Header Ads



யாழ்ப்பாண முஸ்லிம்களின் தேவைகளும், அமைப்புக்களின் செயற்பாடுகளும்

(முஹம்மத்)

யாழ்ப்பாண முஸ்லிம்கள் தமது தாய் நிலத்திலிருந்து வேரருக்கப்பட்டு இந்த ஒக்ரோபர் மாதம் 30 ஆம் திகதியுடன் 22 வருடங்கள் பூர்த்தியாகி 23 வது வருடத்தில் அவர்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள். அதேவேளை யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறிய முஸ்லிம்கள் தமது மூன்றாவது வருடத்தை நிறைவு செய்கின்றார்கள். அவர்களில் 450 பேர் தமது குடும்பங்களுடன் யாழில் குடியேறியுள்ளனர். இவ்வாறு மீளக்குடியேறிவர்களுக்கு உதவி செய்யவும் இன்னும் பலர் மீள்குடியேறுவதை ஊக்குவிக்கவும் யாழ்ப்பாணத்திலும் யாழ்ப்பாணத்துக்கு வெளியிலும் பல்வேறு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு ஏறக்குறைய 17 சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களின் செயற்பாடுகள் முரண்பாடுகளை தோற்றுவித்ததால் 2010ஆம் ஆண்டு இந்த சங்கங்கள் எல்லாம் யாழ் கிளிநொச்சி சம்மேளனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன.

இந்த சம்மேளனம் உருவாக்கப்பட்ட பின்னர் இரண்டு தலைவர்கள் போய் தற்போது மூன்றாவது தலைவர் சுழற்சி முறையில் கடமையில் இருக்கிறார். இந்த சம்மேளனம் கூட்டங்கள் கூட்டுவதையும் தலைவர் செயலாளர் உறுப்பினர்களை தெரிவு செய்வதையும் தவிற ஆக்கபூர்வமான வேறு எதையாவது செய்துள்ளார்களா என மக்கள் தற்போது கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். வெட்டுக் கொத்துகளுக்கு அப்பாற்பட்ட தலைமை கடந்த 10 மாதங்களாக இருந்தும் முறையான செயற்பாடுகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த சம்மேளனம் அடிக்கடி யாழ்ப்பாணத்தில் கூட்டங்களை கூட்டி தமது நேரத்தை வீணடிப்பதாகவே எங்களுக்கு படுகிறது.

இவர்கள் சம்மேளனத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பன போன்ற சில ஆலோசனைகளை இங்கு தருவது சாலப் பொருத்தமாக இருக்கும்.

சம்மேளனத்தின் நோக்கம்:

சம்மேளனத்தின் நோக்கங்கள் மூன்றாக  பிரிக்கப்பட வேண்டும். முதலாவது குறுகிய கால இலக்கு. இது ஒரு வருடத்துக்குள் செய்து முடிக்கப் பட வேண்டிய வேலைகள் திட்டங்கள் என்ன எனபவை பற்றியதாகும். 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் 200 வீடுகள் கட்டப்பட வேண்டும். மீளக்குடியேறியுள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் அல்லது வீடுகளுக்கும் மலசல கூடம் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாதவர்களுக்கு கட்டிக் கொடுத்தல்.

இரண்டாவது நீண்ட கால இலக்கு என்பதற்குள் யாழ்ப்பாண முஸ்லிம்களின் விற்கப்பட்ட காணிகள் மீள வாங்கப்பட வேண்டும். பள்ளவாசல்கள், பாடசாலைக் கட்டிடங்கள் பொதுக்கட்டிடங்கள் என்பன பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் ஹதீஜா பாடசாலையில் பெண்களுக்கு தனியான பாடசாலை இன்னும் 5 வருடத்தில் ஆரம்பிக்கப்பட வேண்டும். மத்ரஸா பாடசாலையில் தொழில் நுட்பக்கல்லூரியோ அல்லது வேறு ஏதாவது கல்வித்துறை நடவடிக்கைகள் இன்னும் ஒரு வருடத்தில் தொடங்கப்படும். மீராணியா கல்லூரியில் மாலை நேர வகுப்புக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.மேலும் இன்னும் ஐந்து வருடங்களில் மேலும் ஐநூறு குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் குடியேற்றப்பட வேண்டும். போன்ற திட்டங்களை கொண்டு வரலாம்.

மூன்றாவது திடீர் இலக்குகள். இந்த திடீர் இலக்குகள் காலத்துக்கு காலம் அடையாளம் காணப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

செயற்பாடுகள்:

விடயம் இவ்வாறிருக்க அதிகமான கூட்டங்கள் மூன்றாவது இலக்கை மட்டும் வைத்தே நடத்தப்படுகிறது. ஆளுநரை சந்தித்தல் அரசியல்வாதிகளை சந்தித்தல் என்பன காலத்துக்கு காலம் மேற்கொள்ளப்பட்டாலும் சரியான அமைச்சர்களோ அல்லது உதவி வழங்கும் நிறுவனங்களோ இன்னமும் சந்திக்கப்படாமலே உள்ளது.

