Header Ads



வடக்கு முஸ்லிம்களின் குடியிருப்பு பிரச்சினை - எப்போது தீரும்..?



(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)

  வடக்கு முஸ்லிம்கள் தமது பாரம்பரிய பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகளின் பலாத்கார வெளியேற்றத்திற்கு உள்ளாகி எதிர்வரும் 30 ஆம் திகதி, செவ்வாய்கிழமையுடன் 22 வருடங்கள் நிறைவடைகிறது.

  1990 ஆம் ஆண்டு, ஒக்டோபர் மாதம் இறுதிவாரத்தில் வடமாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா பிரதேசங்களில் வாழ்ந்துவந்த முஸ்லிம்களை எத்தகைய நியாயமான காரணமுமின்றி விடுதலைப் புலிகள் அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்றியிருந்தனர்.

  குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது தாயகப் பிரதேசத்திலிருந்து வெளியேற புலிகள் வழங்கியது 2 மணித்தியால அவகாசம் மாத்திரமே. ஓரு சிறுபான்மை சமூகத்தின் நலன்களுக்காக போராடியதாக கூறிய அமைப்பொன்று மற்றைய சிறுபான்மை சமூகத்தின் மீது மேற்கொண்ட மிகமோசமான சம்பவம் இதுவாகத்தான் இருக்கவேண்டும்.

  தமது மூதாதையர், தமது பெற்றோர் வாழ்ந்த அந்த பூமியில், தாம் ஓடியாடி விளையாடிய அந்த மணணிலிருந்து ஒரு சமூகத்தின் வேர் பிடுங்கப்பட்ட அந்த கொடிய வலியை அதனுடன் தொடர்புடையவர்களால் மாத்திரமே உணர்ந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடியும்.

  இலங்கையிலிருந்து புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்களே..! பின்னர் எதற்காக அந்த சம்பவங்களை புலிகளுடன் தொடர்புடுத்தி மீட்டுப்பார்க்க வேண்டுமென ஒரு தரப்பினர் கேள்வியெழுப்புவதும் புரிகிறது.

  வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகட்டும், தமிழ் செல்வன் ஆகட்டும், இல்லை அண்டன் பாலசிங்கமாக இருக்கட்டும் ||வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் ஒரு துன்பியல் நிகழ்வு. அதனை மறந்துவிடுவோம்|| என எத்தனை தடவை கூறினாலும் அந்த வரலாற்றை மறந்துவிடுவதற்கு அதுவொன்றும் மாங்காய் மரத்தை பிடுங்கி நட்ட சம்பவமல்ல. மாறாக ஒரு சமூகம், ஆயுதமுனையில் துரத்தப்பட்டு, அதன் அசையும், அசையா சொத்துக்கள் கபளீகரம் செய்யப்பட்ட சோக வரலாறு.

  இந்த சோக வரலாற்றை வடக்கு முஸ்லிம்கள் எப்படி மறப்பது? இந்த சோக வரலாற்றை வடக்கு முஸ்லிம்கள் எப்படி நினைவுகூறாமல் இருப்பது..??

  வடக்கு முஸ்லிம்களின் தமது தாயகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் நிறைவடையும் நிலையில், அந்த சமூகம் நிகழ்காலத்தில் அனுபவிக்கும் அடிப்டைத் தேவை குறித்து  ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கப் படையினரால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், வடக்கு முஸ்லிம்களிடத்திலும் ஓரளவு நம்பிக்கை துளிர்விட்டது. அதாவது சகஜவாழ்வு ஏற்பட்டுள்ளது. எனவே எமது தாயகப் பிரதேசத்தில் மீளக்குடியேறலாம் என்று அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையைச் சுமந்தவர்களாக ஒருதொகை வடக்கு முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயகம் திரும்பினர்.

  தாயகம் திரும்பிய முஸ்லிம்கள் எதிர்கொண்ட மிகப்பிரதான சவால் குடியிருப்பு இன்மையும், தமது குடியிருப்புகள் சேதமடைந்திருந்தமையாகும்.

