Header Ads



முஸ்லிம்களின் பலாத்கார வெளியேற்றமும், இன்றைய நிலையும் (படங்கள்)


(ஜான்ஸின்)


1970களில் ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுத ரீதியாக வடிவு பெற்ற போது முதல் படுகொலையாக அல்பிரட் துரையப்பாவின் படுகொலை இடம் பெற்றது. அல்பிரட் துரையப்பா தமிழரின் விரோதி, தமிழினத் துரோகி என்பது போட்டி தமிழ் அரசியல் வாதிகளால் போலி முத்திரை குத்தப்பட்டார். இந்தப் போலி அரசியல் வாசகங்களை உண்மையென நம்பிய பிரபாகரனால்  1975 யூலை 27 அன்று பொன்னாலை வரதராஜ பெருமாள் கோயில் திடலில் வைத்து துரையப்பா  சுட்டுக்கொல்லப்பட்டார்.

அல்பிரட் துரையப்பா அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூக சேவகனாகவும், கொடைவள்ளலாகவும் திகழ்ந்தவர். இவரே முன்னின்று சிங்கள அரசுடன் கைகோர்த்து யாழ் நூல் நிலையம், யாழ் பல்கலைக்கழகம், யாழ் நவீன சந்தை மாடிக்கட்டிடம் போன்றவற்றுடன் யாழ் நகருக்கு வீதியோர மின் விளக்குகளையும் பெற்றுக் கொடுத்தவர்.

மேலும் தன்னை அரசியல் கபட பேச்சுக்களால் ஏமாற்றி நல்ல மனிதர் ஒருவரை கொல்லவைத்த அப்போதைய கூட்டணி தலைவர்கள் சந்தர்ப்பவாதிகள் என்பதை பிரபாகரன் பின்நாட்களில் புரிந்து கொண்டார். மேலும் இவர்கள் அரசியலை தக்க வைக்க எதையும் செய்வார்கள் என்பது பிரபாகரனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதனாலேயே 1989 யூலை 13 அன்று அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் தனது ஆயுதக் குழுவை அனுப்பி பிரபாகரன் சுட்டுக்கொன்றார். அலோசியஸ், விசு, அறிவு என்றழைக்கப் படும் சிவகுமார் ஆகிய புலி உறுப்பினர்களால் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

எனவே தமிழீழ ஆயுதப் போராட்டத்துக்கும், அழிவுகளுக்கும் வழிவகுத்தது அரசியல் வாதிகளின் ஆட்சியைப் பிடிக்கும் அல்லது தக்கவைக்கும் நோக்கில் வெளியான கட்டுக் கதைகளும், ஊதிப் பெருப்பிக்கப்பட்ட சில விடயங்களும் தான் இதனால் தான் ஆரம்பத்தில் தமிழர் விடுதலை கூட்டணியுடன் சேர்ந்தியங்கிய முஸ்லிம்கள் 1981 களில் தனித்துச் சென்று பின்னர் 1986இல்  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கினார்கள்.

அல்பிரட் துரையப்பாவின் கொலையில் ஆரம்பித்த பிரபாகரன் ஆயுத ரீதியாக தமிழீழத்தை வென்றெடுக்க முடியுமென நம்பி 1976ல் புதிய தமிழ் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.  ஒரு புறம் இயக்கத்தை கட்டியெழுப்பிய பிரபாகரனால் மறுபுறம் அமையப் போகும் தமிழீழம் எவ்வாறு இருக்கவேண்டும் என்ற திட்டங்களும் தீட்டப்பட்டன.  சிறுவயது முதல் வரலாற்று நூல்களை அதிகமாக வாசித்து வந்த பிரபாகரன் இலங்கை வரலாற்றில் முஸ்லிம் படைகள் செய்த சாதனைகளும் தெரிந்திருந்தது.  யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கீசருக்கு எதிரான முஸ்லிம் படையெடுப்புகள், கொழும்பில் முஸ்லிம்களின் தாக்குதல் திட்டங்கள் என்பன முஸ்லிம்களின் வீரம், தமிழ் மன்னர்களுடன் சேர்ந்து முஸ்லிம்கள் மேற்கொண்ட படையெடுப்புகள், கண்டி மன்னன் ராஜசிங்கனுடன் சேர்ந்து முஸ்லிம்கள் வகுத்த படைவியூகங்கள்  பற்றிய அறிவுகளை பிரபாகரனுக்கு கொடுத்திருந்தது.

