வாசிப்பின் அவசியம்..!
(எஸ்.எல். மன்சூர் (B.Ed))
வாசிப்பின்மீதான பற்றினை ஏற்படுத்த நூலகங்கள் நவீனமயப்படுத்தப்பட்டு, அறிவார்ந்த தன்மைக்கு வித்திடவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
அண்மையில் ஒரு நூல்நிலையத்தின் முகப்பில் எழுதப்பட்டிருந்த வாசகமிது. 'இம்மாதம் (ஒக்டோபர்) வாசிப்பு மாதமாகும். வாசிப்பில்; பற்றினை ஏற்படுத்த வீட்டுக்கொரு பத்திரிகையை பெற்று வீட்டையும் ஒரு வாசிப்பு நிலையமாக்குவோம்' என்று அதில் எழுதப்பட்டிருந்தது. இலங்கையில் நாளாந்த, வாராந்த, மாதாந்த, காலாண்டு, அரையாண்டு, வருடாந்த, இருமாதத்திற்கு ஒருமுறை என்று பலதரப்பட்ட பத்திரிகைகள், சஞ்சிகைகள் வெளியாகின்றன. இதற்கும் மேலாக நிறுவனங்கள், தனிநபர்கள் மூலமாகவும், வெளிநாட்டிலிருந்தும் பத்திரிகைகள் சஞ்சிகைகள் வெளியாகி மக்களின் பார்வையில் கடைகளில் தொங்குவதைப் பார்த்திருக்கின்றோம். இணையங்கள், வெப்தளங்கள் என அறிவுப்புரட்சி ஒருபுறம். ஆனால் இரண்டுகோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்ற இந்நாட்டில் எழுத வாசிக்க தெரிந்தவர்கள் என்று உலகில் முன்னிலையில் இருக்கின்றோம் என மார்தட்டும் நம்மிடையே எத்தனைவீதமானவர்கள் குறைந்தது தினசரிப் பத்திரிகையை வாங்கிப் படிப்பவர்கள் என்றால் அது தசக்கணக்கில்தான் வரும். இவ்வாறான நிலையில் வருடந்தோறும் வாசிப்பின் மேன்மையை, அதன் பயனை மக்கள் அனைவரும் நுகர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
ஒக்டோபர் மாதம் வந்துவிட்டால் சில பாடசாலைகளில் மாணவர்கள் ஏதோ தம்மால் இயன்ற ஒரு ஊர்வலத்தையோ, கட்டுரை, கவிதைப் போட்டியையோ நடாத்துவர். ஊரிலுள்ள நூல்நிலையத்தில் இம்மாதம் வாசிப்புமாதம் என்கிற கொட்டை எழுத்துடன் முடிந்துவிடும் அம்;மாதம். வாசிப்பின் மகத்துவத்தினை உணர்த்துகின்ற செயற்பாடுகளில் பொதுவாக களமிறங்குவது குறைவாகத்தான் உள்ளது. அந்தநிலைமை மாற்றம் பெற்று நவீன உலகின் போக்குக்குணர்ந்தவாறு தமது தாய்மொழியில் கூடிய கரிசனையுடன் சங்கமிப்பதில் கற்றோர் மற்றும் அறிவுடமை அமைப்புக்கள் வழித்துணை காட்டுவது சாலச்சிறந்தது. உண்மையில், மொழியின் பண்பாட்டு வளர்ச்சிக்கு வாசிப்பு மிக முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது. ஏனெனில் மனிதன் பயன்படுத்துகின்ற தொடர்பாடல்களில் மொழி பிரதான பாத்திரத்தை வகிக்கிறது. மொழியின் வளர்ச்சி இன்மையால் வழக்கொழிந்த மொழிகள் பலவுண்டு. அதனை தவிர்ப்பதற்காக நமது தாய்மொழியான தமிழ்மொழி உலகப் பொதுமொழியாகவே மிளிர வேண்டுமென நாம் அனைவரும் ஆசைப்படுகின்றோம். செம்மொழிக்கான அந்தஸ்தும் காணப்படுகின்றது. அதேவேளை நாகரீகம் என்கிறபெயரில் தமிழை மறந்து வேற்றுமொழிகளை சிறுவயதிலிருந்து கற்க வேண்டுமென ஆர்ப்பரிக்கின்றோம். இந்நிலை தொடருமானால் மொழியின் உபயோகம் குறைந்து வழக்கொழிந்த மொழிகளின் பட்டியலில் சேர்ந்துவிடும் நமது தமிழ். அவ்வாறான நிலைமை வருவதற்கு முன்னர் மொழியில் ஆர்வத்தையும், ஆசையையும், அதன் இனிமையையும் நாளைய சந்ததிக்கு நகர்த்தும் நோக்கில் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திடவும், நமது தமிழ்மொழியை போற்றிப் பாதுகாத்திடவும் வருடம் முழுவதும் நினைவில் நிறுத்துதல் கட்டாயமாகும்.