  1990 ஆம் ஆண்டு வடக்கு முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியபோது காணப்பட்ட முஸ்லிம்களின் எணணிக்கை தற்போது மும்மடங்காகியுள்ளது. எனவே தாயகம் திரும்பிய பலரும் குடியிருப்பு இன்மையால் மிகப்பெரும் அவலத்தை சுமந்தவர்களாகவுள்ளனர்.

  இங்கு மற்றுமொரு பிரதான விடயமும் எமது கவனத்தை ஈர்க்கிறது. வடக்கு முஸ்லிம்களின் மீன்குடியேற்றத்திற்கு மிகப்பெரும் சவாலாக குடியிருப்பு பிரச்சினை காணப்பட்ட போதிலும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களுக்கு யுத்தம் முடிவடைந்த இந்த காலப்பகுதியில் ஒரு துண்டு நிலத்iதானும் அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை.

  மிகப்பெரும் எணணிக்கையிலான வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீளக்குடியேற தயாராகவுள்ள போதிலும் அங்கு அவர்களுக்காக குடியிருப்பு வசதிகள் செய்கொடுக்கப்படாமை காரணமாக அவர்களின் மீள்குடியேற்ற கனவு இதுவரை நிறைவு செய்யப்படவேயில்லை.

 இந்திய வீடமைப்புத் திட்டத்தில் வடக்கு முஸ்லிம்களுக்கு சொற்ப ஆறுதலேனும் கிடைக்குமென நம்பியிருந்தவர்களுக்கும் பேரிடி விழுந்துள்ளது. வடக்கு முஸ்லிம்களும் குறித்த திட்டத்தில் உள்ளீர்க்கப்படுவரென இந்திய அரசாங்கத்தின் சார்பில் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும், இந்தியாவின் வீட்டை பெறுவதற்கு தகுதியாவதற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளோ துரதிஷ்டவசமானவை.

  உதாரணமாக 1998 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கு இந்தியாவின் வீட்டை பெற்றுக்கொள்வதற்காக அதிக புள்ளிகள் வழங்கப்படும். இதனடிப்படையில் நோக்கும்போது 1990 ஆம் ஆண்டு புலிகளினால் வெளியேற்றப்பட்ட வடக்கு முஸ்லிம்களுக்கு அதிக புள்ளிகள் கிடைக்காமல் போகிறது. இதனால் பாதிக்கப்படப்போவதும் வடக்கு முஸ்லிம்களே.

  இந்தியாவின் வீட்டை பெறுவதற்காக விதிக்கப்பட்டுள்ள ஒரு நிபந்தனையே நாம் மேற்சொன்ன உதாரணமாகும்.

  இவ்வாறான நிலையில் வடக்கு முஸ்லிம்களின் குடியிருப்பு பிரச்சினையென்பது நீண்டுசெல்கிறது.

  முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்வப்போது வடக்கு முஸ்லிம்களின் தற்போதைய அவலம் தொடர்பில் குரல் கொடுத்தாலும் வடக்கு முஸ்லிம்களின் அவலத்திற்கு முற்றுப்புள்ளி கிடைப்பதாகவில்லை. இலங்கை முஸ்லிம்களின் அதிகபபட்ச ஆதரவை பெற்ற கட்சியென்ற வகையில் வடக்கு முஸ்லிம்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆற்றவேண்டிய பணிகள் அளப்பரியதாக இருந்தபோதிலும் அக்கட்சியும், அதன் தலைவரும் வடக்கு முஸ்லிம்களுக்கு எத்தகைய பணிகளை இதுவரை ஆற்றியுள்ளார்கள் என்று கேட்டால் அதற்கான விடை நீண்டதாக இருக்காது.

  வடக்கு முஸ்லிம்கள் படும் அவலங்களை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்று குறைந்த பட்சம் குடியிருப்பு பிரச்சினைகளுக்காவது முஸ்லிம் காங்கிரஸ் தீர்வு கண்டிருக்கலாம். இங்கு சர்வதேச சமூகத்தையும் விட்டுவிடுவோம். கொழும்பிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதரகங்களுக்கு ரவூப் ஹக்கீம் சென்றாலே முஸ்லிம்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வு பெற்றுக்கொடுக்கலாம்.