மேலும் பலஸ்தீன போராட்ட நூற்களை அதிகமாக வாங்கிப் படித்ததால்  முஸ்லிம்களின் சர்வதேச ரீதியான ஒற்றுமையையும் ஆப்கானில் பல்வேறு நாட்டு முஸ்லிம்கள் வந்திறங்கி சோவியத் படைகளுக்கு எதிராக ஜிஹாத் செய்து வந்து போர்க் குணங்களும் பிரபாகரனுக்கு தெரிந்திருந்தது.  இதனால் தனது ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம்களை பிரபாகரன் பகைக்க விரும்பவில்லை. பரம்பரை பரம்பரையாக சன்மார்க்க போர்களில் ஈடுபட்டு வந்த முஸ்லிம் சமுதாயம் தன்னியக்கத்தில் இருந்தால் தனது இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என பிரபாகரன் நினைத்திருக்கலாம்.  இதனால் முஸ்லிம்களை இஸ்லாமியத் தமிழர் என்றும் தமிழீழத்தின் ஓர் அங்கம் எனவும் கூறி முஸ்லிம் வாழிபர்களை தனது இயக்கத்தில் சேர வைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

இருந்த போதிலும் 1986ல் கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் உருவான போது முஸ்லிம்களின் உரிமை பிரச்சினையும் முன்வைக்கப்பட்டது பிரபாகரனுக்கு தலையிடியைக்; கொடுத்தது.  இதனால் முஸ்லிம்கள் மீது ஒரு சந்தேகக் கண்ணும் பிரபாகரனுக்கு இருந்தது.  1983 யூலைக் கலவரத்தின் பின்பு அதிகமான இளைஞர்கள் தமிழ் ஆயுதக் குழுக்களில் இணைந்தனர். முஸ்லிம் இளைஞர்களும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இருந்து பல்வேறு இயக்கங்களிலும் இணைந்தனர். 1984ன் ஆரம்ப பகுதியில் பல்வேறுபட்ட ஆயுதக் குழுக்களிடையே கோஷ்டி மோதலும், சகோதர படுகொலைகளும் இடம் பெறத் தொடங்கியதால், முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக் குழுக்களில் சேருவதை தவிர்த்தனர்.

சகோதர படுகொலைகளால் அஞ்சிய முஸ்லிம் சமூகம் கப்பம், வரி, ஆட்கடத்தல், வாகனக் கடத்தல் என ஆயுதக் குழுக்கள் செய்த அட்டகாசங்களால் தமிழீழ போராட்டத்திலிருந்து ஒதுங்கிச் சென்றனர். கிழக்கு மாகாணத்தில் வரி, கப்பம், ஆட்கடத்தல், வாகனக் கடத்தல் என்பன முஸ்லிம்களின் தமிழீழ போராட்டத்திற்கான ஆதரவை இல்லாமல் செய்ததுடன் அரசியல் ரீதியாக பலம் பெற வேண்டுமென்ற நிலைப்பாட்டை உருவாக்கியது. அதே வேளை சிலர் தமிழீழ போராட்டக் குழுக்களை வார்த்தைகளாலும் எழுத்துக்களாலும் எதிர்க்கத்தொடங்கினர்.


இக்காலப் பகுதியில் இந்தியாவில் தங்கியிருந்த பிரபாகரன் முஸ்லிம்களின் இந்த நிலைப்பாடு இறுதியில் ஜிஹாத்தில் போய் முடியும். அதனால் தமது இயக்கத்துக்கும் தமிழீழ போராட்டத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என நினைத்திருக்கலாம். இதனால் முஸ்லிம்களை என்ன செய்வதென்ற ஆலோசனையில் அன்டன் பாலசிங்கத்துடன் ஈடுபட்டதாக சில தகவல்கள் 2006ஆம் ஆண்டுக்குப் பின் செய்திகளில் வெளியாகியிருந்தன.