தற்காலம் அறிவுப்பிரவாகம் ஊற்றெடுக்கின்ற காலம். இந்நூற்றாண்டை அறிவு மையம் நிறைந்த நூற்றாண்டு என்கிறோம். புதிய புதிய அறிவுகண்கள் நிமிடத்திற்கு நிமிடம் மாற்றம் காணப்பட்டு வரும் இந்நாட்களில் இணையத்தளங்களில் இணையப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டு கணனியுடனான தொடர்பாடல் நிறைந்துள்ள ஒரு காலம். ஆய்வுகளும், அறிக்கைகளும் துரிதகெதியில் ஊற்றாக வெளிப்பட்டு அவை நூலுருப்பெற்று வருடமொன்றுக்கு 50ஆயிரத்திற்கும் மேலாக நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்ற காலம். இவ்வாறு ஒருவருடத்தில் வெளியாகும் நூல்களை வாசிக்கவே அவனது ஆயுள் போதாது. இந்நிலையில் நமது அன்றாட வாழ்வில் மையம் கொண்டுள்ள எழுத்தறிவின் தன்மையை பிரயோசனப்படுத்த முயல்வதற்கு வாசிப்பினைப் பலப்படுத்த வேண்டியது அத்தியவசியமாகும்.
பாடசாலைக் கல்வியில் ஆரம்ப வகுப்புக்களில் வாசிப்பின் முக்கியத்துவம் உணரப்படாமையினால் வாசிப்புத் திறனில் இடர்படுகின்ற ஒருதொகை மாணவர் கூட்டம் வளர்ந்து கொண்டு வருகின்றநிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் பயிற்சிக் கொப்பிகளை எடுத்துப்பார்த்தால் எழுத்துப்பிழைகள் மலிந்து, ஒலிபேதங்கள் பிறழ்ந்து காணப்படுகின்றன. ஆசிரியர்களும் இதனைக் கண்டறிந்து பரிகாரம் தேட முயற்சிக்க வேண்டும். தரம் ஒன்றில் சேருகின்ற ஒரு பிள்ளை பதினொரு ஆண்டுகளின் பின்னர் சாதாரண தரப் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் கு எடுத்தால் பதினொரு ஆண்டுகளாக அவனை ஏமாற்றி பாடசாலையில் வைத்திருந்த குற்றத்திற்காக அவனுக்குக் கற்பித்த அத்தனை ஆசிரியர்களும் தண்டனைக்குரியவர்;கள் என்று கூறுவது சாலப் பொருத்தமாகுமா? வீட்டிலிருந்து சொற்ப அறிவுடன் பாடசாலைக்கு வந்த அந்தப்பிள்ளைக்கு மொழியறிவிலும் கு காணப்பட்டால் இத்தனை ஆண்டுகள் அவன் பாடசாலையில் எதனைச் செய்தான், அவனைக் கவனித்த ஆசிரியர்கள், பாடசாலை என்ன செய்தது? என்பது கேள்விக்குறிய விடயம். இவ்வாறான நிலைகள் தோற்றம் பெறாமல் இருக்க மொழியில் சிறப்பிக்க வேண்டியது ஆசிரியர்களது கடமையாகும். மொழியினை வளப்படுத்துகின்றபோது அனைத்துப் பாடங்களுக்கும் வழியேற்படுத்தப்படுகின்றது. மேலும், வாசிப்பின் மீதான பற்றுக்களை அதிகரித்து நாளாந்த செயற்பாடுகள், ஏனைய பாடங்களைக் கற்கவும் உதவிடுகின்றது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
