Header Ads



உண்மையை மூடிமறைக்க முயற்சிக்கும்போது அதனை வெளிக்கொணர்வதே ஊடகத்தின் கடமை


சுவிஸ் வங்கியில் கணக்குககளை வைத்திருக்கின்ற கிரேக்க நாட்டவர்களின் பட்டியலை வெளியிட்டதால் அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்குள் அத்துமீறி நுழைந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கிரேக்கத்தின் ஊடகவியலாளர் மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டருக்கிறது.

சுவி்ட்சர்லாந்து வங்கிகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான கிரேக்கர்களின் பட்டியலை, அதிலும் குறிப்பாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களின் பெயர்களை ஊடகவியலாளர் கொஸ்டாஸ் வெக்ஸாவானிஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். 

இந்தப் பட்டியல் முதலில் கிரேக்க அரசாங்கத்திற்கே, அதுவும் 2010ம் ஆண்டிலேயே கிடைத்திருக்கிறது. ஆனால் விசாரணைகள் தான் நடத்தப்படவில்லை.

மற்றவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்துக்குள் நுழைந்துள்ளதாக இப்போது அவர் மீது சட்டம் பாய்ந்திருக்கிறது.

ஏதேன்ஸிலுள்ள நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இவர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில், ஊடகவியலாளர் கொஸ்டாஸ் வெக்ஸாவானிஸின் வழக்கறிஞர்கள் தாங்கள் தயாராவதற்கு இன்னும் காலம் தேவைப்படுவதாக கூறினார்கள். தயார்படுத்தலுக்காக மேலும் மூன்று நாட்களை அவர்கள் கேட்டுள்ளனர்.


இந்த வங்கிக் கணக்குகள் பற்றிய விபரங்களை தான் வெளிக்கொணர்ந்தது பொதுமக்களின் அக்கறை கருதியே என்று நீதிமன்றத்துக்கு வெளியே காத்திருந்த செய்தியாளர்களிடம் வெக்ஸாவானிஸ் கூறியுள்ளார்.

'கிரேக்கத்தின் முன்னாள் நிதியமைச்சர் இவாஞ்சலோஸ் வெனிசெலோஸ், அந்தப் பட்டியலை கண்டுகொள்ளவே இல்லை. அதனை அப்படியே கழிப்பறை குப்பைத் தொட்டியில் கடாசிவிட்டார்' என்று கொஸ்டாஸ் வெக்ஸாவானிஸ் குற்றஞ்சாட்டினார். 

மற்றவர்கள் உண்மையை மூடிமறைக்க முயற்சிக்கும்போது அதனை வெளிக்கொணர வேண்டியதுதான் ஊடகத்தின் கடமை என்றும் அவர் தனது வேலையை நியாயப்படுத்தினார்.

ஜெனிவாவிலுள்ள ஹெச்எஸ்பிசி வங்கியில் கணக்கு வைத்திருக்கின்ற 2000க்கும் மேற்பட்ட கிரேக்கர்களின் பட்டியலை பிரான்ஸின் முன்னாள் நிதியமைச்சர் கிறிஸ்டீன் லாகார்த் தான் முதலில் கிரேக்கத்தின் அக்கால நிதியமைச்சரிடம் 2010 இல் கொடுத்துள்ளார். 

லாகார்த் லிஸ்ட் என்று அழைக்கப்பட்ட இந்த பெயர்ப் பட்டியலில் இடம்பெற்றிருந்த பல வர்த்தகர்களும் அரசியல்வாதிகளும் சுவிஸ் வங்கி கணக்குகள் ஊடாக வரிஏய்ப்பில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகம் அப்போதே எழுந்திருந்திருந்தது. 

ஆனால் கிரேக்க அரசு அதுபற்றி விசாரிக்கவில்லை. 

கிரேக்கத்தில் மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு மக்கள் முகம்கொடுத்துள்ளனர். அங்கு பொதுமக்களுக்கு அரசு செலவளிக்க வேண்டிய சமூக நலன்சார் செலவினங்கள் இன்னும் குறைக்கப்பட்டுவருகின்றன.

இந்த நேரத்தில் சூடுபிடித்துள்ள இந்த சுவிஸ் வங்கி கணக்கு விவகாரம் மக்களின் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தும் நிலைமையே உள்ளது. bbc

No comments

Powered by Blogger.