பல்வேறு ஆயுதக்குழுக்களிலும் சேர்ந்த பல தமிழ் இளைஞர்கள் கட்டுப்பாடின்றி தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டிருந்தனர். முஸ்லிம்களை மிரட்டுதல், பணம் பறித்தல், ஆட்களை கடத்துதல் என்று தொடர்ந்து முஸ்லிம்களை சீண்டியே வந்தனர். மேலும் சித்த சுவாதீனமற்ற பல முஸ்லிம்களை புலிகள் வடக்கு கிழக்கில் கொன்றிருந்தனர். மீரா மொஹிதீன் (1985), ஜமீன் (1988) இப்படி கொலை செய்யப்பட்ட சித்த சுவாதீனமற்றவர்கள் பலர்.

1986 ஏப்ரல் 29ம் திகதி ரெலோ இயக்கம் அழிக்கப்பட்டு அதன் தலைவர் சிறி சபாரத்தினம் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் மற்றும் ஏனைய இயக்கங்களையும் செயலிழக்கச் செய்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் பலரை கைது செய்தும் வைத்திருந்தனர். ஏனைய இயக்கங்கள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் செயலிழந்து விட்ட நிலையில் தான் பிரபாகரன் மீண்டும் யாழ்ப்பாணம் வந்ததாக கூறப்படுகிறது.  வரும் போது முஸ்லிம் இனக்கலவரத்தை எவ்வாறு ஏற்படுத்தலாம் என்ற புத்தகத்தை கொண்டுவந்து அதனை தமிழில் மொழி பெயர்த்து வடக்கு கிழக்கில் இருந்த எல்லா புலி இயக்கத் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்ததாக புலிகளிலிருந்த பிரிந்த சிலர் தெரிவித்ததாக செய்திகளில் வெளியாகியது.  எனவே பிரபாகரன் முஸ்லிம்களை நசுக்கியேனும் தனது போராட்டத்தை வெல்ல வேண்டும் என திட்டம் தீட்டியிருக்கிறான்.

1983ல் யூலையில் கந்தர்மடத்தில் 13 இராணுவத்தை கொன்று அதன் மூலம் பாரிய இனக்கலவரமொன்று உருவாக புலிகள் வழிவகுத்தனர். அக்கலவரத்தின் பின்பு ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஆயுதக் குழுக்களுடன் சேர்ந்தனர். இதனால் தமிழர் ஆயுதப் போராட்டம் ஒரு புதிய பரிணாமத்தைப் பெற்றிருந்தது. அதன் பிறகு நூற்றுக் கணக்கில் இராணுவத்தைக் கொன்றும் அதே பாணியிலான ஒரு கலவரத்தை பிரபாகரனால் உருவாக்க முடியவில்லை. எனவே அப்பாவியான நிராயுதபாணியான முஸ்லிம்களை கடத்தி, கப்பம் பெற்று, கொலை செய்வதன் ஊடாக தெற்கில் உள்ள முஸ்லிம்களை கொதிப்படைய வைத்து அதன் மூலம் இன்னொரு இனக்கலவரத்தை உருவாக்கவே பிரபாகரன் முனைந்ததாகத் தெரிகிறது.

கொழும்பில் முஸ்லிம்களால் தமிழர்கள் தாக்கப்பட்டால் அவர்களது சொத்துக்கள் அழியும், உயிர்கள் பறிக்கப்படும் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழீழம் தான் பாதுகாப்பு வழங்கக்கூடியது என்று சர்வதேச அளவில் பிரச்சாரம் செய்து தமிழீழத்தைப் பெற்றுக்கொள்ளவே விடுதலைப்புலிகள் முயற்சி செய்தனர். கொழும்பு தமிழர்களின் பிணங்களின் மேல் தமிழீழத்தை கட்டியெழுப்பலாம் என புலிகள் கனவு கணடனர். சில முஸ்லிம்களை கொன்று எதுவும் நடக்கவில்லையாததால் நூற்றுக்கணக்கில் முஸ்லிம்களை காத்தான்குடி பள்ளிவாசல்களில் படுகொலை செய்தனர். 1990 ஆகஸ்ட் 3ல் இரவு இஷா தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களின் இரண்டு பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் 103 பேர் கொல்லப்பட்டு 90 பேர் காயமடைந்திருந்தனர். அந்த தாக்குதலின் பின்பு கொழும்பில் முஸ்லிம்கள் கொந்தளிப்படைந்து தமிழர்களை தாக்க தயாரான வேளை முஸ்லிம் தலைவர்கள் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் அறிக்கைகளை விட்டு தடுத்துவிட்டனர்.