உலகின் ஜாம்பவான் என்று மார்தட்டும் அமெரிக்காவில் உயர்கல்வி கற்போரில் சரியாக பாதிப்பேர் வாசிக்க முடியாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இந்தியா தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில் உச்சத்தில் உள்ள நாடு. இங்கு சுமார் 35வீதமானவர்கள் எழுத்தறிவற்றவர்களாகக் காணப்படுகின்றனர். இதேவேளை எழுத்தறிவு உள்ளவர்களிடம் வாசிப்பு இன்மையும் காணப்படுகின்ற ஒரு நிலைமை பலநாடுகளில் காணப்படுகின்றன. ஒரு ஆய்வின்படி தொழில்நுட்ப அறிவார்ந்த சமூகத்தில் வாழத்தக்கவர்களில் பெண்களே அதிகமானவர்கள் என்றும், எழுத்தறிவின்மை தொடர்பான திறன்களில் சில பணக்கார நாடுகளிலுள்ள இளைஞர்கள் குறைபாட்டுடன் காணப்படுகின்றனர் என்கிற உண்மைகள் தெரியவந்துள்ளன. அறிவுடமை சமுதாயத்தில் வாசிப்பினை மேற்கொள்வோர் அதிகமாகக் காணப்படுவர். இதற்கான உந்து சக்தியை நூலகங்கள் வழங்க வேண்டும். வெறுமனே பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் வாசித்துவிட்டு பொழுதைக் கழிக்கின்ற ஒரு நிலையமாக காணப்படுகின்ற வாசிப்பகங்கள் தரமான நூல்நிலையங்களாக மாற்றம் காணப்பட வேண்டும். சர்வதேச நூலக சம்மேளத்தின் கருத்துப்படி (ஐகுடுயு) தகவல்களைத் திரட்டவும், சுதந்திரமான தீர்மானங்களை மேற்கொள்ளவும், திறன்களைப் பெற்றுக் கொள்ளவும், கலாசார மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் உதவும் வகையில் நூல்நிலையங்கள் சுதந்திரமாகவும், திறமை வாய்ந்ததாகவும் அதனைப் பயன்படுத்தக்கூடியதாகவும் அமைந்திருந்தல் வேண்டும்' என்று கூறுகின்றது.
இவ்வாறான நூலகங்கள்தான் இன்றைய தேவையாகும். வாசிப்பு மாதத்தைக் கொண்டாடுவதற்காக ஒரு விளம்பரத்தை போடுவதும், ஒருசில அரசியல்வாதிகளை மேடையிலேற்றி வாசிப்பு மாதத்தின் சிறப்பைக் கூறுவதும், வாசிப்பற்றவர்களையும், உலக நடப்புக்களைப் பற்றிய அறிவில்லாதவர்களையும், குறைந்தது தினசரிப்பத்திரிகையைக் கூட வாசிக்காதவர்களை எல்லாம் அழைத்து நூலகத்தைப் பற்றி பேசவைப்பதும், எதனைக் காட்சிப்படுத்துவது, எதனை சேமித்துவைப்பது என்று வரையறையின்றி நூலகங்களில் அரசியல்வாதிகளால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் நூலக உதவியாளர்கள் என்கிற பேரில் வாசிப்பகங்கள் உரிய நேரத்திற்குத் திறக்காமல் மூடப்பட்டிருக்கும் கேவலமான நிலைமைகள் கிராமப்புறங்களில் காணப்படுகின்ற கவலைதரும் நிலைமைகளுக்கும் மத்தியில், வாசிப்பின் மேன்மையை மேம்படுத்த வேண்டுமானால் மேலே கூறப்பட்ட விடயங்கள் களையப்பட வேண்டும். வாசிப்புநிலையங்கள் நவீன தகவல் தொழில்நுட்பங்கள் நிறைந்த கூடங்களாக மாற வேண்டும். அனைத்து வகையான நூல்களும் அங்கு காணப்பட வேண்டும். நூல்களைப் பெற்று வாசிக்கும் வாசகர்களது வட்டம் அதிகரிப்பதற்கான வேலைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி அறிவார்ந்த சமூகக் கட்டமைப்பினை மாற்றியமைக்கும் வழிவகைகள் மேலோங்குகின்றபோது இவ்வாறான வாசிப்பு மாதத்தின் மகிமை எழுச்சி பெறும். இதற்கான முன்திட்டங்களை மேற்கொண்டு செயற்படுத்துவதான் சாலச்சிறந்ததாகும்.
