Header Ads



ஆடை மறைப்பதற்கா..? திறப்பதற்கா..??



(சமுதாய அரங்கம்)

மனித இனத்தின் பெரும்பகுதி இரண்டு உந்துதல்களுக்கிடையே சிக்கியுள்ளது

1. தன்னை மறைக்க வேண்டும் என்ற வெட்க உணர்வு

2. தன்னை வெளிக்காட்ட வேண்டும் என்ற உணர்வு

அதாவது தன்னை மறைப்பதா? அல்லது திறப்பதா?

இது ஏன்? என்ன நடந்துகொண்டிருக்கிறது?

அறிவியல் இதற்கு பதில் கூற முடியாது . அது இந்த சிந்தனைகளின் ஊற்றை ஊடுருவிப்பார்க்க முடியாது .

மேலும் விஞ்ஞான கண்டுப்பிடிப்புகளில் அதிகமானவைகள் சார்லஸ் டார்வின் என்பவரின் அடிவருடிகளின் ஆதிக்கத்திலும், ஆளுமையிலுமே இருக்கிறது .

டார்வினிஸம் என்பது ஒரு நம்பிக்கையே அன்றி அது ஒரு விஞ்ஞானம் அல்ல.

அவர்களது நம்பிக்கை ஒரு உண்மையை விளங்க மறுக்கிறது . அனைத்து மிருகங்களும் குளிருளிருந்தும் ,வெயிலிருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்ள தோல் இருக்கும்போது மனிதர்களுக்கு அதுபோன்று இல்லை.

குரங்குகள் உடலில் துணி இல்லாமல் வாழும். மனிதனால் முடியாது.

இதற்கெல்லாம் திருக்குர்ஆன் அழகிய விளக்கங்களை தருகிறது .

நமது உடல் மிருகங்களைபோன்று தண்டிமனான தோலைக் கொண்டிருக்கவில்லை . நமது தோல் மிகவும் மெலிதானது . அதனை மூடிவைத்து பாதுகாக்க வேண்டிய அளவுக்கு பலகீனமானது .

அனைத்தையும் படைத்த அல்லாஹ் எப்பொழுதும் ஆடையை தேவையாக்கி மனிதனை படைத்துள்ளான் .

அத்தோடு ஹயா என்னும் வெட்க உணர்வுடனும் மனிதனை படைத்துள்ளான்.இந்த வெட்க உணர்வுதான் மனிதனுக்கு தனது உடலை மறைக்கவேண்டும் என்ற உந்துதலை தருகிறது .

ஷைத்தானின் முதல் செயலே ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் வழிகேடுத்ததுதான். அதனால்தான் அவர்களின் வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன.இதனை திருக்குர்ஆன் இப்படி கூறுகிறது .

இவ்வாறு அவன் அவ்விருவரையும் ஏமாற்றி அவர்கள் (தங்கள் நிலைப்பாடுகளிலிருந்து) கீழே இறங்கும்படி செய்தான். அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை) சுவைத்தபோது அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று.அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர். (அல் அஃராஃப் 7:22)

இந்த பின்னணியில் ஆடை பற்றிய முக்கியத்துவத்தை நாம் உணரலாம் .

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம் . ஆயினும் தக்வா(பயபக்தி) எனும் ஆடையே(அதைவிட) மேலானது.இது அல்லாஹ்வுடைய(அருளின்)அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும். (இதைக்கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக. (அல் அஃராஃப் 7:26)

அல்லாஹ் எல்லா மனிதர்களையும் விளித்து இதனைசொல்கிறான். இந்தபிரபஞ்சத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஆடை அணிய அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

மேலும் திருக்குர்ஆன் ஷைத்தானின் தீங்குகளை விட்டும் பாதுக்காப்பாக இருக்கும்படி நம்மை எச்சரிக்கின்றது.

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து சுவனம்பதியை விட்டு வெளியேற்றியது போல் அவரன் உங்களை (ஏமாற்றி) சோதனைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக அவனும் அவன் கூட்டத்தாரும் உங்களை கவனித்துகொண்டிருக்கிரார்கள். (அல் அஃராஃப் 7:27)

ஆடையணிதலின் முக்கியத்துவத்தை உணர்ந்த நாம், எவ்வாறு அதனை உடுத்துவது எதை எதை மறைப்பது என்பதை பற்றி நம்மை படைத்த இறைவன் என்ன சொல்கிறான் எனப்பார்க்க வேண்டும்.