தமது திட்டம் நிறைவேறாததால் ஏமாற்றமடைந்த புலிகள் 1990 ஆகஸ்ட் 11ம் நாளன்று ஏராவூரில்  தாக்குதல் நடத்தி 122 முஸ்லிம் ஆண், பெண், வயோதிபர், சிறுவர்கள், கருவிலுள்ள சிசுக்களையும் கொன்றிருந்தனர். புலிகளின் திட்டமறிந்த முஸ்லிம்கள் இறைவனிடம் பாரத்தைப் போட்டுவிட்டு சும்மா இருந்துவிட்டார்கள். அதேவேளை கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஆயுதமேந்தி ஜிஹாத் பிரகடணப்படுத்தி பதில் தாக்குதல்களை நடத்தினார்கள். இத்தாக்குதலில் சில அப்பாவிகளும் தவறுதலாக கொல்லப்பட்டிருந்தார்கள். இதற்கு போட்டியாக ஆகஸ்ட் 13ல் மீண்டும் ஏறாவூரை புலிகள் தாக்கினார்கள். இதனால் கிழக்கு மாகாணம் எங்கும் முஸ்லிம்கள் புலிகளுக்கெதிராக கிளர்ந்தெழுந்து போராடினார்கள். ஊர்காவல் படைகள் உருவாக்கப்பட்டன. இதனால் கிழக்கு மாகாணத்தில் புலிகள் செயல்பட முடியாததொரு நிலை ஏற்பட்டது. இலங்கை இராணுவத்துக்கும் இந்திய இராணுவத்துக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய புலிகள் முஸ்லிம்களின் தாக்குதல்களை  எதிர்கொள்ள முடியாமல்  பின்வாங்குமளவுக்கு நிலமைகள் இருந்தன.  இத்தகைய ஒரு நிலமை ஏற்படக் கூடாது என்பது  தான் பிரபாகரனின் எண்ணம். பள்ளிவாசல்களிலும் ஆழ்நித்திரையிலிருந்த கிராமங்கள் மீதும் தாக்குதல் நடத்தி முஸ்லிம்களின்  தூங்கிக் கொண்டிருந்த சிங்கக் குணங்களை உசுப்பி விட்டிருந்தனர் புலிகள்.


இந்நிலையில் கிழக்கிலிருந்து பின்வாங்கிச் சென்ற புலிகள் வடமாகாண முஸ்லிம்களை சூறையாட நினைத்து தங்களது திட்டங்களை செயல்படுத்தினார்கள். ஏற்கனவே முஸ்லிம்கள் மீதான தாக்குதலால் புலிகளுக்கு சர்வதேச ரீதியில் நெருக்குதல்கள் உருவாகியிருந்தன. அதேவேளை யாழ்ப்பாணம் கோட்டை இராணுவ முகாம் மீதான தொடர் தாக்குதலில் புலிகளுக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டிருந்தது. எனவே கோட்டையை பிடிக்கும் வரை வேறு எதைப் பற்றியும் யோசிக்க முடியாது என யாழ் புலிகள் தெரிவித்துவிட்டனர். 1990 செப்டம்பரில் கோட்டையை விட்டு இராணுவம் வாபஸ் பெற்றது. இதனைத் தொடர்ந்து புலிகளின் கவனம் முஸ்லிம்கள் மீது திரும்பியது. புலிகளின் பாஸ் அனுமதிப்பத்திரம் சம்பந்தமாக    வாக்குவாதப்பட்ட ஜலீஸ் என்பவர் செப்டம்பர் 25, 1990ல் கடத்தப்பட்டார். அவரைத் தொடர்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட இளைஞர்களும் இருபத்தியிரண்டு வியாபாரிகளும் கடத்தப்பட்டனர். வியாபாரிகளிடம் பல கோடி ரூபாய்களை கப்பமாக பெற்ற பின்னர் ஒன்றரை வருடத்தின் பிறகு அவர்களை விடுவித்தனர். செல்வந்தர்களில் அப்துல் காதர் (கெளிரு) என்பவரை சித்திரவதை செய்து புலிகள் கொன்றுவிட்டனர். கடத்தப்பட்ட இளைஞர்கள் அனைவரும் 1995ம் ஆண்டு இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்ற முனைந்த வேளையில் வன்னிக்கு தப்பியோடிய புலிகளால் கொல்லப்பட்டு யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் புதைக்கப்பட்டதாக சிலர் தெரிவித்துள்ளனர். வேறு சிலர் இவர்கள் 1991ல் கொல்லப்பட்டனர் என்பதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் கடத்தப்பட்ட முஸ்லிம்கள் 32பேர் ஏதோவொரு காலப்பகுதியில் தனித்தனியாகவோ கூட்டாகவோ கொல்லப் பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் இளைஞர்களும் செல்வந்தர்களும் கடத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாண மன்னார் பகுதி முஸ்லிம்கள் மீது புலிகளுக்கு ஒரு பயமிருந்தது. இதனால் வெளியேற்றத்தை கட்டம் கட்டமாக நிறைவேற்ற திட்டமிட்டனர். இதனடிப்படையில் சாவகச்சேரி வர்த்தக நிறுவனத்தின் முஸ்லிம் உரிமையாளர் ஒருவரை கடத்தி கப்பம் பெற்றதுடன் அவருடைய கடையில் வாள்களும்,  வயர்லஸ் கருவியும் இருந்ததாகக்கூறி சாவகச்சேரி முஸ்லிம்களை 1990 ஒக்டோபர் 18ம் திகதி வவுனியாவுக்கு அப்பால் செல்லுமாறு ஆயதமுனையில் அச்சுறுத்தல் விடுத்து வெளியேற்றிவிட்டனர்.  இதைத் தொடர்ந்து முல்லைத்தீவில் ஒருவரைக் கடத்தி அவர் இராணுவத்துக்கு தகவல் கொடுப்பவர் எனக்கூறி முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேறுமாறு 1990 ஒக்டோபர் 22ம் திகதி கட்டளையிட்டனர். புலிகளின் ஏ.கே 47க்கு முன்பு இந்த வாள்களால் முஸ்லிம்கள் என்ன செய்துவிட முடியும் என டி.பி.எஸ். ஜெயராஜ் ஒரு கட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆதன் அடுத்த கட்டமாக மன்னாரில் சிலரைக் கடத்தி இராணுவ உளவாளிகள் முத்திரை குத்தினர். பிறகு 1990 ஒக்டோபர் 23ம் திகதி மறிச்சுக்கட்டி முஸ்லிம்களை வெளியேற்றி ஒக்டோபர் 28ம் திகதி மன்னாரில் எரிக்கலம் பிட்டி போன்ற இடங்களில் வாழ்ந்த  முஸ்லிம்களை முழுமையாக இனச் சுத்திகரிப்பு செய்தனர். 1990 ஒக்டோபர் 23ம் திகதி கிளிநொச்சி பகுதியிலும் நாச்சிக்குடாவிலும் வாழ்ந்து வந்த முஸ்லிம்களையும் ஆயுத முனையில் வெளியேற்றினர்.

1990 ஒக்டோபர் 30ம் நாள் யாழ்ப்பாண முஸ்லிம்களை ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் ஆயுதங்களுடன் சுற்றி வளைத்தனர். விபரீதத்தை அறியாத முஸ்லிம்கள் தமது வழமையான கடமைகளில் ஈடுபட்டனர். திடீரென எல்லோரையும் ஜின்னா மைதானத்துக்கு வருமாறு அழைத்து இரண்டு மணி நேரத்துக்குள் அனைவரும் வெளியேற வேண்டுமென கட்டளையிடப்பட்டது.