பாடசாலைக் கலைத்திட்டத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள வாசிப்பு
'வாசிப்பானது ஒருமனிதனை முழுமையாக்குகிறது' என்று கூறுவர். உண்மையில் மொழியின் அடிப்படையான கூறுகளாக 'செவிமடுத்தல், பேச்சு, வாசிப்பு, எழுத்து' ஆகிய மொழித்திறன்களை உள்ளடக்கியதாகவே காணப்படுகிறது. 1997ஆம் ஆண்டிற்குப்பின்னர் நமது பாடசாலைக் கல்வித்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விச்சீர்திருத்தங்களின் மூலம்; எதிர்பார்க்கப்படும் தேசிய குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காக சில அடிப்படையான தேர்ச்சிகளை மையப்படுத்தியவாறு பாடசாலைக் கலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்;க்கின்றபோது முதலாவதாக 'தொடர்பாடல் தேர்ச்சிகள் மூலமாக எழுத்தறிவு, எண்ணறிவு, சித்திர அறிவு, தகவல் தொழில்நுட்ப தகைமை ஆகிய நான்கு வகை துணைத்;;; தொகுதிகளாக வகுக்கப்பட்டு, கவனமாக செவிமடுத்தல், தெளிவாகப் பேசுதல், கருத்தறிய வாசித்தல், சரியாகவும், செம்மையாகவும் எழுதுதல், பயன்தருவகையான கருத்துப் பரிமாற்றம்' ஆகியவற்றை இத்தொடர்பாடல் தேர்ச்சியின் ஊடாக முக்கியத்துவம் பெற்றுள்ளதையும் அவதானிக்கலாம். எனவேதான் கல்வித்துறையில் குறிப்பாக ஆரம்பக்கல்வி புலத்தில் வாசிப்பின் முக்கியத்துவத்;தினை உணர்த்தும் முகமாக 'மௌனவாசித்தல், உரத்து வாசித்தல்' என்கிற சொற்கள் கற்றல் - கற்பித்தலில் மொழிப்பாடத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்குவதையும் காணலாம்.
பாடசாலையில் ஆரம்பவகுப்புக்களில் கற்கின்ற ஒரு மாணவனுக்;கு ஆசிரியர் குறிப்பாக மொழிப்பாடத்தினை நன்;கு விளங்கக்கூடிவாறு கற்பித்தல் பணிபுரிதல் வேண்டும். ஆசிரியர் பாடத்திற்கான விடயக்கூறுகளை தெளிவாக புரிந்து கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் போது பொருத்தமானவாறு ஒன்றிணைந்து செயற்படுத்தல் அவசியமாகும். மொழிரீதியாக ஆரம்பப்பிரிவு வகுப்புக்களில் எதிர்பார்க்கப்படுகின்ற தேர்ச்சிகளில் பின்வரும் விடயங்கள் வாசிப்பில் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது. அதாவது கவிதை, பாடல், கதைகேட்டும் வாசித்;;தறிதல், பிழையின்றி உச்சரித்து உரத்துவாசித்தல், செவிமடுத்தல். பேச்சு, வாசிப்பு, எழுத்து சம்பந்தமான நற்பழக்கங்கள் பற்றியமை, எழுத்துப் பொறிமுறைகளை அனுசரித்து வாசித்தல், வாசித்தபின் கிரகித்து வெளிப்படுத்துதல், சொற்களஞ்சிய விருத்திக்காக வாசித்;தல்;, இரசனையுடன் வாசித்தல் இவ்வாறாக 'தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையான' வகுப்பு மாணவர்களின் நலன் கருதியதாக இவ்வகையான தேர்ச்சிகள் வாசிப்பினை முன்னிலைப் படுத்துவற்காக ஆசிரியர்களால் முன்கொண்டு செல்ல வேண்டுமென கல்விப்புலத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது.
