில் 84 பேர் கொல்லப்பட்டதாகவும் 129 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசின் உத்தியோகபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அரசின் அறிக்கையை விடவும் பல மடங்கு அதிகமானது என மனித உரிமை அமைப்புகள் நம்புகின்றன.

“அரசு பிரச்சினையை தீர்க்கவில்லை. படையினர் எம்மை பாதுகாக்கவில்லை” என்று கலவரம் ஏற்பட்ட ரகினெ மாநில தலைநகரான சித்வேயுக்கு அருகில் இருக்கும் அகதிகள் முகாமில் வசித்துவரும் கியவ் மியின்ட் என்ற ரொஹிங்கியே முஸ்லிம் குறிப்பிட்டுள்ளார். பக்டவ் பகுதியில் இருக்கும் தமது வீடு தீக்கிரையாக்கப் பட்டதைத் தொடர்ந்து இவர் இந்த அகதி முகாமிற்கு தப்பி வந்துள்ளார்.

“நான் நரகத்தில் இருப்பது போல் உணர்கிறேன்” என்று கூறிய அவர், “எம்மை எவரும் பாதுகாப்பதில்லை, எங்கு போவதற்கும் வழியில்லை. தற்போது வாழ்வதற்கு தொழிலுமில்லை” என்றார்.

கலவரம் இடம்பெற்ற கியவ்க்டோ கிராமத்தைச் சேர்ந்த ரெகினெ பெளத்தரான 37 வயது வியாபாரி மவுஸ்தான் நெயின் தொலைபேசி ஊடாக அரசுக்கு எதிராக தமது அதிருப்தியை வெளியிட்டார். “அரசு பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கவில்லை. நாம் கையறு நிலையில் இருக்கிறோம். முஸ்லிம்களுடன் தற்போது எம்மால் இணைந்து வாழ முடியவில்லை” என்றார்.

மவுங் தான் நெயினும் இந்த கலவரத்தால் தனது வீட்டை இழந்துள்ளார். அமைதியை குலைத்ததாக ரொஹிங்கிக்கள் மீது அவர் குற்றம் சாட்டினார். “ஐ.நா.வின் இலவச உணவை பெறுவதற்காக இந்த மோசமான முஸ்லிம்கள் தமது வீடுகளை தாமே தீவைத்துக் கொள்கிறார்கள்” என்றும் அவர் குற்றம் சாட்டினார். எனினும் கடந்த சனிக்கிழமை முதல் அமைதி நிலவுவதாக கலவரம் ஏற்பட்ட ரகினெ மாநிலத்தின் அரச பேச்சாளர் மியோ தான்ட் கூறினார். மாநிலத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். எனினும் அது குறித்து தெளிவான விபரத்தை அவர் வெளியிடவில்லை.

மியன்மாரில் 80000 க்கும் அதிகமான ரொஹிங்கிக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்துவருகின்றனர். பங்காளி மொழி பேசும் இவர்கள் அயல் நாடான பங்களாதேஷில் இருந்து சட்டவிரோதமாக மியன்மாருக்குள் ஊடுருவியதாக அந்நாட்டு அரசு கருதி வருகிறது. இதனால் அரசு அளவிலும் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1982 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் மியன்மாரில் இருக்கும் 135 இனக் குழுக்களில் இருந்து ரொஹிங்கியே முஸ்லிம்கள் அகற்றப்பட்டனர். இதனால் இவர்களுக்கு சிவில் உரிமைகள் மற்றும் பிரஜா உரிமையும் மறுக்கப்பட்டது.

இதுதவிர ரொஹிங்கியே முஸ்லிம்களின் இன அடையாளம் பங்களாதேஷ் நாட்டவர்களை போல் இருப்பதும் இவர்களின் உரிமைகள் மறுக்கப்பட முக்கிய காரணியாக இருந்ததாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. மறுபுறத்தில் பங்களாதேஷ¤ம் இவர்களை தமது நாட்டு பிரஜைகள் என்று ஏற்க மறுத்து வருகின்றனர்.கடந்த ஜூனில் ஏற்பட்ட வன்முறைகளில் 75,000 பேர் இடம்பெயர்ந்தனர். இதில் பெரும்பாலானோர் ரொஹிங்கியே முஸ்லிம்கள் என மியன்மாருக்கான ஐ.நா. தூதுவர் அஷொ நிகம் குறிப்பிட்டார். இதுதவிர தற்போது மேலும் 27,300 முஸ்லிம்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.




No comments

Powered by Blogger.