Header Ads



அட்டாளைச்சேனை சாதனா முத்துக்களைப் பாராட்டி கௌரவிக்கும் விழா

(எஸ்.எல். மன்சூர்)

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை அண்மைக்காலமாக ஈட்டிவரும் சாதனைகள் வியக்கத்தக்கதாக காணப்படுகின்றன. அந்தவகையில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். கல்வியிலும், விளையாட்டிலும், புலமைப்பரிசில் பரீட்சையிலும் தொடர்ந்து நிலை நாட்டிவரும் சாதனைகள் அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்கு பெருமை சேர்க்கின்றன. இதற்காக உழைத்துவரும் இப்பாடசாலையின் அதிபர், கற்பித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்து புகழாரம் சூட்டினார் அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர் அல்-ஹாஜ். அஷ்சேஹ். ஏ.எல்.எம். காசீம். 

இவ்வாண்டு(2012) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று 39மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்காக நேற்று(2012.10.20)ஆந்திகதி நடாத்தப்பட்ட நூற்றாண்டின் புலமைத்தாரர்களைப் பாராட்டும் விழா 2012 'சாதனா முத்துக்கள்' எனும் பெயரில் அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் பாடசாலையின் முதல்வர் மௌலவி வீ.ரி.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்றபோது கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளரான யு.எல்.ஏ. அஸீஸ் பிரதம அதிதியாககவும், ஆசிரியர் கலாசாலை முதல்வர் எம்.எஸ்.ஏ. ஹபீழ், கல்விக் கல்லூரி பீடாதிபதி ஏ.எல்.ஏ.றசூல், சட்டத்தரணிகளான எஸ்எல்.ஏ.றசீட், எஸ்.எம்.ஏ.கபூர், மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் பேசுகையில் '39 மாணவர்கள் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றது மட்டுமல்லாது, இப்பாடசாலையில் 150மாணவர்கள் தோற்றி 100க்கு மேல் 89மாணவர்களும், 70க்கு மேல் புள்ளிகளுக்கு மேல் 123மாணவர்களும் பெற்றுள்ளனர். இதுவொரு வரலாற்றுச் சாதனையாகும். 70புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் அனைவரும சித்தியடைந்தவர்களாகவே கருதப்படுகின்றனர். 

இவ்வாறு பார்க்கின்றபோது அக்கரைப்பற்று வலயத்திலேயே அதிகூடிய விகிதாசாரத்தில் இப்பாடசாலையின் சாதனை காணப்படுகின்றது. இது எமது வலயத்திற்கு பெருமை தருகின்ற ஒருவிடயமாகும். நூற்றாண்டினைக் கொண்டாடும் இப்பாடசாலை ஒருகாலத்தில் சாதனா பாடசாலையாகத் திகழ்ந்தது. சாதனைகளைக் குவித்து இப்பிராந்தியத்தின் முன்னணிப் பாடசாலையாக காணப்பட்ட அக்கால கட்டத்தில் இப்பாடசாலையில் கற்று வெளியேறிய பலர் இன்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கல்விமான்களாகவும், உயர் பதவிகளிலும் இருக்கின்றனர். இத்தகைய சாதனைகளுக்கு கால்கோளாக அமைந்த இப்பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், இந்நாள் அதிபர், பிரதியதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தியாக சிந்தையுடன் செயற்பட்டமையினால்தான் இத்தகைய வரலாற்றுச் சாதனைகளைப் பெற முடிந்தது இந்நிலை தொடர்ந்தும் செல்வதற்கு வழிகாட்டிகளாக அனைவரும் செயற்பட வேண்டும்' எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசீம் தெரிவித்தார். 

இந்நிகழ்வின் போது சாதனை படைத்த 'சாதனா முத்துக்கள் 2012' எனும் விசேட கையேடு மாணவர்களின் முழுமையான விபரங்களுடன் வெளியிடப்பட்டதுடன், இம்மாணவர்களை தரம் 1 இலிருந்து தரம் 4 வரையில் கற்பித்த ஆசிரியர்களைப் பாராட்டி விசேட பரிசுகள் வழங்கப்பட்டதுடன், சிறந்த பெறுபேற்றுக்கு வலிமைசேர்த்த தரம்; 5 கற்பித்த ஆசிரியர்களான எம்.ஏ.சி.ஏ. சுஹைர், ஏ.எல்.ஏ. றஹ்மான், எம்.ஏ. சலாஹூதீன், எம்.வை. சம்ஹூதீன் ஆகிய ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பெற்றோர்களால் பரிசுகளும், பொற்கிழிகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளினால் 39மாணவர்களுக்கும் பதக்கம், பரிசு, பாராட்டுப் பத்;திரங்கள் போன்றன வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். 







2 comments:

  1. இவ்வாறான நல்ல விடயங்கள் மாணவர்களை ஊக்கப்படுத்தும்....
    போட்கிழிகள் என்றால் என்ன?

    ReplyDelete
  2. சித்தி அடைந்த மாணவ ,மாணவிகளுக்கு எங்களுடைய வாழ்த்துகள்.வருங்கால தலை முறை செல்வங்களே நீங்களாவது ஈமானிய சிந்தனைகளோடு வளருங்கள் ,வாழுங்கள்.அதிபர் ஆகிய மௌலவி அவர்களே மாணவர்களை இப்பொழுதே மாலை போடும் அரசியல்வாதிகளாக மாற்றும் முயற்சியா?வருங்காலத்திலாவது அல்லாஹ்வுக்காக அந்நிய,மாற்று மத காலாச்சாரத்தை தவித்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.