இந்தக் கட்டளையை புலிகளின் அப்போதைய யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் ஆஞ்சநேயர் என்ற இளம்பருதி ஒலிபெருக்கி மூலம் சொல்லிக் கொண்டிருக்க சரிகாலன் தலைமையிலான குழுவினர் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கத் தொடங்கினர். மேலும் வீதிகள் தோறும் சோதனைச் சாவடிகளை நிறுவி அனைவரையும் உடல் பரிசோதனையிட்டு பணம், நகை, உடுப்பு, உடமைகள் என்பவற்றை அபகரித்து தமிழ் இனத்துக்கே வெட்கம் தேடித்தந்த ஒரு செயலைச் செய்தனர். புலிகளின் இந்த கொடுஞ்செயலைக் கண்டு வானம் கூட ஒக்ரோபர் முப்பதாம் திகதி இடைவிடாது அழுது கொண்டிருந்தது. முஸ்லிம்களில் குரோதம் கொண்டிருந்த சில தமிழர்களைத் தவிர ஏனையவர்கள் எல்லோரும் புலிகளை கண்டிக்க முடியாத தமது இயலாமையை எண்ணி மனதுக்குள் அழுது கொண்டனர்.

இந்த முஸ்லிம் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் 15000 குடும்பங்களைச் சேர்ந்த 75 ஆயிரம் முஸ்லிம்கள் பணம், நகைகள், உடைகள் உட்பட அசையும் அசையாச் சொத்துகள் அனைத்தையும் இழந்மு அகதிகளானார்கள். மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் இக்கிரிகொல்லாவ, அனுராதபுரம், மதவாச்சி, நொச்சியாகம, குருநாகல், புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு, பாணந்துறை, திகாரி, கல்முனை போன்ற இடங்களுக்கு அகதிகளாக சென்றார்கள். மாடி வீடுகளிலும், அழகான வீடுகளிலும் தோட்டம் துறவுகளுடன் வாழ்ந்த முஸ்லிம்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் வீதியோரங்களிலும் பாடசாலைகளிலும் தூங்குவதற்கோ அல்லது மலசலம் கழிப்பதற்கோ இடமின்றி அல்லல் பட்டு தமது முதல் இரவைக்கழித்தனர்.


இதில் புத்தளத்தில் மன்னார் முஸ்லிம்களும் முல்லைத்தீவு முஸ்லிம்களும் நிரம்பி விட்டதால் மேலதிகமாக வந்த அகதிகளைத்  தங்க வைக்க இடமில்லாமல் கொழும்புக்கும் குருநாகலுக்கும் அவர்கள் அனுப்பப்பட்டார்கள். புத்தளம் நீர்கொழும்பு உட்பட அகதிகள் வந்திறங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் உள்ளங்கள் உருகின. வீட்டுக்கு ஒரு சாப்பாட்டு பார்சல்களை தயாரித்து அகதிகளுக்காக மூன்று வேளையும் வழங்கினார்கள். இஸ்லாமிய இயக்கங்கள் எல்லாம் இலங்கையில் கைகோர்த்து நின்ற நாட்கள் அவை. இஸ்லாமிய இயக்கங்களும் பள்ளிவாசல்களும் அகதிகளுக்காக உணவுகளையும் உடைகளையும் சேர்த்து வழங்கினர். மேலும் பலர் தம்மாலான பங்களிப்புகளை வழங்கி அகதிகள் தங்குவதற்கான தற்காலிக குடிசைகளை அமைத்துக் கொடுத்தனர். வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம்களில் ஏறக்குறைய 60000 பேர் புத்தளம் முதல் கற்பிட்டி வரை வந்து இறங்கியிருந்தனர். ஏற்கனவே பின்தங்கிய மாவட்டமாக இருந்த புத்தளம் புதிதாக வந்த மக்களை இன்முகத்துடன் வரவேற்ற போதும் அங்கு போதிய இடவசதிகளும் அடிப்படை வசதிகளும் பற்றாக்குறையாக காணப்பட்டது. இதனால் அகதி முஸ்லிம்களை தங்க வைக்க அகதி முகாம்கள் தயாராகின. இவ்வாறு 200 அகதி முகாம்கள் புத்தளம் மாவட்டத்தில் மட்டும் அமைக்கப்பட்டது. இதைவிட இன்னும் ஐம்பது முகாம்கள் ஆனுராதபுரம் குருநாகல் போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்டன. கொழும்பில் கூட நான்கு அகதி முகாம்களில் 1500 பேர் வசித்தனர்.

