ஒற்றுமையாக வாழ பழகிக்கொள்ள வேண்டும் - வவுனியாவில் அமைச்சர் றிசாத்
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
தற்போதைய அரசு அமைதியான சூழலை உருவாக்கியுள்ளதுடன் பல கோடிகளை செலவு செய்து அனைத்து இனங்களின் முன்னேற்றதிற்காகவும் செயற்பட்டு வருகின்றது' என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும் கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
வவுனியா, பட்டானிச்சூரில் இடம்பெற்ற ஹஜ்ஜுப் பெருநாள் விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் கருத்துரைக்கும் போது,
கடந்த காலங்களை நாம் மீள பார்க்கும் போது,இன்று நாம் திருப்பதியடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.இன்று இரவு வேளைகளில் எவ்வித அச்சமுமின்றி பல்வேறுபட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியும் நிலை காணப்படுகின்றது.இது நல்லதொரு சமாதான சூழல் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
வன்னி அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற வகையில் வன்னி பிரதேசத்தின் அபிவிருத்திக்கு நேர்மையான வகையில் செயற்பட்டு வருகின்றேன். எனினும் எவ்வாறான வேலைத்திட்டத்தை செய்தாலும் அவற்றுக்கு சவால்விடும் வகையில் சந்தர்ப்பவாத அரசியலையும் நாம் காண்கின்றோம்.
யுத்தத்திற்கு பிறகான இக்காலத்தில் மீள்குடியேற்றமாக இருந்தால் என்ன மீள்குடியேற்றத்திற்கு பின்னரான அபிவிருத்தியாக இருந்தால் என்ன வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களில் வன்னி அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற வகையில் மனச்சாட்சியுடன் நான் பணியாற்றிவருகின்றேன். இவ்வாறு செயற்படும் போது இவ் இனங்களுக்கிடையில் குழப்பங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்த வேண்டுமென சிலர் முயற்சி செய்துகொண்டிருக்கின்றார்கள்.
விடுதலைப் புலிகளின் இழப்பிற்கு பிறகு அன்று நடந்த சில செயற்பாடுகளை செய்வதற்கு சிலர் மீண்டும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனினும் தமிழ் பேசும் மக்கள் நாங்கள் ஒற்றுமையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.அவ்வாறான சக்திகளுக்கு மீண்டும் இடம் கொடுத்து எம்மை அழிவின் படுகுழிக்குள் இட்டுச் செல்ல வேண்டாம்.
அன்று எவ்வாறு எம்மை கொலை செய்ய பார்த்தார்களோ அதேபோல் நாம் செய்யும் நல்ல வேலைகளையும் கறுப்பு கண்ணாடி போட்டு பார்க்கும் நிலை எற்பட்டுள்ளது. ஆனால் எந்தவொரு இனமும் பாதித்துவிடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கின்றோம்,ஒரு மனிதன் தனது எண்ணத்தை துாய முறையில் வைத்துக் கொள்ளாது அதனை மாற்று கண் கொண்டு பார்க்கும் போது அது அவர்களுக்கு பிழையானதாகத்தான் தெரியும் என்று கூறிய அமைச்சர் சமூகத்தின் விடிவுக்கான அந்த கறுப்பு கண்ணாடிகளை களைந்து வெள்ளை கண்ணாடிகளை அணிந்து பரந்து பட்டுச் செல்லும் அபிவிருத்திகளை பாரக்குமாறும்ஈஅதனது பங்காளிகளாக மாறுமாறும் அமைச்சர றிசாத் பதியுதீன் அழைப்புவிடுத்தார்.
இந்த நிகழ்வில் வடமாகாண அளுநரின் வவுனியா மாவட்ட ஆணையாளர் சாஹிப் மொஹிதீன்,அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் பீ.எஸ்.அப்துல்லா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment