இறைவன் எங்களுடன் இருக்கின்றான், வடக்கில் மீள்குடியேறியே தீருவோமென சூளுரை
(சுஐப் எம்.காசிம்)
கேள்வி: யுத்தம் முடிவடைந்து 3 வருடமாகிவிட்டது. 1990 ஆம் ஆண்டு வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் அகதி வாழ்வு இன்னும் தொடர்கின்றதே?
பதில்: உண்மை தான். இந்த மக்களில் பெரும்பாலானோர் இன்னும் அகதி முகாம்களிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். இவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் ஓரளவு மேற்கொள்ளப்பட்டபோதும் இன்னும் அகதிகளாகவே அவர்கள் வாழ்க்கை நடத்துகின்றனர். தொழில் வாய்ப்பில்லை. இட நெருக்கடி, பொருளாதாரக் கஷ்டம், சமூக ரீதியான பிரச்சினைகள், இவ்வாறு சொல்லொணாக் கஷ்டங்களை எதிர்நோக்கும் இவர்கள் தாம் வாழ்ந்த இடங்களில் மீண்டும் குடியேறும் எண்ணத்தில் உறுதியாகவே உள்ளனர்.
கேள்வி: இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படுவதாகக் கூறப்படுகின்றதே?
பதில்: யுத்தம் முடிவடைந்து அந்தப் பிரதேசங்களில் பயங்கரவாதப் பீதி நீங்கிய பின்னர் அகதி முஸ்லிம்கள் தமது பூர்வீக இடங்களைச் சென்று பார்வையிட்டனர். மன்னாரிலே முஸ்லிம்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த கிராமங்கள் குடியேற முடியாத அளவுக்கு காடு மண்டிக் கிடந்தன. இந்தக் கிராமங்களில் காடழிக்கும் நடவடிக்கைக்கு அரசின் உதவியுடன் அமைச்சர் ரிசாட் தனது அர்ப்பணிப்பான உதவிகளை நல்கினார். தன்னால் முடிந்தவரை மீளக்குடியேற விரும்புவோருக்கு அனைத்து பங்களிப்பையும் வழங்கினார். முசலி, மறிச்சுக்கட்டி, வேப்பங்குளம், சிலாபத்துறை, கொண்டச்சி, பொற்கேணி. அகத்திமுறிப்பு, பண்டாரவெளி, கூழாங்குளம் ஆகிய கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மீள்குடியேற பதிவு செய்துள்ள போதும் சில நூற்றுக்கணக்கானோரே அங்கு வாழ்கின்றனர். வயல் நிலங்கள், மேட்டு நிலங்கள் உள்ளோர் தொழிலுக்காக தங்கியுள்ளனர். விடத்தல்தீவு, பெரியமடு போன்ற இடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய குடும்பங்களேயுள்ளன.
கேள்வி: மீள்குடியேறுவதற்கு அந்த மக்கள் ஆர்வமாகவுள்ளபோதும் ஏன் இன்னும் அது சாத்தியமளிக்காதுள்ளது?
பதில்: முஸ்லிம்கள் மீள்குடியேறுவதில் பல்வேறு தடைகள் உள்ளன. இந்தச் சவால்களை முறியடித்தே நாம் இந்த நடவடிக்கையில் முன்னேற வேண்டியுள்ளது. புலிகளின் காலத்தில் அவர்களின் அதிகாரத்தின் கீழ் வேலை செய்யப்பழக்கப்பட்ட அநேகமான அதிகாரிகள் இன்னுமே அதே மனோபாவத்துடன்தான் பணியாற்றுகின்றனர். இவர்கள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு இதய சுத்தியாக ஒத்துழைக்க மறுக்கின்றனர். மீள்குடியேற வருவோரை ‘நாட்டாண்மை’ போல் நடத்துகின்றனர். “வந்தான் வரத்தான்” களாகக் கருதி உதவிகள் மறுக்கப்படுகின்றன. அலைக்கழிக்கப்படுகின்றனர். உயரதிகாரிகளாக இருப்போர் முஸ்லிம்கள் மீது பாரபட்சம் காட்டுகின்றனர். இதில் வேதனை என்னவென்றால், மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 14 உதவி அரச அதிபர் பிரிவுகள் (பிரதேச செயலகங்கள்) உண்டு. அந்தப் பிரிவுகளில் பணியாற்றும் பிரதேச செயலர்கள், உதவிப் பிரதேச செயலர்களில் ஒருவரேனும் முஸ்லிம் இல்லை. அத்துடன் மன்னார் மாவட்டத்தில் நிர்வாக சேவை தரத்தில் பணியாற்றும் எந்த ஒரு முஸ்லிம் அதிகாரியும் இல்லை. இந்த சூழ்நிலையால் சமூக ரீதியில் இந்த மக்களுக்கு ஓரவஞ்சனை நடக்கின்றது. எனினும் நல்ல மனம் படைத்த தமிழ் அதிகாரிகளை நான் நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.
மீளக்குடியேறுவதில் இன்னுமொரு கவலையான நிலையை நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. முஸ்லிம் மக்களுடன் பின்னிப் பிணைந்து வாழ்ந்த அப்பாவி தமிழ் மக்கள் தமது சகோதரர்களாக முஸ்லிம்களை எண்ணி அவர்களை அரவணைத்து வரவேற்கும் அதேவேளை மன்னார் ஆயரின் செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக இல்லை. என்ன நோக்கமோ தெரியவில்லை மீள்குடியேற வருவோரைக் கண்டால் சில சக்திகளுக்கு அலர்ஜியாக இருக்கின்றது. பிட்டும் தேங்காய்ப்பூவும் போல தமிழர்களும் முஸ்லிம்களும் வாழ்வதாக பெருமையடிப்போர் தமது செயற்பாடுகளில் அதனைக் காட்டத் தவறுகின்றனர். இந்த மனோ நிலையிலிருந்து அவர்கள் விடுபடாத வரை இன நல்லுறவு ஒருபோதும் சாத்தியமில்லை. இந்தத் தடைகளையும் மீறி ஜனாதிபதியும் அரசாங்கமும் வடக்கு முஸ்லிம்களை மீளக்குடியமர்த்துவதில் உறுதியாகவே உள்ளனர். மன்னாரில் இருந்து புலிகளால் விரட்டப்பட்ட அமைச்சர் ரிசாட் பதியுதீன் முஸ்லிம்களை மீண்டும் அங்கு குடியமர்த்துவதில் முன்னின்று உழைக்கின்றார்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 35 ஆயிரம் குடும்பங்கள் புத்தளம் உட்பட தென்னிலங்கையின் பல்வேறு இடங்களில் வாழ்கின்றன. இவற்றில் சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் மீளக்குடியேறுவதற்கு பதிவு செய்துள்ளபோதும் இந்த எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதமே மீள்குடியேறியுள்ளனர். இவர்கள் எதிர்நோக்கும் கஷ்டங்கள் அநேகம். நான் முன்னர் குறிப்பிட்டது போன்று பாரபட்சமான முறையில் உதவிகள் வழங்கப்படுகின்றன. மீள்குடியேறும் மாவீரர் குடும்பங்களுக்கு காணி வழங்கலில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்களுக்கான கொடுப்பனவுகளிலும் உதவிகளிலும் இழுத்தடிப்பு செய்யப்படுகின்றது. மருதமடு, தேவிபுரம், சன்னார் போன்ற இடங்களிலுள்ள முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் மாவீரர் குடும்பங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கோந்தைப்பிட்டியில் முஸ்லிம்களின் தொழிற்துறைகள் கூட ஏனைய மக்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனைத் தட்டிக்கேட்டால் இனவாதம் கக்கப்படுகின்றது. ஊடகங்கள் அதனை ஊதிப் பெருப்பிக்கின்றன. இந்தக் காரணங்களினால் முஸ்லிம்களில் பெரும்பாலானோர் மீள்குடியேறத் தயங்குகின்றனர்.
கேள்வி: அரசின் பங்காளிக் கட்சியொன்றின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினராகவிருக்கும் நீங்கள் அதிகாரிகள் விடும் தவறைச் சுட்டிக்காட்டுவதில்லையா? அரச மேலிடத்துக்கு முறையிடுவதில்லையா?
பதில்: எமது கட்சியின் தலைவரும் அமைச்சருமான அமைச்சர் ரிசாட் பதியுதீனும் நானும் பல முறை அரசின் உயர்மட்டத்துக்கு இதனை தெளிவுபடுத்தியுள்ளோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எடுத்துரைத்தோம். முஸ்லிம்களுக்கு காணி வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி நேரடியான உத்தரவுகளை வழங்கியுள்ளார். வவுனியாவில் ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் இது தொடர்பில் எடுத்துரைத்தோம். வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணிக்குழுவுக்கு இது தொடர்பிலான அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் வகையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது. எனினும் குழுவினால் கையளிக்கப்பட்ட அறிக்கை எமக்கு சாதகமானதாக இல்லை. ஏனெனில் எமது பிரதேசங்களில் பணியாற்றும் அதிகாரிகள் குழுவுக்கு சரியான முறையான தகவல்களை வழங்கவில்லை. அமைச்சர் ரிசாத் மீண்டும் ஜனாதிபதியிடம் இந்தப் பிரச்சினைகளை எடுத்துரைத்துள்ளார்.
கேள்வி: முஸ்லிம்கள் மீளக்குடியேற சில சக்திகள் விரும்பவில்லையென நீங்கள் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகின்aர்கள். இதற்கு என்ன காரணமென நீங்கள் நினைக்கின்aர்கள்?
பதில்: “பிட்டும் தேங்காய்ப்பூவும் போல” தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் வாழ்ந்தது அந்தக்காலம். தமிழ் மக்களின் விடிவுக்காக ஆயுதம் ஏந்துகின்றோம் என்று கூறிக்கொண்ட புலிகள் தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் ஆர்வம் காட்டாத வடபுல முஸ்லிம்களை ஆயுத முனையில் விரட்டியடித்தார்.
‘லா இலாஹி இல்லல்லாஹு முஹம்மதுர் ரஷ¤லுல்லாஹ்’ என்று கலிமா சொன்ன ஒரேயொரு காரணத்திற்காக, போராட்டத்துக்கு பயன்படுத்திய ஆயுதங்களை தமது சகோதர இனத்துக்கு காட்டி அவர்களை விரட்டியடித்தனர். இது ஓர் அப்பட்டமான இனச் சுத்திகரிப்பு. வடபுல முஸ்லிம்கள் குற்றமிழைக்காது தண்டனை அனுபவிக்கும் நிரபராதிகள். வெளிநாட்டு கிறிஸ்தவ சக்திகளின் ஒத்துழைப்புடன் தான் புலிகள் இந்த நாடகத்தை மேடையேற்றினர். வெளியேற்றத்துக்கு உருப்படியான காரணங்கள் இற்றைவரை தெரிவிக்கப்படாத நிலையில் அவ்வப்போது அவர்கள் பிதற்றிய வரலாறுகள் எல்லோரும் அறிந்ததே.
கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக சொந்த மண்ணை இழந்து வேறிடங்களில் வாழும் இந்த மக்கள் மீண்டும் வருவதால் தமது செளகரியங்கள் இல்லாமற்போகும் என்ற குறுகிய சிந்தனையே மீள்குடி யேற்றத்தை விரும்பாத சக்திகளை ஆட்கொண் டுள்ளது.