நமது நாட்டில் குறிப்பாக தமிழ் மொழியானது ஆரம்பம் முதல் உயர்கல்வி வரையிலும் போதிக்கப்பட்டு வருவதுடன் சகல பாடங்களும் தாய்மொழியிலேயேதான் கற்பிக்கப்பட்டும் வருகின்றன. இருப்பினும் மொழிகற்றலில் ஒரு தொகை மாணவர்கள் பரீட்சைகளின்போது வெளிப்படுத்துகின்ற அடைவு மட்டங்கள் பூச்சியமட்டத்தில் காணப்படுவதானது கவலை அளிப்பனவாகவே உள்ளது. காரணங்கள் பல கூறப்பட்டாலும் ஆரம்ப வகுப்புகளின் போது கற்பித்தல் முறையிலுள்ள குறைபாடுகளும், நவீனத்துவமிக்கதான தொழில்நுட்ப ரீதியிலான கற்றல் - கற்பித்தலை விடுத்து, காலத்திற்குதவாத பாரம்பரிய கற்றலையே மேற்கொள்வதன் பயனாக வாசிப்பு, எழுத்து போன்ற திறன்களில் இருள் சூழ்ந்த தன்மையே இதற்கு காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆரம்பவகுப்புக்களில் மாணவரில் விரைவான வாசிப்பினை ஏற்படுத்துவதற்கான பல்வேறு பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென எதிர்;;;பார்க்கப்படுகிறது. அந்தவகையில் பாடசாலைகளில் நடைபெறும் பல்வேறு புறக்கீர்த்தி நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துதல் சிறப்பானதாகும். காலை ஆராதனையின்போது நற்சிந்தனை வாசித்தல், அன்றைய செய்திகளை வாசித்தல், மாணவர்மன்றங்களில் மாணவர்களை பேசவும், வாசிக்கவும் ஊக்குவித்தல். இவ்வாறு அனைத்து மாணவர்களுக்கும் சந்தர்ப்பங்கள் வழங்குகின்றபோது இந்த மாணவர்கள் எதிர்;காலத்தில் நல்ல பேச்சாளர்களாகவும், அறிவிப்பாளர்களாகவும், சமுதாயத்தை வழிநடாத்துபவர்களாகவும் அமைவதற்கான அடித்தளமாகவே இவ்வாசிப்புத்துறை உந்து சக்தியாக அமைந்துவிடுகிறது. எனவேதான் மொழித்திறன்களை மேம்படுத்துவதற்கு வீடும், வீட்டுச் சூழலும் உதவவேண்டும் என்பதையும் நாம் கருத்திற்கொள்ள வேண்டும்.
ஆசிரியர் மொழியைக் கற்பிக்கின்ற அணுகுமுறைகளில் கீழ்பிரிவு மாணவர்களுக்கு கதைகூறல், பாடுதல், நடித்தல், பாவனைசெய்தல், செய்துகாட்டுதல், வாசித்தல், பேசுதல், உரையாடுதல், பரிமாறுதல், எழுதுதல்;;, வரைதல், விளக்கங்கள் கூறுதல் போன்றவற்றை உள்ளடக்கியதான செயற்பாடுகளிலும், விளையாட்டுக்களிலும் மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் மொழித்திறனை மேம்படுத்தவும் ஆசிரியர் உதவலாம். கற்றலின் ஊடாக மொழி பயன்படுகிறது. எனவே வாசிப்பு என்பது எழுத்தில் உள்ளவற்றை கண்களால் பார்த்து, வாயால் உச்சரித்து பொருளை உணர்ந்துவது என்பதாக கூறுவர். வாசித்தல் மூலமாக சொற்களை காணுதல், உச்சரித்தல், பொருள் உணர்தல் ஆகிய மூன்று கூறுகள் உள்ளடங்குவதுடன், வாசித்தல் மாணவர்களிடையே பல்வேறு திறன்களையும் விருத்தி செய்யவும்; உதவுகிறது.
இன்று வாசிப்புத்துறையானது நவீன தொடர்பாடல் சாதனங்களால் சற்று விரிவடைந்து செல்கின்றமை கண்கூடு. எந்தவொரு விடயத்தையும் வாசித்தறிந்தே உணர்;;;;ந்து கொள்ளமுடிகிறது. ஆதலால்தான் சிந்தனை சிறப்பாக அமைந்திட அறிவை வளர்;த்துக் கொள்ள, தான் வாசிக்கும் சொல்லின் பொருள் அறிந்து அதன்படி ஒழுகுவதற்கும் வாசிப்பு துணைபுரிகிறது. பாடசாலைகளில் வாசிப்பு என்கிற திறனை மேம்படுத்துவதற்காக குறிப்பாக ஆரம்பப்பிரிவு மாணவர்கள் மாத்திரமன்றி இடைநிலை மாணவர்களுக்கும் பெரிய எழுத்துக்களுடன் கூடிய கதைப்புத்தகங்கள், கவிதை, கட்டுரை போன்ற நூல்களையும் வாசித்தறிந்து பொருள் உணர்கின்றபோது வாசிப்பு மேம்படுவதற்கு வழித்துணையாக அமைகின்றது. எனவேதான் எந்தவொரு விடயமானாலும் கேட்டமாத்திரத்தில் அவற்றினை அறிந்து செயற்படும் தன்மையுள்ளவர்கள் வாசிப்பில் திறமையுள்ளவராகவே காணப்படுவதால் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளில் அதிகூடிய புள்ளிகள் பெறுவதற்கும் வேகமான வாசிப்பு, விளங்கிக் கொள்ளும் தன்மைகள் அடிப்படையான அம்சங்களாக காணப்படுகின்றன எனக்கூறப்படுகின்றது. எனவேதான், வாசிப்பின் மூலம் முழுமைபெற்ற கல்வியறிவினை பெறலாம் என்பது திண்ணம்.
வாசிப்பில் நூல் நிலையங்கள் கொண்டுள்ள போக்குகள்!
மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடநூல்களில்(தமிழ்மொழி) இருந்து மொழித்திறன்களை விருத்தி செய்யக்கூடியவாறு பயன்படுத்துதல் வேண்டும். ஆரம்ப வகுப்புக்களிலுள்ள மாணவரில் விரைவான வாசிப்பினை ஏற்படுத்துவதற்காக பாடசாலையின் நூலகங்கள் மூலம் வாசிப்பதற்கு புத்தகங்களை வழங்கி வாசிப்பினை மேம்படுத்த ஆசிரியர் முனைதல் வேண்டும். இன்று அனைத்து பாடசாலைகளிலும் நூலகங்கள் காணப்படுகின்றன. அரசு பல இலட்சங்களை செலவுசெய்து நூல்களை வழங்கிவருகின்றது. கடந்த 1995ஆம் ஆண்டிலிருந்து பாடசாலைகளுக்கு நூல்கள் வழங்கப்பட்டுவரும் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன் மூலமாக மாணவர்களின் துணைவாசிப்பு நூல்கள் இல்லாத குறைபாட்டை அரசு மேற்கொண்டமை பாடசாலைகளில் பொதுவாக வாசிப்பில் பின்தங்கிய நிலை காணப்படுகின்றன என்பதைக் கண்டறிந்த ஆய்வுகளின் அடிப்படையில் காணப்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்கவே பாடசாலை நூலகங்கள் பலப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆனால் பாடசாலைகளில் காணப்படும் நூலகங்களில் நூல்கள் அடிக்கியவாறே காணப்படுகின்றன. பாடசாலை நூலகர் ஒருவரிடம் இதுபற்றி வினவியபோது 'நூல்கள் அழுக்கடைந்துவிடும் யாருக்கும் கொடுக்க கூடாது என்று அதிபர் உத்தரவிட்டுள்ளார்' என்று கூறும் அளவுக்கு பாடசாலைகளின் நிலைமை காணப்படுகின்றது. அனைத்துப் பாடசாலைகளிலும் ஏதோர் வடிவில் நூலகங்கள் காணப்படுகின்றன. பெரிய பாடசாலைகளில் நூலகங்கள் தனியாக காணப்படுகின்றன. ஆனால் பொதுவாக பாடசாலை மாணவர்களுக்கு நூல் வழங்கும் சேவையோ, ஆசிரியர்கள் அவற்றினைப் படிக்கும் ஆர்வமோ குறைவாக காணப்படுவதற்கு என்ன காரணம் என்பதை நோக்கினால், நூலகங்களுக்குள் வேறு பாடங்களை நடாத்துவது, நூல்கள் யாருக்கும் வழங்கப்படாது இருத்தல், நூலகர் இன்மை, நூலகரை வேறுபாடங்களுக்குப் பயன்படுத்துதல், நூலகங்கள் அமைந்துள்ள இடம்; பொருத்தமற்ற தன்மை, நூலகங்களுக்கு அண்மையில் மலசல கூடங்கள் அமையப்பெற்றுள்ளமை போன்ற பல காரணங்கள் பாடசாலை நூலகத்தின் மகிமை குறைவுக்கு காரணமாக அமைந்திருக்கின்றன. இந்நிலை முழுமையாக மாற்றம் பெறச் செய்வதில் ஆசிரியர்கள், அதிபர்கள் கூடிய கவனம் மெடுத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நூல்களை வழங்கி வாசிக்கச் செய்தல் வேண்டும்.
ஆதலால்தான் எழுத்தறிவுக்கு அடிப்படையாக அமைகின்ற வாசிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்குடன் பல நாடுகளில் நூலகங்கள்தான் பிரதான பாத்திரத்தை வகிக்கின்றன. யாழ்ப்பான நூலகம் ஒருகாலத்தில் தெற்காசியாவிலே மிகவும் புகழ்பெற்ற நூலகமாக காட்சியளித்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதுபோன்று யாழ்ப்பானத்தின் அறிவுப்புரட்சியை பொறுக்க முடியாத சிலரின் அட்டகாசங்களினால் யாழ்ப்பான நூலகம் எரியூட்டப்பட்டது. அதன் எதிரொலி இன்று உலகளாவிய ரீதியில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழ்மக்களின் வியாபகத் தன்மைக்கும் கட்டியம் கூறிய அந்த யாழ் நூலகம் நெஞ்சினில் ஆழமாகப் பதிந்தமைதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ்வாறு நூலகங்களின் பயனை மாணவப் பருவத்திலிருந்தே பயன்படுத்த, பழக்கப்படுத்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் உதவவேண்டும். அறிஞர் ஒருவரின் கூற்றுப்படி 'எழுத்தறிவு இல்லாதிருப்பது பெரியதோர் குற்றமல்ல. ஆனால் எழுத்தறிவு இருந்தும் வாசிக்காமல் இருப்பதுதான் பெரிய குற்றமாகும்' எனக்கூறுகின்றார். அப்படியான நிலை தோற்றம் பெறக் கூடாது. வாசிப்பு நூல்களையும், பத்திரிகைகளையும் ஒவ்வொருநாளும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துதல் உளத்திற்கு நலமாய் அமையும்.