திருக்குரானும் நவிவழியும் இந்த விஷயத்தில் நிறைய வழிக்காட்டுதல்களை நமக்கு வழங்கியிருக்கிறது. அவைகளை நான்கு அம்சங்களாக பிரிக்கலாம்.

1. நமது ஆடை நமது உடலை நன்றாக மறைக்க வேண்டும் .

நன்றாக என்றால் ....

ஷரீஅத் இதனை தெளிவாக உணர்த்துகிறது.

ஆண்களுக்கு உடலின் நடுப்பகுதியான தொப்புள் தொட்டு முழங்கால்வரை மறைக்க சொல்கின்றது .

பெண்களுக்கு முகத்தையும் இரு முன் கைகளையும் தவிர உடல் முழுவதும் மறைக்க சொல்கின்றது.

ஆடைகள் மெலிதாக இருக்க கூடாது . இறுக்கமாகவும் இருத்தல் கூடாது.

2. நமது ஆடை நமக்கு அலங்காரமாக, அழகைத் தருவதாக இருக்கவேண்டும். அது நமக்கு ஒரு மரியாதையான தோற்றத்தை தரவேண்டும் .

ஆண்களுக்கு சதர் என்னும் குறைந்த பட்ச தேவைக்கு மேல் முழு உடலையும் மூடுவது மரியாதை தரும் செயலாகும்.

பெண்களுக்கு அவர்களுடைய ஆடை அவர்களை கண்ணியமான முறையில் அடையாளப்படுத்திக் கொள்வதாக அமையவேண்டும். அவர்களை தொல்லைப்படுத்துவதாக அமையக்கூடாது.

அத்தோடு ஹிஜாப் என்பது பிற ஆடவரின் நிலைத்த பார்வையை விட்டும் அவர்களை பாதுகாக்கிறது .

3. நமது ஆடை நமது இஸ்லாமிய அடையாளத்தை பிரதிபலிப்பதாக அமைய வேண்டும். குறைந்தபட்சம் அது நாம் பிற மதத்தை பின்பற்றுபவர்களல்ல என்பதை உருதிபடுத்துவதாய் இருக்கவேண்டும்.

கூடுதலாக நாம் முஸ்லிம்கள் என்பதை அது உணர்த்துவதாய் இருக்கவேண்டும்.

மேலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆடைகளில் வித்தியாசம் இருக்கவேண்டும். இருபாலரும் ஒரே மாதிரி ஆடை கூடவே கூடாது.

4. நமது ஆடை மிகவும் பகட்டாகவும், கர்வத்தை காட்டுவதாகவும் அமையக்கூடாது.

ஒரு நபிமொழி வருமாறு 'உங்களுக்கு விருப்பமானவற்றை உண்ணுங்கள். உங்களுக்கு விருப்பமானவற்றை உடுத்துங்கள். ஆனால் இரண்டு விஷயங்களை விட்டும் தவிர்த்துகொள்ளுங்கள்: 1. வீண்விரயம் 2. கர்வம். (புகாரி)

அபூதாவுதில் இடம்பெறும் ஓர் ஹதீஸ்: ஜாபிர் பின் சுலைம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். அந்த சகாபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சில உபதேசங்களை வேண்டி நின்றார்கள்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 6 அம்சங்களை உபதேசிக்கிறார்கள். அதில் ஒன்று "உமது ஆடையை கெண்டைக்காலுக்கு கீழே ஒருபோதும் விடாதீர்.ஏனெனில் அது கர்வத்தின் அடையாளமாகும்.அல்லாஹ் கர்வத்தை விரும்பமாட்டான்".

இஸ்லாம் குறிப்பிட்ட ஆடைபாணியை சொல்லவில்லை. நமது தேவைகேற்ப சூழ்நிலைக்கு தக்கவாறு, விருபத்திற்கேற்ப ஆடைகளை அணிவதற்கு அனுமதியளிக்கிறது .ஆனால் இஸ்லாம் சொல்லும் வரையறைக்குள் அந்த ஆடை அமைந்திருக்கவேண்டும்.

இதுவே நிரந்தர வெற்றிக்கு வழிகோலும். ஆம்! நிரந்தர வெற்றி இஸ்லாத்திடமே உள்ளது.

No comments

Powered by Blogger.