இருப்பை இழந்து தவிக்கும் வடக்கு முஸ்லிம்கள்..!
By SNM.SUHAIL
அவரவர் வேலைகளை பார்த்தபடி ஒவ்வொருவரது வாழ்க்கையும் வேகமாக சென்றுகொண்டிருக்கிறது. இவ்வாறு வேகமான கால ஓட்டமும் வாழ்க்கைமுறையும் இருக்கின்ற நிலையில் ஒருசில தொகுதியினர் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் அவர்களை பற்றி எந்தவொரு சமூகமும் அலட்டிக்கொள்ளாதிருப்பதும் பாரதூரமான விடயம் என்பதை எம் சமூகம் இன்னும் புரிந்துகொள்ளாமல் இருக்கின்றது. இது தொடர்பில் மக்களை தெளிவுபடுத்த சமூகத்தின் முதுகெலும்புகள் மறந்து விட்டன. எனவே இந்த தினங்களில் வட மாகாண முஸ்லிம் சோந்தங்களைப் பற்றி கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டியும் இருக்கின்றது. இல்லையேல் வடபகுதிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்தார்களா? இல்லை அப்படியொரு சமூகம் இருந்ததா? என்பதை இன்னும் ஓரிரு தசாப்தங்கள் கடந்த பின்னர் முழு உலகமும் மறந்து விடலாம்.
வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தை வருடாவருடம் நினைவு கூறுவதால் மட்டும் எதையும் சாதிக்க முடியாது. அடுத்து வரும் வருடங்களிலும் கடந்த காலங்களை போன்று நினைவுபடுத்திக் கொண்டேயிருப்பதா? அல்லது அடுத்து வரும் ஒவ்வொரு கணத்திலும் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்குதீர்வுகிட்ட என்ன செயலாம் என திட்டமிட்டு அதனை அமுல் நடத்துவதா? இதனை ஒவ்வொரு மனித நேயமுள்ளவரும் சிந்திக்க வேண்டியுள்ளது.
வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் ஆயுத முனையில் இன சுத்திகரிப்புக்குள்ளாகி வெளியேற்றப்பட்டு இம்மாதத்துடன் 22 வருடங்கள் நிறைவு பெறுகின்றன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதிப்பகுதிகளில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலுள்ள முஸ்லிம்கள் இரண்டரை மணி நேர காலக்கெடுக்குள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். மன்னார் மற்றும் வவுனியா மாவட்ட முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்து வெளியேற்றிய போது எந்தவொரு உடைமைகள், சோத்துக்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களையோ பணத்தையோ எடுத்துச் செல்ல தடை விதித்தனர்.
இதனால் அனைத்தையும் இழந்த மக்கள் வெறுங்கையுடன் புத்தளம் நோக்கி வந்தனர். புத்தளம் மாவட்ட முஸ்லிம்களும் ஏனையோரும் அம்மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து தமது சொத்துக்கள் பலவற்றை அம்மக்களுக்காக அர்ப்பணித்தனர்.
வெளியேற்றப்பட்டு வந்த எம்மை புத்தளம் மக்கள் அரவணைக்காவிட்டிருந்தால் எமது நிலைமை மிகவும் மோசமானதாக இருந்திருக்கும் என கூறுகின்றார் மன்னார் மாவட்டத்தை பூர்வீகமாகவும் தற்போது புத்தளம் உளுக்காபள்ளம் கிராமத்தில் வசிப்பவருமான ஏ. சி. நௌபில் ஆசிரியர். மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினரான இவர் தனது அகதி வாழ்வின் ஆதங்கங்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார்.
உளுக்காபள்ளத்தில் 1500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்கள் அனைவருமே மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இடம்பெயர்ந்து வந்த பின்னர் பல பாடசாலைகளிலும் அங்கும் இங்குமாக இருந்து விட்டு 1994 ஆம் ஆண்டளவில் தமக்கு சோந்தமான பணத்தை கொடுத்து காணியை வாங்கி இந்த இடத்தில் குடியிருக்கின்றோம். எந்த உதவிகளும் கிடைக்காத நிலையில் இங்கு நாமே வீடுகளை அமைத்துக் கொண்டோம். தொடர்ச்சியாக 22 வருட அகதி வாழ்வு எமக்கு பல சவால்களை ஏற்படுத்திவிட்டது.