அகதி வாழ்க்கையின் முதல் ஐந்து வருடங்கள் ஏறக்குறைய எல்லாக் குடும்பங்களுக்கும் கஷ்டமான ஆண்டுகள். புதிய இடத்தில் தமக்கென ஒரு தொழிலை தேடிக் கொள்ள முடியாமல் மக்கள் கஷ்டப்பட்டனர். இருந்த பணமும் நகைகளும் புலிகளால் பகல்கொள்ளையிடப்பட்டதால் தொழில் ஒன்றை சுயமாகத் தொடங்குவதற்கும் மூலதனமின்றி அகதிகள் காணப்பட்டனர். வன்னி இறுதியுத்தத்தில் வெளியேறிய மக்களுக்கு உதவிகளை வழங்க பல்வேறு தொண்டு நிறுவனங்களும் போட்டி போட்டு செயற்பட்டன.   ஆனால் வடக்கு முஸ்லிம்களுக்கு சேவை செய்ய எந்த உதவி வழங்கும் நிறுவனங்களும் முன்வரவில்லை. அதற்கான காரணங்களில் ஒன்று பெரும்பாலான அந்த நிறுவனங்கள் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்மையாகும். அகதிகளின் துன்பங்களை கண்டு புத்தளத்தில் வாழ்ந்த பிச்சைக்காரனும் தனது பிச்சையில் ஒரு பங்கை தானமாக வழங்கிய போதிலும் தமிழர்களின் உள்ளத்தில் இந்த முஸ்லிம்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒர் எண்ணம் சரி ஏற்படவில்லை. கல்லுகள் கூட அகதிகளின் துயரத்தை கண்டு கண்ணீர் விட்ட காலமது. ஆனால் இனவாதிகளின் இதயங்கள் கல்லை விட கேவலமாக  இருந்தன. இதனாலோ என்னவோ  வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட அதே ஒக்ரோபர் மாதம் அதே முப்பதாம் திகதி ஆனால் 1995ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தின் ஒட்டு மொத்த தமிழர்களும் அரை மணித்தியாளம் அவகாசம் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அந்த தமிழர்களின் கண்களின் முன்னேயே அவர்களின் சொத்துக்களும் கொள்ளையிடப்பட்டன.

1995ஆம் ஆண்டு கொழும்பு கேட்போர் கூடத்தில் வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கவிபாடிய வ.செ.ஐ. ஜெயபாலன் அவர்கள் 'இனியொரு வருடம் முஸ்லிம்கள் அகதிகளாக வாழ்வாரானால் அழியட்டும் தமிழ்;;; . அழியட்டும் தமிழினம்' என்று பாடியிருந்தார். 

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் மிகவும் மந்தமாகவே இடம்பெறுகிறது. 1990ஆம் ஆண்டு 81000 முஸ்லிம்கள்  வாழ்ந்த  வடமாகாணத்தில் இன்று வெறும் 34000 முஸ்லிம்களே வாழ்கின்றனர். இதுகூட புலிகள் முற்றாக அழிந்த பின்னரே சாத்தியமாகியது. முஸ்லிம்கள் மீளக்குடியேற தம்மாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தமிழர் தரப்பைச் சேர்ந்த சில அதிகாரமுள்ள தரப்பினர் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை திட்டமிட்டு தடுக்கின்றனர். முஸ்லிம்களை விரோதிகளாக சித்தரித்து புலிகள் ஏற்றிய விச ஊசிகள் தமிழ் அதிகாரிகளில் பலரை முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுகின்றது. இந்திய உயரதிகாரிகளைச் சந்தித்த வடக்கு தமிழர்கள் சிலர் இந்திய வீடமைப்புத் திட்டத்தில் முஸ்லிம்களுக்கு எந்த பங்கும் வழங்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டதாக அறியப்படுகிறது. அதேவேளை முஸ்லிம்களுக்கு இந்திய உதவிகள் கிடைக்கக் கூடாது என்பதற்காக சில நிபந்தனைகளையும் அவர்களே தயாரித்து கொடுத்ததாகவும் அறியப்பட்டுள்ளது. இது மிக மோசமான சிந்தனை.


