Header Ads



இலங்கைக்கு திரும்பும் தமிழர்களுக்கு பாதுகாப்பு பிரச்சினை இல்லை

(BBC)

இலங்கையிலிருந்து யுத்த காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்றவர்கள் நாடு திரும்புவதில் எந்தவிதமான பாதுகாப்பு ரீதியான பிரச்சனைகளும் இல்லையென்று இந்தியாவில் இலங்கை அகதிகளின் நலன்சார் விடயங்களில் ஈடுபட்டுவரும் தொண்டுநிறுவனமான ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத்தின் (ஆஃபர்) தலைவர் எஸ்.சி. சந்திரஹாசன் கூறுகிறார்.

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு திரும்பிச்சென்றுள்ள இலங்கை அகதிகள் 6 ஆயிரம் பேர் வரையில் தமக்கு அங்கு பாதுகாப்புப் பிரச்சனைகள் இருப்பதாக உணரவில்லை என்றும் அவர்களுக்கு வாழ்வாதாரப் பிரச்சனைகளே இருப்பதாகவும் அவர் பிபிசி யிடம் தெரிவித்தார்.

தமிழகத்தில் வசிக்கின்ற இலங்கை தமிழ் அகதிகள் சொந்த நாட்டுக்கு திரும்பிச் செல்வதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் தமது அமைப்பு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இருநாட்டு அரசுகளுடன் இதற்காக பேச்சுநடத்தி இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை உருவாக்கும் முயற்சிகளிலும் தாம் ஈடுபட்டிருப்பதாகவும் சந்திரஹாசன் தெரிவித்தார்.

தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கைத் தமிழ் அகதிகள் வசிக்கின்றனர், அவர்களில் 70 ஆயிரம் பேர்வரையில் முகாம்களிலேயே தங்கி இருக்கின்றனர் என்று ஆஃபர் அமைப்பு கூறுகிறது.

1983-ம் ஆண்டுக்குப் பின்னர் தமிழகத்துக்கு அகதிகளாகச் சென்ற குடும்பங்களிலிருந்து சுமார் 21 ஆயிரம் பேர் இந்திய மண்ணில் பிறந்தவர்கள் என்றும் அவர்களில் தற்போது 16 ஆயிரம் பிள்ளைகளுக்கு இலங்கை உயர்ஸ்தானிகரகம் ஊடாக பிறப்புச் சான்றிதழ்களைப் பெற வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் பிறப்பை பதிந்து பிறப்புச் சான்றிதழ் பெறாதவர்கள் 'நாடற்றவர்களாகும்' நிலை இருப்பதால் அவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் பெற்றுக்கொடுத்து இலங்கைக் குடியுரிமையை உறுதிப்படுத்த வேண்டியிருப்பதாகவும் ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத்தின் ஸ்தாபகர் சந்திரஹாசன் தெரிவித்தார்.

இதேவேளை, மலையக பிரதேசங்களிலிருந்து வடக்கு கிழக்கு பகுதிகளில் குடியேறி, பின்னர் அங்கிருந்து யுத்தத்தால் இடம்பெயர்ந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்த இந்திய வம்சாவளி தமிழர்களில் சுமார் 30 ஆயிரம் பேர்வரையில் முகாம்களில் இருப்பதாகவும் அவர்கள் வந்த காலத்தில் நாடற்றவர்கள் நிலையில் இருந்ததால் அவர்களுக்கும் குடியுரிமை ஆவணங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியிருப்பதாவும் அவர் கூறினார்.

அந்த நடவடிக்கையின் ஒருகட்டமாகவே சென்னையிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஊடாக ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் இருப்போருக்கு சனிக்கிழமை பிறப்புச் சான்றிதழ்களும் குடியுரிமை ஆவணங்களும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கையில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் மக்கள் குடியிருப்பு காணிகளில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ளதையும் அங்கு அரசியல் தீர்வுத்திட்ட முயற்சிகள் முடங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டி  கேள்வி எழுப்பியபோது, அந்தப் பிரச்சனைகள் அரசியல் பேச்சுவார்த்தைகள் மூலமாக பேசித் தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் சுட்டிகாட்டினார்

No comments

Powered by Blogger.