தாய் பாசம்..!
சீனாவில் தாயின் கனவை நிறைவேற்ற 3500 கி.மீ. தூரம் வீல்சேரில் அழைத்து சென்றுள்ளார் மகன். அவரை மக்கள் ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர். சீன தலைநகர் பீஜிங்கை சேர்ந்தவர் பான் மெங்க் (26).
இவரது தாய் கோவ் மின்ஜூன். இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போனார். இதனால், பல ஆண்டுகளாக வீல் சேரில்தான் காலத்தை கழித்து வருகிறார். இவருக்கு நெடு நாளாக ஒரு ஆசை. யுனான் மாகாணத்தில் உள்ள ஜிஸ்ஹூவாங்பனா பகுதியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஜிஸ்ஹூவாங்பனா பகுதி இயற்கையின் சொர்க்கமாக விளங்குகிறது. இங்கு சீன மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். பல்வேறு இனத்தவர்கள் வசிக்கின்றனர். அழகிய பள்ளத்தாக்குகள், தேயிலை தோட்டங்கள், வனவிலங்கு பூங்காக்கள் என ஏராளமான இடங்கள் உள்ளன. குறிப்பாக புத்த மதம் இங்கிருந்துதான் சீனா முழுவதும் பரவியதாக நம்பிக்கை உள்ளது. இந்த அற்புதமான இடத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்பது கோவ் மின்ஜூனின் ஆசை. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் அந்த கனவு நிறைவேறாது என்று நினைத்தார்.
ஆனால், 26 வயது மகன் பான் மெங்க், தாயின் கனவை நிறைவேற்ற முடிவெடுத்தார். வீல் சேரில் இருக்கும் தாயை பஸ், ரயில், விமானத்தில் அழைத்து செல்வது பெரும் சிக்கலாக இருந்தது. கடைசியில் துணிந்து வீல் சேரிலேயே தாயை அழைத்து கொண்டு கிளம்பினார். ஒருநாள், இரண்டு நாட்கள் அல்ல.. 100 நாள் பயணத்துக்கு பிறகு, அம்மாவும் மகனும் அந்த அற்புத இடத்துக்கு வந்தடைந்தனர். ஜிஸ்ஹூவாங்பனா பகுதியின் இயற்கை எழிலை பார்த்ததும், அம்மா கோவ் மின்ஜூனின் கண்ணில் ஆனந்த கண்ணீர். மகன் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து நெகிழ்ந்தார்.
கணவன் 10 ஆண்டுக்கு முன்பு விவாகரத்து பெற்று சென்ற பின், ஒரே மகனுடன் வாழ்ந்து வருகிறார் கோவ். இருவரும் எலக்ட்ரானிக் கம்பெனியில் விற்பனை பிரதிநிதிகளாக இருந்தனர். தாயின் கனவை நிறைவேற்ற இருவரும் வேலையை ராஜினாமா செய்தனர். கடந்த ஜூலை 11-ம் தேதி பயணத்தை தொடங்கினர். ஹெபி, ஹெனான், ஹூபி, ஹூனான், குய்ஸு மாகாணங்களை கடந்து கடைசியாக யுனான் மாகாணத்தில் உள்ள ஜிஸ்ஹூவாங்பனாவுக்கு வந்துள்ளனர். செல்லும் வழியெங்கும் அவர்களுக்கு மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். நெகிழ்ச்சியுடன் பல உதவிகளை செய்தனர். ஆன்லைனில் மகன் பான் மெங்க்குக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Post a Comment