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் வடமாகாண முஸ்லிம்கள் மீள்குடியமர்வதற்காக தமது சோந்த இடங்களில் பதிவு செய்ய வேண்டும் என அரசாங்கம் அறிவித்தது. இதற்கமைய புத்தளத்தில் பதிவை நீக்கி அனைவரும் சோந்த இடங்களில் பதிவுகளை செது கொண்டனர்.
தொடர்ந்தும் சோந்த இடங்களுக்கு மீளத் திரும்பும் அவாவில் அனைவருமாக சென்று பார்த்தனர். எனினும் ஒரு சிலரை தவிர அனைவரும் அகதி முகாம்களுக்கே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் அங்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடையாது. இந்த நிலையில் அங்கு சென்று வாழக் கூடிய சூழல் இல்லாமையால் எம்மில் பலர் மீள சோந்த இடங்களுக்கு செல்வதற்கு முற்றிலும் மறுக்கின்றனர். அதற்கு உரமூட்டும் வகையில் அங்கு சென்று குடியமர்ந்தவர்களும் இன்று வரை முழுமையான அடிப்படை வசதிகளின்றி தவிக்கின்றனர்.
அத்தோடு நாம் அங்கும் இல்லாமல் இங்கும் இல்லாமல் இரண்டும் கெட்டான் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். எம்மில் பலரது பெயர்கள் வாக்காளர் இடாப்பில் இல்லை. உதாரணத்திற்கு மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசத்தில் 1990 ஆம் ஆண்டு 4090 பேர் வாக்காளர் இடாப்பில் பதிவாகியிருந்தனர். ஆனால் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி 2900 பேரின் பெயர்களே பதிவாகியுள்ளன. தற்போதைக்கு 4 மடங்காகியிருக்கும் சனத்தொகையில் 25 வீதத்திற்கும் குறைவானவர்களுக்கே வாக்குரிமை கிடைத்துள்ளது. ஏனையோரின் உரிமைகள் பரிதாப நிலையில் உள்ளது. புத்தளத்தில் எந்த பதிவும் இல்லாமையால் இங்கும் வாக்காளர் இடாப்பிலும் பெயர் நீக்கப்பட்டுள்ளது.
இதனால் நாம் எந்த ஒரு அரச அலுவல்களையும் செய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வாப்புகளையும் இழக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அதனால் ஒட்டுமொத்த வடமாகாண மக்களும் பாதிக்கப்படுகின்றனர் என்றார் நௌபில்.
தொடர்ந்தும் அகதி என்ற நிலையில் இருப்பது எமக்கு மிகவும் வேதனையாகவே இருக்கிறது. என்று தனது மனதில் உள்ள சுமைகளை எம்மிடம் இறக்கி வைக்கிறார் யாழ். புதிய சோனக தெருவை சோந்த இடமாகவும் தற்போது புத்தளம்-பரீதா பாத் அகதி முகாமில் வசித்து வரும் இப்ராஹிம் ஹமீதா. நாம் வடக்கில் பிறந்து அங்கேயே வளர்ந்து தற்போது இங்கு வசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளோம். ஆனால் புதிதாக பிறந்த சந்ததியினர் இங்கேயே பிறந்தவர்கள். ஆனாலும் அவர்களும் அகதிப் பிள்ளைகள் என கூறப்படுவது எமக்கு மனவருத்தத்தை ஏற்படுத்துகின்றது. எமக்கு வடக்கில் சோந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. எமது காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதனை மீட்க முடியாதுள்ளது. அதற்கு பல வகையில் போராடி வருகிறேன். ஆனாலும் பலன் கிடைத்தபாடில்லை.
யாழ். சோனகத் தெருவில் முஹம்மது அலி மற்றும் அப்துல் அலி ஆகிய சகோதரர்களுக்கு சோந்தமான காணியில் வசித்து வந்தோம். இருந்தாலும் தற்போது அங்கு பாலர் பாடசாலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நாம் அந்த இடத்தை மீளப்பெற்று குடியேறி செல்வதற்கு பல தடைகள் காணப்படுகின்றன. அரசாங்க அதிகாரிகளினது ஒத்துழைப்பும் எமக்கு கிடைத்தபாடில்லை.
