Header Ads



அநுராதபுரம் பள்ளிவாசலுக்கு தீ - அயல் வீட்டாரின் பரபரப்பு வாக்குமூலம் (படங்கள்)

அநுராதபுரம் மல்வத்து லேனில் அமைந்துள்ள தக்கியாப் பள்ளிவாசலுடன் கூடிய தக்கியா பள்ளிவாசலை காடையர் கூட்டம் தீயிட்டு நாசமாக்கியமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பில் மேலும் அறியவருவதாவது,

குறித்த பள்ளிவாசல் அந்தப் பகுதியில் 15 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இதன் அருகாமையில் பௌத்த விகாரையொன்றும் உள்ளது. இப்பகுதியில் உள்ள மல்வத்து லேனில் சிங்களவர்களும், முஸ்லிம்களும் ஒற்றுமையாக வசித்து வருகின்றனர்.

சனிக்கிழமை அதிகாலை  பலகைகளினால் மறைக்கப்பட்டுள்ள பள்ளிவாசல் கட்டிடத்தின் ஜன்னல் வழியாக மண்ணெண்னையை உள்ளே ஊற்றி பள்ளிவாசல் தீமூட்டப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பள்ளிவாசலில் பொருத்தப்பட்டிருந்த 3 காற்றாடிகள் எரிந்துள்ளன. தொழுகைக்காக விரிக்கப்படும் பாய்கள் சகலதும், கூரைப் பகுதியில் அடிக்கப்பட்டிருந்த பொலித்தீனும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

பள்ளிவாசல் தீபற்றி எரிந்தபோது பொலித்தீனும், வயர்களும், எரிந்து தூர்நாற்றம் வீசியதாலும், சிறுசிறு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதனாலும் அயல் வீட்டார் கண் விழித்து, உடன் தீயை அணைத்ததால் கூரைப்பகுதிக்கோ சுவர்ப் பகுதிகளுக்கோ அதிக சேதங்கள் ஏற்படவில்லை.

பள்ளிவாசல் மீது தீ மூட்டப்பட்டதும் அந்த தீயை அணைத்தவர்களுல் ஒருவரான அயல் வீட்டவரான எம்.ஹிஸாம் கூறும்போது, 

விடிந்தால் ஹஜ்ஜுப் பெருநாள் என்பதால் நாம் சம்பவ தினமன்று இரவு நேரகாலத்துடன் உறங்கிவிட்டோம். அதிகாலை 2.30 மணியளவில் சிறுசிறு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், பொலித்தீன்கள் மற்றும் வயர்கள் எரியும் தூர்நாற்றமும் வீசியதால் நானும் தந்தையும் எழுந்து சென்று வெளியில் பார்த்தபோது பள்ளிவாசல் கட்டிடம் எரிவது தெரிந்தது. உடனே எனது மற்றைய சகோதரனையும், தாயையயும் அழைத்துக்கொண்டு, தண்ணீர் குடம் மற்றும் வாளிகளுடன் சென்று பள்ளிவாசலுக்கு மேலும் தீ பரவ விடாமல் தண்ணீர் ஊற்றி அணைத்தோம். சுமார் 40 நிமிட முயற்சியின் பின் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். 

அதன் பின்னர் பொலிஸ் அவசர பிரிவுக்கு விடயத்தை சொன்னதும், அநுராதபுரம் பொலிஸார் வந்து தேவையான உதவிகளைச் செய்தனர். காலையில் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தோம் என்றார்.

அநுராதபுரத்தில் முஸ்லிம்களும், சிங்களவர்களும் ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகின்றனர். இந்தனை குழப்புவதற்கு திட்டமிட்ட ஒரு குழு செயற்படுவதாகவும், அந்தக் குழுவே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடட்டிருப்பதாகவும் அநுராதபுரம் பள்ளிவாசல் சபைத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.



1 comment:

  1. no Comments still still ..............sleeping
    epa enggada samuthayam nethirail erunthu elumbum.kai bommai muslim parliment MP mar

    ReplyDelete

Powered by Blogger.