தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக உயிரை கொடுக்கவும் தயார் - ஹெல உறுமய
அரசியலமைப்பின் விதிகளைப் பயன்படுத்தி நாட்டைப் பிரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தமது கட்சி தயாராக இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
போரினால் அடைய முடியாது போன இலக்கை அரசியலமைப்பின் மூலம், நாட்டைப் பிரித்து அடைய முடியும் என்று இரா.சம்பந்தனும், அவரது ஆதரவாளர்களும் நினைப்பார்களேயானால், அது மிகப்பெரிய தவறாக அமையும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உயிரையும் கொடுக்க நாம் தயாராக உள்ளோம்.
13வது திருத்தத்தை ஒழிப்பதை வலியுறுத்தி, ஜாதிக ஹெல உறுமயவினால் கொழும்பு பொது நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“2009 மே 19ம் நாள் பிரபாகரன் கொல்லப்பட்டபோது, விடுதலைப் புலிகளின் தீவிரவாதம் முற்றாக அழிந்து விட்டது, இனிமேல் சுதந்திரமான நாடாக அபிவிருத்தி செய்யலாம் என்றும் மகிழ்ச்சியடைந்தோம். நாம் பழையதை மறந்து தமிழர்களுக்கு உதவி செய்து நாட்டை அபிவிருத்தி செய்யத் தொடங்கினோம். சுமார் 11 ஆயிரம் விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். அவர்களை நாம் கொலை செய்யவில்லை.
சரணடைந்தவர்களில் கண்டி தலாதா மாளிகை மீது தாக்குதல் நடத்தியவர்களும், அனுராதபுர மகாபோதி மீது தாக்குதல் நடத்தியவர்களும் இருந்தனர். அரந்தலாவவிலும், திம்புலாகலவிலும் அவர்கள் பௌத்த பிக்குகள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். ஆனாலும் அவர்களை நாம் பழிவாங்கவில்லை. அவர்களை மன்னித்து விடும் படி நாம் அரசிடம் கேட்டோம். அவர்களை அரசாங்கம் சட்டத்தின் முன் நிறுத்தவுள்ளது.
இடம்பெயர்ந்த 299,000 பேரை நாம் முகாம்களில் இருந்து மீளக்குடியமர்த்தினோம். நாட்டின் நலன் கருதி எதிர்காலம் கருதி இவற்றை நாம் செய்தபோது, எமது நல்லெண்ணத்துக்கு என்ன கிடைத்துள்ளது? எமது போர் வீர்ர்களை சில சக்திகள் அனைத்துலக நீதிமன்றங்களில் நிறுத்த முனைகின்றன.
ஆகையால் நாம், தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளோம். முன்னைய காலங்களில் நாட்டைப் பிரிக்கும் சதிகளில் இருந்து பௌத்த பிக்குகளே பாதுகாத்தனர். 1956இல் பண்டா - செல்வா உடன்படிக்கைக்கு எதிராக பெளத்த பிக்குகளே குரல் கொடுத்தனர். 1968இல் டட்லி- செல்வா உடன்படிக்கை மூலம் மாவட்ட சபைகளை உருவாக்கும் முற்சிகளையும் அவர்களே தடுத்து நிறுத்தினர்.
ஜே.ஆரும், சந்திரிகாவும் நாட்டைக் காட்டிக் கொடுக்க முயன்றபோதும், பௌத்த சங்கங்களே அதைத் தடுத்து நிறுத்தின. எப்போதேல்லாம் நாட்டைப் பிரிக்கும் சதிகள் அரங்கேறினவோ அப்போதெல்லாம் இந்த எழுச்சி உருவானது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
Post a Comment