இவ்வாறான நிலையில் அங்கு சென்றால் நாம் மிகவும் கஷ்டப்பட வேண்டிய நிலை ஏற்படும். இங்கு தொழில் போட்டிகள் என பல பிரச்சினை இருப்பினும் ஓரளவு வாழ்வதற்கான சூழல் காணப்படுகிறது என்றார்.
சாதாரண மனிதன் வாழ்வதற்கு ஏதுவான சூழல், மற்றும் வீடுகள், ஏனைய வசதிகள் இல்லையெனில் பெரும் அவதிகளை எதிர்நோக்குகின்றனர். இந்த நிலைமை பராமரிப்பில் இருக்க வேண்டிய முதியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் ஏற்படுமாயில் அது மிகவும் பரிதாபகரமானதே.
அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் தற்போது வெகுவாக குறைந்துள்ள நிலையில் அவர்களின் உதவிகள் மக்களை சென்றடைவது மிகவும் அரிதாகியுள்ளன. இவ்வாறானதொரு நிலையில் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சிரேஷ்ட பிரஜை ஒருவரை சந்தித்த போது ‘நீங்கள் எமக்கு வீடு கட்டித் தருவீங்களா’ என்று ஏக்கத்தோடு கேட்கிறார்.
இ.காமிலா (வயது 68) தன்னந்தனியே ஒரு ஓலை கொட்டிலில் வசித்து வருகிறார். யாழ். புதிய சோனகத் தெருவில் இருந்த தமது சோந்த காணிகளை விற்று தனது மூன்று பெண் பிள்ளைகளையும் திருமணம் செது கொடுத்துள்ளார். உணவு உட்கொள்வதற்கு தனது மகளின் வீட்டுக்கு செல்வார். அடுப்புத் திண்ணையில் அமர்ந்தபடி ‘இன்றோ, நாளையோ என்று இருக்கும் நான் சொந்த இடத்துக்கு சென்று என்ன செய. அங்கு எனக்கென்று தற்போது ஒன்றும் கிடையாது. நான் இருக்கும் வரை ஒழுங்காக இருப்பதற்கு வீடு தான் வேண்டும். மழைகாலத்தில் குடிசை முழுவதும் நீர் வந்து விடும். அந்த நேரங்களில் மிகவும் கஷ்டப்படுவேன். நான் தனியாக இந்த குடிசையில் இருப்பதால் உலக வங்கி வீட்டு திட்டத்திற்குள் உள்வாங்கப்படவில்லை’ என்றார்.
இவ்வாறு பல முதியவர்கள் உதவித் திட்டங்களில் உள்வாங்கப்படாமல் இருக்கின்றனர். அதேபோன்று 1980 களுக்கு பிறகு பிறந்தவர்கள் என்பதற்காக இன்னும் சில இளம் தம்பதிகளும் இவ்வாறான பல திட்டங்களில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. சில நிறுவனங்களினதும் அதிகாரிகளினதும் பாரபட்சம் காரணமாக தாம் இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் எனவும் கூறுகின்றனர்.
சொந்த இடத்தில் காணி இல்லாதவர்கள் புத்தளத்திலேயே தொடர்ந்து இருக்க விரும்புகின்றனர். சொந்த காணியிருந்த போதிலும் அடிப்படை வசதிகள் எதுவும் ஏற்படுத்திக் கொடுக்கப்படாமையால் அங்கு செல்வதற்கு அதிகமானவர்கள் தயங்குகின்றனர். அத்தோடு வாக்காளர் இடாப்பில் வடக்கு முஸ்லிம்களின் பெயர்கள் இடம்பெறாமையால் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலம் எதிர்காலத்தில் கேள்விக்குறியாகப் போகிறது என்பதை புரிந்து கொண்டு சமூக ஆர்வலர்களும் தலைமைகளும் துரித நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முஸ்லிம்களின் இருப்பை பாதுகாக்க முடியும்.
வடபுல முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்ந்தும் புரியப்படாமல் இருக்குமாயின் வடபுலத்து முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல ஏனைய பகுதிகளிலும் எதிர் கால இருப்பு கேள்விக் குறியாகும் என்பதில் ஐயமில்லை.
Post a Comment