மன்னாரில் 16553 முஸ்லிம்களும் (1990-45000 பேர்) , யாழ்ப்பாணத்தில் 2455 முஸ்லிம்களும் (1990-20000 பேர்), முல்லைத் தீவில் 2013 முஸ்லிம்களும் (1990- 7000 பேர்), வவுனியாவில் 12341 முஸ்லிம்களும் (1990: 8000 பேர்), கிளிநொச்சி 678 முஸ்லிம்களும் (1990: 1000 பேர்) மீளக்குடியேறியுள்ளனர். மீள்குடியேறாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 90000 பேர்களாகும். இவர்களில் மீளக்குடியேற விருப்பமிருந்தும் மீளக்குடியேற காணிகளோ வீடுகளை மீளக்கட்டிக் கொள்ள பணவசதியோ இன்றி மொத்தமாக ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இவர்களுக்கு குறிப்பாக யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு உதவி வழங்க முஸ்லிம் நிறுவனங்களோ அல்லது முஸ்லிம் அரசியல்வாதிகளோ தயாரில்லை. இந்நிலையில் தமிழ் அரசியல்வாதிகளை குற்றம் சொல்வதில் பயனேதுமில்லை. அதிலும் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எந்த உதவிகளும் கிடைப்பதில்லை. மீளக்குடியேறியவர்களில் 20 முஸ்லிம் குடும்பங்கள் மலசலகூட வசதியின்றி யாழ்ப்பாணத்தில் வாழ்கின்றனர். யாழ்ப்பாணத்தில் தனவந்தர்கள் ஒன்று சேர்ந்து இருபது வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளார்கள். தொடர்ந்து செய்ய அவர்களிடமும் நிதி வேண்டுமே. எனவே இணிவரும் 23வது வருடத்திலாவது இந்த முஸ்லிம்களுக்கு உதவி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முஸ்லிம் தொன்டு நிறுவனங்கள் முஸ்லிம் எய்ட், ரஹ்மத் பண்ட் போன்றன யாழ்ப்;பாண முஸ்லிம்களுக்கு வீடுகளையும் மலசலகூடங்களையும் அமைத்துக் கொடுக்க வேண்டும். அதேபோன்று தனிப்பட்டவர்கள் இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் அவர்கள் நேரடியாக யாழ்ப்பாணத்திலுள்ள பள்ளவாசல்களினூடாக நபர்களை தெரிவு செய்து வீடுகளை கட்டிக் கொடுக்கலாம். அல்லது யாழ் முஸ்லிம் இணையத்தளத்தை தொடர்பு கொண்டு அதன்மூலமாக இதனைச் செய்து கொடுக்கலாம். 


1 comment:

  1. தமிழர்கள் எல்லோரும் முஸ்லிம்களுக்கு எதிராக என்றும் இருந்ததில்லை ,அவர்களில் சிலரின் தவறான நடத்தைகளினால் நாம் எல்லோரையும் குறை கூறுவது காலத்திற்கு பொருத்தமற்றது என்பது எனது கருத்து ,பல்லின மக்கள் வாழும் இலங்கை நாட்டில் நாங்களும் சில விட்டுக்கொடுப்புகளுடன் ஏனைய மக்களுடன் சமாதானமாக வாழ பழகிக்கொள்ளவேண்டும் ,இந்நாட்டில் நாம் சிறுபான்மையர் என்பதை என்றும்மறக்கக்கூடது

    ReplyDelete

Powered by Blogger.