யுனெஸ்கோவின் அறிக்கையின்படி(2003) 29நாடுகளில் செய்திப்பத்திரிகை இல்லாமலும், உலகின் 50வீதமானநாடுகளின் நூலகங்களில் உள்ள மொத்த நூல்களில் ஒரு நபருக்கு ஒரு நூலைவிட குறைந்தளவே காணப்படுகின்றன. என்று கூறியுள்ளது. ஆனால் இந்தநிலைமைகள் நமது நாட்டைப் பொறுத்தவரையில் இத்தொகை கணிசமான உயர்வையே காட்டுகின்றது. அதேவேளை நியுசிலாந்து, பின்லாந்து போன்ற நாடுகளில் வாசிப்போர் தொகை கூடுதலாக காணப்படுகின்றது. இந்த விடயத்தில் நாம் பின்தங்கியவர்களாகவே காணப்படுகின்றோம். காரணம் வாசிப்பின் உன்னத பெறுமானம் அறிந்திராதோர் அதிகம். வேறு வேலைகளில் ஈடுபடுவதும், மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிடுவதும், வீணற்ற விடயங்களில் காலம் கழிப்பதிலும் அல்லலுற்று திரிகின்ற நிலையில் காணப்படுகின்றனர். இந்த நிலை மாற்றப்பட்டு ஒவ்வொரு பிரதேசத்திலும் உள்ள நூலகங்கள் நல்லமுறையில் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.
எவ்வாறாயினும் புதிய தகவல் தொழில்நுட்பத்திறன்களை இன்றைய நவீன யுகத்திற்கேற்வாறு தகவல் கலாசாரத்தின் அடிப்படையில் தகவல்களைப் பெறவும், மற்றவர்களுக்கு வழங்கவும் முனைப்புடன் காணப்படவேண்டும். கணனிப் புரட்சி உலகை ஆட்டிப்படைக்கும் காலம். எந்தவொரு தொழில் புரிகின்றவர்களும் தமக்கான பணியினை மேம்படுத்துவதற்கு புதிய புதிய தகவல்கள் உள்வாங்கப்படுவதற்கும், மாற்றங்களைக் காண்வதற்கும் வாசிப்பு முக்கிய பங்காற்றுகின்றது. எண்ணும் எழுத்தும் கண்னெத்தகும் என்பார்கள். எழுத்துக்கள் எழுதும் பழக்கம் குறைவடைந்து வருகின்ற ஒருநிலைமை இன்று கணனி யுகத்தின் பரிமாணத்தில் விழுந்துள்ளது. விரலால் தொட்டு எழுத்துக்களை எழுதுவதும், எழுத்துக்களை சேகரித்து வாசிக்கும் நவீன இலத்திரனியல் சாதனங்கள் வியாபித்து வந்தாலும் வாசிப்பதை தவிர்க்க முடியாது. எதனையும் வாசித்தே அதன் உள்ளார்ந்த கருத்தினை அறிய முடியும். எனவேதான், இன்றைய வாசிப்பு மாதத்தின் முழுமையை முழுமையாக பிரயோசனப்படுத்த முயற்சிக்கும் ஒவ்வொருவரும் தன்னால் இயன்றளவு மற்றவரையும் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த முனைதல் வேண்டும். கால்ஃபோர் என்கிற அறிஞர் 'நல்ல நண்பர்களைத் தேர்தெடுத்ததற்குப் பிறகு அடுத்து நாம் தேர்ந்தெடுக்க வேண்டியது நல்ல புத்தகங்களைத்தான்' என்று கூறுகின்றார். நூல்களினதும், நூலகங்களினதும் முக்கியத்துவங்கள் உணரப்பட்டு வாசிப்பு மேலோங்குவதற்கு உதவிடுதல் இம்மாதத்தின் சிறப்பை மேம்படுத்துவதாக அமையும் என்பதுதான் யதார்த்தமாகும்.
Can you send this to my email. please
ReplyDelete🥰🥰
ReplyDelete