Header Ads



கறுப்பாட்டு மந்தையில் ஒரு வெள்ளாடு - ஒர் ஓநாயின் உண்மையான வாக்குமூலம்


(அபூ மஸ்லமா)

ஒரு கார்த்திகையின் இரவு. நல்ல பலத்த மழை பெய்து ஓய்திருந்தது. பிரதேசமே மௌனித்து போனது. நித்திரை கொள்வதற்கென்றே இறைவன் அந்த இரவை படைத்தானா? என்று எண்ணும் அளவிற்கு. நாற்காலியில் சாய்ந்திருந்த எனக்கு மெல்ல ஒரு ஏகாந்தமான தூக்கம். இரண்டு தேவதைகளின் வழித்துணையுடன் வானத்தில் நடந்து கொண்டிருந்த என்னை, மனைவியின் குரல் பூமிக்கு இழுத்து வந்தது. விழித்து பார்த்தேன். என்ன என்றேன். “இதை பாருங்களேன்” என்றாள் அதிசயத்துடன். லப்டொப்பினை சுட்டின அவள் விரல்கள். 

சோம்பலுடனும், தேவதைகளை இழந்த கவலையுடனும் லப்டொப் அருகில் சென்றேன். வந்த நித்திரை கலக்கம் ஒரு நொடியில் கரைந்தது. கண்கள் கூர்மையாகின. உடம்பில் ஒரு வித இன்ப அதிர்ச்சி. கூடவே ஆச்சரியம். அப்படியே உட்கார்ந்து விட்டேன். “யாழ் முஸ்லிம்” எனும் பச்சை எழுத்துக்கள் தாங்கிய வலைத்தளம் என்னை பார்த்து கண்சிமிட்டியது.

யாழ்ப்பாண முஸ்லிம்களின் திரையிடப்பட்ட அவலங்களை டிஜிட்டல் வெளிச்சம் போட ஒரு இணையம் வராத என பல தரம் ஏங்கியுள்ளேன். 2001 களில் இருந்து இணையத்தளங்களில் எழுதுகிறேன். எல்லாமே தமிழர் இணையங்கள். சில நேரம் அவை வடக்கு முஸ்லிம்கள் பற்றி நியாயமாக பேசும். முக்கியமான பல நேரங்களில் எதுவும் தெரியாதது போல மௌனித்து விடும். 

எமக்கான ஒரு குரல். தனித்துவமிக்க ஒரு குரல். அரசியலில் சிக்காத ஒரு குரல். வியாபார முதலைகளிடம் விலைபோகாத ஒரு குரல் எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்லாத்திற்கு ஆதரவாக முஸ்லிம் உம்மாவிற்காக பேசும் குரல். இந்த எல்லா குரல்களும் கலந்த “யாழ்ப்பாண முஸ்லிம்”களிற்கான குரல் எப்போது உருவாகும் எனும் கனவிற்கான விடை அந்த யாழ் முஸ்லிம் இணையத்தில் இருந்து ஒலிப்பதையும், ஒளிப்பதையும் என்னால் உணர முடிந்தது. ஓரிரு நாட்களிலேயே அதன் போக்கும் பண்பும் புரிந்து போயின. 

முஸ்லிம்கள் மீதான புலிப்பயங்கரவாதத்தின் கோர வடுக்களை உலகிற்கு கொண்டு சென்ற ஒரு துணிகரமான வலைத்தளமாக அன்று யாழ் முஸ்லிம் இணையம் செயற்பட்டது. யாழ்ப்பாண முஸ்லிம்கள் மீதான அநியாயங்கள் மட்டுமன்றி, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை வரை அது பேசி நின்றது. அகதி முஸ்லிம்களின் அவலம் பற்றி அது பேசியது. அரசின் அகதிகள் மீதான அசமந்தத்தை அது பேசியது. முஸ்லிம் மந்திரிகளை அதன் எழுத்துக்கள் திரும்பி பார்க்க வைத்தன. யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஒற்றுமை பற்றி அது பேசியது. 

ஒரு சில மாதங்களில் யாழ் முஸ்லிம் (jaffnamuslim.blogspot.com) சர்வதேச இஸ்லாமிய உலகம் பற்றி காத்திரமான பங்களிப்பை நல்க ஆரம்பித்தது. முஸ்லிம் உம்மாவின் செய்திகளை உடனுக்குடன் தருவதில் அது வேகமாக செயற்பட்டது. ஒரு நாளைக்கு 100-200 இற்குள் வாசகர்கள் வந்து செல்லும் தளமாக அது இருந்தது. அதன் தொடரான செய்திகளை உடனுக்குடன் தெரிவிக்கும் வேகமும், அந்த செய்திகளிற்கு தலைப்பிடும் பாணியும் அலாதியானவை. ஒரு Media Analyst என்ற வகையில் இதன் வளற்ச்சியை உற்று நோக்கியவனாக நான் என்றும் இருந்துள்ளேன். 

கடுமையான செய்தி தேடல் எனும் தடத்தின் துணையுடன் யாழ் முஸ்லிம் வளைத்தளம் தன்னை இணையத்தளமாக பிரகடனப்படுத்தியது. jaffnamuslim.com என்ற மிடுக்குடன் தன் தோற்றப்பொழிவை மாற்றி, மேலும் பல செய்திகளை வழங்கும் இணையமாக தன்னை வெளிப்படுத்த முற்பட்டது. 