கல்வி, தொழில் வாய்ப்பு, பல்கலைக்கழக அனுமதியில் அவர்களுக்கு கிடைக்கும் கோட்டாவினால் தமது சமூகம் பாதிக்கப்படும் என அஞ்சுகின்றனர். வளங்கள் பகிர்ந்து கொடுக்கப்பட்டுவிடும் என்ற பீதி. இத்தகைய காரணங்கள் தான் இந்த எதிர்ப்புக்கு காரணமாக இருக்கலாம்.
கேள்வி: இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் தென்னிலங்கையில் வசதி வாய்ப்புகளுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றதே?
பதில்: 20 வருடத்திற்கு மேலாக சொந்த மண்ணைவிட்டு ஓர் அந்நிய மண்ணில் வாழும் அகதி முஸ்லிம்களில் ஒரு சிலர் வந்த நிலத்தில் உறுதியான கட்டுமானங்களையும் வாழ்க்கை அமைப்புக்களையும் கொண்டிருக்கின்றனர். அவர்களின் தன்னம்பிக்கையும் தளராத முயற்சியுமே இதற்குக் காரணம்.
எனினும் அவர்களை அடையாளமாகக் கொண்டு எல்லா அகதிகளும் வசதி வாய்ப்புக்களுடன் வாழ்வதாக கதையளக்கப்படுகின்றது. நான் முன்னர் குறிப்பிட்டது போன்று சுமார் 35 ஆயிரம் குடும்பங்களில் சுமார் 25 ஆயிரம் குடும்பங்கள் மீளக்குடியேற பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத சுமார் 10 ஆயிரம் குடும் பங்கள் பல்வேறு காரணங் களால் அங்கு போகத் தயங்குகின்றனர்.
கொழும்பு, குருநாகல், அநுராதபுரம் மற்றும் தென்னிலங்கையின் பல் வேறு பகுதிகளில் வாழ்க்கை நடத்தும் இந்த மக்களில் பெரும்பாலானோர் இன்னும் வாடகை வீடுகளிலேயே வாழ்கின்றனர்.
புத்தளத்தில் யு.என்.எச்.சீ ஆரின் உதவியுடன் அமைத்துக் கொடுக்கப்பட்ட 4 ஆயிரம் வீடுகளை உதாரணமாகக் கொண்டு எல்லோரும் செளகரியமாக வாழ்கின்றனர் என்று கூறுவது எந்த வகையில் நியாயம்? பெரும்பாலான மக்கள் அகதி முகாம்களில் பரிதவிப்பது ஏனோ இவர்களுக்கு புரியாமல் இருக்கின்றது.
கேள்வி: அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவி முஸ்லிம் அகதிகளுக்கு கிட்டுவதில்லையா?
பதில்: நிவாரணங்கள் கொடுப்பனவுகள், உதவிகள் எல்லாம் இந்த மக்களுக்கு இப்போது எட்டாக்கனி. யு.என்.எச்.சீ.ஆர், உலக உணவு தாபனம் போன்ற சர்வதேச அமைப்புக்களும் பாரபட்சமாகவே செயற்படுகின்றன.
பழைய அகதிகள், புதிய அகதிகள் என வகைப்படுத்தப்பட்டு, வடபுல முஸ்லிம்கள் பழைய அகதிகளாக முத்திரை குத்தப்பட்டதன் விளைவே இந்த நிறுத்தம். சர்வதேச நிறுவனங்களிடம் நாம் பலமுறை முறையிட்ட போதும் எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காவே உள்ளது.
கேள்வி: வடபுல முஸ்லிம்களின் மீள்குடி யேற்றம் வெற்றியளிக்கமாட்டாது என்று கருதலாமா?
பதில்: நான் அவ்வாறு நினைக்கவில்லை. அமைச்சர் ரிசாட் பதியுதீன் இந்த விடயத்தில் அதீத அக்கறையுடன் சளைக்காமல் செயற்படுகின்றார். அவரை அரசியலிலிருந்து ஓரங்கட்ட எத்தனையோ சதிகள் இடம்பெற்றாலும் ஒரு போதும் அந்த முயற்சி சாத்தியமாகாது.
Post a Comment