இன்று இலங்கையில் பல அரபு நாடுகள் தமது தூதுவராலாயங்களை வைத்துள்ளன. அவற்றில் கட்டார், குவைத், சவுதி அரேபியா மற்றும் அரபு அமீரகம் என்பன பல்வேறு சமூக சேவைகளை இலங்கையில் செய்து வருகின்றன.

இவ்வாறான தூதுவர்கள் சந்திக்கப்பட்டு அவர்களிடம் எமது திட்டங்கள் கையளிக்கப்பட வேண்டும். உதாரணமாக இருநூறு வீடுகளை அமைத்துத் தருமாறு எல்லா தூதுவர்களுக்கும் மனு கொடுக்கலாம். இரண்டாவது முஸ்லிம் எய்ட் , ரஹ்மத் நிதி போன்ற உதவி வழங்கும் நிறுவனங்களைச் சந்தித்து எமது தேவைகளை கூறலாம். இவ்வாறு சம்மேளனத்தின் இலக்குகளை அடையாளம் கண்டு அவற்றை எப்படி அடையலாம் என்று சிந்தித்து அவற்றுக்கான திட்டங்கள்; வகுத்து செயற்படும் போது அவை ஆக்கபூர்வமான செயற்பாடுகளாக அமையும்.  தற்போதுள்ள சம்மேளன உறுப்பினர்களின் பதவிக் காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடையப் போகின்றது. அதற்கு முன்னர் எதையாவது செய்யலாமல்லவா..?


1 comment:

  1. குறித்த ஆக்கம் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளையும் இயல்புகளையும் அதன் இலக்கு குறித்தும் தெளிவில்லாத ஒருவரால் எழுதப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சம்மேளனத்திம் இதுவரை செய்து முடித்துள்ள விடயங்கள் பல இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. சுமார் 2500 குடும்பங்களுக்கான மீள்குடியேற்றப்பதிவுளை மேற்கொண்டமை, யாழ் அரச அதிகாரிகளுக்கு யாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளை அடையாளப்படுத்தியமை, அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்தமை, அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் போன்றவற்றினை சந்தித்தமை அனைத்து இஸ்லாமிய இயக்கங்களையும் சந்தித்தமை, வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்தமை போன்ற பல்வேறு விடயங்கள் இங்கே இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான ஆக்கங்கள் சம்மேளனம் என்னும் சமூக கூட்டமைப்பை கொச்சைப்படுத்துவதாகவும் பலவீனப்படுத்துவதாகவும் அமையும், மாற்றமாக சம்மேளனத்தைப் பலப்படுத்தும் விதமான கருத்துக்களை இங்கே முன்வைப்பது மிகவும் சிறப்பானது. சம்மேளன என்ன செய்தது என்ன செய்தது என்று நாம் யாரைப்பார்த்துக்கேட்கின்றேம், யாழ்ப்பாண முஸ்லிம் ஒவ்வொருவனும் சம்மேளனத்தின் அங்கத்தவனே என்ற பொது நிலைப்பாடு காணப்படுகின்றது. அவ்வாறாயின் நாம் ஒவ்வொருவரும் சம்மேளனத்திற்காக என்ன செய்தேம் என்று கேட்கவேண்டும், சம்மேளனத்தைக் ஆக்கபூர்வமாக விமர்சிக்கும் உரிமை எம் எல்லோருக்கும் இருக்கின்றது. ஆனால் அதனை கொச்சைப்படுத்தும் நோக்கில் கருத்துக்கள் பகிர்வது பொறுத்தமானதல்ல, கூட்டங்கள் நடத்தாமல் எதுவும் செய்ய முடியாது, ஆகக் குறைந்தது மாதாந்தம் கூட்டங்களையாவது அது நடத்துகின்றதே என்று சந்தோசப்படுங்கள். யாழ்ப்பாணத்தில் காளான்கள் முளைப்பதுபோல் அமைப்புகளும் சங்கங்களும் உருவாகும் ஆனால் மறுகணமே அவை இல்லாமல் போய்விடும், அவ்வாறு இல்லாமல் போன சங்கங்கள் ஏராளம் இருக்கின்றன. சம்மேளனம் இன்னுமொரு சங்கம் அல்ல அது ஒரு கூட்டமைப்பு. எனவே கூட்டமைப்பு ஒரு இணைவை ஏற்படுத்த முடியுமே தவிர எல்லா கடமைகளையும் தலைமேல்கொண்டு அமுலாக்கம் செய்ய முடியாது. எனவே சம்மேளனத்தை விமர்சிக்க முன்னர் அது குறித்து புரிந்துகொள்ள வேண்டும். - அப்துல்லாஹ்-

    ReplyDelete

Powered by Blogger.