இலங்கையின் பருத்திதுறையில் இருந்து ஹம்பாந்தோட்டையின் கிருந்தை வரையுள்ள முஸ்லிம்களின் அவலங்கள் பற்றியும், உரிமை மறுப்புக்கள் பற்றியும், அவர்கள் மீதான கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதம் பற்றியும் அது எழுதியது. தன்னை முஸ்லிம் தேசிய இணையமாக பிரகடனப்படுத்தாவிடினும், இலங்கையின் முழு முஸ்லிம்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இணையம் எனும் நிலையை ஒரு வருடகாலத்தினுள் அது அடைந்துள்ளது. 

தனது இரண்டாண்டு கால பயணத்தில் அதன் சாதனைகள் பல. “வேர் அறுதலின் வலி” அதற்கெல்லாம் ஒரு மகுடம். ஒவ்வொரு யாழ்ப்பாண முஸ்லிமும் இதிலிருந்து தன்னை தனியாக பிரித்து பார்ப்பதில்லை. பெண்களின் அடுக்களை வரை அதன் தாக்கம் வீரியம் மிக்கது. 

சிலர் யாழ் என்ற சொல்லை நீக்கி தேசிய முஸ்லிம்களின் ஊடமாக தன்னை அது மாற்ற வேண்டும் என்ற தனிப்பட்ட முறையில் கூறியுள்ளனர். 

இதற்கெல்லாம் அப்பால் முகவரியிழந்த யாழ்ப்பாண முஸ்லிம்களின் குரலாகவும், ஒஸ்மானியாவிற்கு அடுத்ததாக யாழ்ப்பாண முஸ்லிம்களை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கும் ஒரு தளமாகவும் ஜப்னா முஸ்லிம் இணையம் தன்னை நிலைப்படுத்தியுள்ளது. தங்கள் பிரச்சனைகளிற்கான தீர்வை இந்த தளத்தில் காணலாம் எனும் நம்பிக்கை பலரது உள்ளங்களில் இன்று ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதிகள் தங்கள் கருத்துக்களையும், சமூக சேவை நிறுவனங்கள் தங்கள் தகவல்களையும் இந்த தளத்தின் ஊடாக இலகுவாக பரப்பலாம் எனும் நம்பிக்கைகளை வைத்துள்ளனர். 

இலங்கை முஸ்லிம்களினதும், புலம்பெயர் தேசத்து தமிழ் பேசும் முஸ்லிம்களினதும் இணைய தேசியத்தை உருவாக்கும் ஒரு சின்னமாக இதன் வளற்ச்சியை நான் காண்கின்றேன். இதன் பணிகள் வெறுமனே ஊடகம் என்ற எல்லைகளை தாண்டி நிறுவனம் எனும் புள்ளிகளில் வந்து நிற்பதை காண முடிகிறது. இறைவனிற்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்.

கறுப்பு காகத்தில் அடிக்கும் சாம்பல் நிறச்சாயல்கள் போல கண்ட சில விடயங்களும் உண்டு. யாழ் முஸ்லிம் இணையம் தனது வளற்ச்சி போன்று தனது சமூகத்தின் மத்தியில் ஊடக துறை சார்ந்த வளற்ச்சிக்கு எவ்வளவு பங்களிப்பு செய்துள்ளது என்ற கேள்வி எழுவது போல ஒரு உணர்வு. தரமான எழுத்தாளர்களை உருவாக்குவதில் அதன் பெறுமானம் சற்று பின்னிற்பது போலவே தெரிகிறது. 

யாழ் முஸ்லிம்களின் பிரதான விவகாரங்கள் மீதான ஆய்வுகள், என்ற கோணத்தில் இதன் செய்திகள் போதாது. யாழ்ப்பாண முஸ்லிம்களின் ஆவண காப்பகம் ஒன்றை நிறுவ கூடிய தரமிருந்தும் அவை யாழ் முஸ்லிம் இணையத்தால் நிறுவப்படவில்லை. பிரச்சனைகள் அதற்கான தீர்வுகள் என்ற தடத்தில் இருந்து விலகி, பிரச்சனைகள் தொடர்பான செய்திகள் என்ற தடத்தில் அதிகம் அக்கறை காட்டுவது சமூக முன்னேற்றத்திற்கு எவ்வளவிற்கு துணை நிற்கும் என்பதும் கேள்விக்குறியே.

தமிழ் தேசியம், அவர்களது போராட்டம், அது தொடர்பில் முஸ்லிம்களின் நிலைப்பாடு, எதிர்கால வடகிழக்கு முஸ்லிம் அரசியல் எவ்வாறு இருக்க வேண்டும் போன்ற பல பாரமான எழுத்துக்களை எழுத அது தயங்குவது ஏன் என்பதும் புரியவில்லை. 

இன்றைய திகதியில் முதல் தரமான ஒரு செய்தி இணையமாக யாழ் முஸ்லிம் இணையத்தளம் செயற்படுவது பாராட்டிற்குரியது. சந்தோஷத்திற்குரியது. இதன் எல்லைகளும் இதுவல்ல. இதையும் தாண்டி இலங்கை முஸ்லிம்களிற்கான சமூக தலைமைத்துவம் பற்றி சொல்லும், ஒரு வழிகாட்டல் மையமாக இது விளங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறே இந்த தளத்தை நான் பார்க்கின்றேன். அது செதுக்கும் டிஜிட்டல் எழுத்துக்களிற்காக என்றேன்றும் ஆவலாய் டிஸ்பிளே முன் கண் விழிக்கும்.............

1 comment:

  1. Nice way to expressed your view. Well done. What you said is perfectly correct. 'Jaffna Muslim . com " is the real symbol of our community theses times.

    Anwar Jiffry - UK
    (Son of Osmaniya's first principal Late Mr.C.M.M.Jiffry)

    ReplyDelete

Powered by Blogger.