  இலங்கை முஸ்லிம்களின் அதிகபபட்ச ஆதரவைப்பெற்ற நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வடக்கு முஸ்லிம்கள் தொழில் வாய்ப்புகளையோ அல்லது அமைச்சின் இணைப்பாளர் பதவியையோ கோரவில்லை. அல்லற்படும் வடக்கு முஸ்லிம்கள் கோருவதெல்லாம் தமது தாயகப் பிரதேசத்தில் மீளக்குடியேற குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தாருங்கள் என்பதுதான்.

  ஜெனீவா சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்திற்காக முஸ்லிம் நாடுகளிடம் ரவூப் ஹக்கீமுக்கு ஆதரவு தேடமுடியுமென்றால் கொழும்பிலுள்ள முஸ்லிம் நாட்டுத் தூதரகங்களுக்கு சென்று வடக்கு முஸ்லிம்களின் அவலங்களுக்கு ஏன் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியாது..?

  கொழும்பிலுள்ள முஸ்லிம் நாட்டு தூதரகங்களில் கால்வாசி தூதரகங்கள் பணக்கார அரபு நாடுகளை பிரதிநிதித்துவம் செய்பவை. இந்நாட்டு தூதரகங்கள் ஒவ்வொன்றும் வடக்கிலுள்ள முஸ்லிம்களுக்கு 100 வீடுகளைக் கட்டிக்கொடுக்க முன்வந்தாலும் வடக்கு முஸ்லிம்களின் குடியிருப்பு பிரச்சினைகள் அரைவாசிக்கு தீர்வு கண்டுவிடமுடியும். இங்கு வெளிநாட்டு தூதரகங்களுக்கு வடக்கு முஸ்லிம்களின் அவலங்களை அறியப்படுத்தவேண்டிய பொறுப்பை சுமந்தவராக ரவூப் ஹக்கீமே காணப்படுகிறார்.

  கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரத்தில் யாழ்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசிக்கும் சகோதரி ஒருவரின் புகைப்படத்தை தேர்தல் பிரச்சார விளம்பரத்திற்காக வீதிச் சுவர்களில் ஒட்டி, முஸ்லிம் காங்கிரஸ் வாக்குக்கேட்க முடியுமென்றால் ஏன் அந்த வடக்கு முஸ்லிம்களின் அவலங்களை முஸ்லிம் தூதரகங்களுக்கு அறியப்படுத்தி உதவிகளை பெற்றுக்கொடுக்க முடியாது.

  வடக்கு முஸ்லிம்களின் அவலங்கள் குறிப்பாக வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீளக்குடியேறவும், அவர்களுக்கான குடியிருப்பு வசதிகள் நிறைவு செய்யப்படவும் வேண்டுமென முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைமையும் விரும்புமாகவிருந்தால் அதன் விருப்பததை பகிரங்கப்படுத்தவும் வேண்டும்.

  அதேநேரம் வடக்கு முஸ்லிம்களுக்கு ரவூப் ஹக்கீமும், முஸ்லிம் காங்கிரஸும் மாத்திரம்தான் ஏதாவது செய்ய வேண்டுமென்றில்லை. வடமாகாண முஸ்லிம் சமூகத்தை பிரதிநித்துவம் செய்யும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாணத்தில் செல்வாக்குச் செலுத்தும் அமைச்சர் அதாவுல்லாஹ் போன்றவர்களும் வடக்கு முஸ்லிம்களின் நலனில் ஆர்வம் செலுத்தவேண்டும். முஸ்லிம் அரசியல் கட்சிகள் இவ்விவகாரத்தில் ஒன்றுபட்டு எத்தனையோ விடயங்களை சாதிக்கலாம். அவர்களால் சாதிக்கவும் முடியுமென வடக்கு முஸ்லிம்களும் நம்புகின்றனர்.

  அதேவேளை வடக்கு முஸ்லிம்களின் குடியிருப்பு பிரச்சினை தொடர்பில் மற்றுமொரு கருத்தும் முன்வைக்கப்பட்டு வருவதை நாம் நோக்கமுடிகிறது.

  இலங்கையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிவாசல்கள் உள்ளன. இப்பள்ளிவாசல்கள் ஒவ்வொன்றும் வடக்கில் ஒவ்வொரு குடியிருப்பை ஏற்படுத்திக்கொடுக்க முன்வருமாயின் வடக்கு முஸ்லிம்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு நிச்சயம் தீர்வை பெற்றுக்கொடுக்கலாம்.

  பள்ளிவாசல்கள் அமைந்திருக்கும் ஊர் மக்கள் சிறுதொகை பணத்தை அந்தப்பள்ளிக்கு வழங்குவதன் மூலமும், அல்லது சொத்துக்கள் அதிகமாகவும், வருமானத்தை அதிகளவு கொண்டியுங்கும் பள்ளிவாசல்கள் சுயமாகவே வடக்கில் குடியிருப்புகளை அமைக்க முன்வருவதன் மூலமும் வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்தில் மீளக்குடியேற வழிபிறக்கும்.

  இங்கு மிகவும் துரதிஷ்டம் என்னவென்றால் வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்திலிருந்து புலிகளின் பலாத்கார வெளியேற்றததிற்கு உட்பட்ட அந்த வரலாறு குறித்து ஏனைய பகுதி முஸ்லிம்கள் உரியவகையில் அறிந்திராமையாகும். பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஹஸ்புல்லா கூட, அண்மையில் வழங்கியுள்ள செவ்வியொன்றில் வடக்கு முஸ்லிம்களின் இனசுத்திகரிப்பை சமூகம் இதுவரை உணரவில்லையென சுட்டிக்காட்டியுள்ளார்.

  வடமாகாணத்திற்கு வெளியேயுள்ள முஸ்லிம்களிடத்தில் வடக்கு முஸ்லிம்களுக்கு நிகழந்த அனர்த்தம், அவர்கள் தற்போது எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அச்சவால்களை எதிர்கொள்ள கையாள வேண்டிய உபாயங்கள் குறித்து உரியமுறையில் தகவல்கள் போய் சேருமாயின் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களின் ஆதரவுடன் வடக்கு முஸ்லிம்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு வேறு எந்தத் தரப்பையும் நம்பியிராமல் தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும்.

  இங்கு முஸ்லிம் அமைப்புகளுக்கும் வடக்கு முஸ்லிம்கள் தொடர்பில் அளப்பரிய பணிகள் காத்திருக்கின்றன. குறிப்பாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் என்பன பலம் பொருந்திய அமைப்புக்களாக காணப்படுகின்றன.

  இந்த அமைப்புக்கள் வடக்கு முஸ்லிம்கள் அவலங்களை தென்னிலங்கை முஸ்லிம்களிடம் எடுத்துச் சொல்வதற்கு உதவலாம். இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு அழுத்தம் ஏற்படுத்தலாம்.  வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை பிராந்தியத்தில் செயற்படும் துணை அமைப்புக்களுடன் இணைந்து துரிதப்படுத்தலாம்.

  நிகழ்கால அரசியல் நிலவரங்களின் அடிப்படையில் வடக்கு முஸ்லிம்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை பெற்றுக்கொடுக்கும் அறிகுறிகளை எம்மால் காணமுடியவில்லை. இந்நிலையில் வடக்கு முஸ்லிம்களின் அவலம் தீர்க்கப்பட வேண்டுமென முஸ்லிம் விவகாரங்களுடன் தொடர்புடையவர்கள் ஆர்வம் கொண்டிருந்தால், வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு பிரதான தடையாகவுள்ள குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்பதே வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு, 22 வருடங்கள் நிறைவடையும் இந்தவேளையில் நாம் விடுக்கும் வேண்டுகோளாகும்..!

(ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் நேற்று வெளியாகியிருந்த கட்டுரை இது)

No comments

Powered by Blogger.