Header Ads



வாசகர்களிடமிருந்து வந்து குவிந்த வாழ்த்துகள்..!



எம். ஆர். பகஸ்ருல் அலி
(BA (Hons), MA (Geography)
பிரதி அதிபர் - அல்ஹிக்மா மகா வித்தியாலயம்

2 வருட நிறைவையொட்டி எனது நல்வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் வழங்குவதில் (ஜப்னா) யாழ் முஸ்லிம் இணையத்தளத்தின் அபிமான வாசகன் என்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த இணையத்தளம் எனது கணினியில் முக தளமாக  ஆக வைத்துள்ளதுடன் தொடர்ச்சியாக இந்த தளத்தை முதலில் பார்த்து விட்டு தான் வேறு இணைய தளங்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த தளமானது யாழ்ப்பாணத்தை மாத்திரம் கருத்தில் கொள்ளாது இலங்கையின் ஏனைய பாகங்களின் முஸ்லிம்களையும், இஸ்லாம் சம்பந்தமான தகவல்கள், உலக நடப்புக்களையும் பக்க சார்பில்லாமல் உடனுக்குடன் எடுத்து கூறுவதிலும், பல கோணங்களிலும் தமது பார்வையை செலுத்துகின்றமையும் இதன் வளர்ச்சிக்கு முதல் படி. மேலும், எமது முஸ்லிம் சமூகத்தின் ஊடாக தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும் ஓர்  ஊடகமாக இது திகழ்வதை யாரும் மறுக்க முடியாது. இதன் வளர்ச்சி மேலும் விரிவாகவும் சமூக தேவைகளை இலக்காகவும் கொண்டு திகழ வேண்டும் என்று பிரார்திக்கின்றேன். 
..........................................................................................................................................

மப்றூக்                                      
ஊடகவியலாளர்                                                         


'யாழ் முஸ்லிம்' இணையத்தளத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவு இன்றைய தினம்.  'யாழ் முஸ்லிம்' இணையத்தளம் மீதான எனது மனப் பதிவுகளை ஒரு 'சொட்டாவது' பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற விருப்பத்தினால் இதை எழுதுகிறேன்.

ஒரு செய்தி இணையத்தை நடத்துவதிலுள்ள பாரங்களையும், சிக்கல்களையும் ஓரளவேனும் நான் அறிவேன். அது சிலவேளை, மலையைக் கட்டி இழுப்பதை விடவும் கஷ்டமானதொரு காரியமாகும். அவ்வாறானதொரு விடயத்தை, தனியாளாகச் செய்து வருகிறீர்கள் என்பதை நினைக்கையில்,   மலையை விடவும் பெரிய மலைப்பு ஏற்படுகிறது. அதுவும் இரண்டு வருடங்கள் இதைக் கட்டியிழுத்து வருகிறீர்கள் என்பது உண்மையில் சந்தோசம் தரும் செய்திதான். ஊடகத்துறை மீதான காதலும், அர்ப்பணிப்பும், சமூகத்தை நேசிக்கும் குணமும் இல்லாத ஒருவரால் - 'யாழ் முஸ்லிம்' போன்றதொரு இணையத்தை இத்துணை வெற்றிகரமாக நடத்தி வர முடியாது. இந்த இணையத்தின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பு மகத்தானது. வாழ்த்துக்கள்!

யாழ் முஸ்லிம்களின் பிரச்சினைகளை மையப்படுத்திய ஓர் ஊடகமாக இந்த இணையத்தை நீங்கள் ஆரம்பித்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். ஆனாலும், தவிர்க்க முடியாமல் இன்று உலக முஸ்லிம்களைப் பிரதானப்படுத்திப் பேசும் ஒரு தளமாக 'யாழ் முஸ்லிம்' மாறியிருக்கிறது. இது உங்கள் இணையத் தளம் அடைந்திருக்கும் இரட்டிப்பு வெற்றியாகும்.  இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகத்துக்கென ஓர் ஊடகம் இல்லையே என்கிற உங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே 'யாழ் முஸ்லிம்' இணையத் தளத்தினை நான் பார்க்கிறேன். நாடு கடந்து சென்றும் அந்த ஆதங்கம் உங்களுக்குள் அணையாமல் இருப்பதை எண்ணி மனசு சந்தோசிக்கிறது.   உங்கள் விரல்கள் எப்போதும் இதே வீரியத்துடன் இயங்க வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்!
........................................................................


அப்துல் சத்தார்
குருணாகல் மாநகர சபை உறுப்பினரும்,
 ஸ்ரீ. ல.சு.கட்சி குருணாகல் மாவட்ட அமைப்பாளரும்


அன்புடையீர். . அஸ்ஸலாமு அலைக்கும். “ஜப்னா முஸ்லிம்”  எனும் உங்கள் வலையமைப்பு மிகவும் அன்மையிலேயே எனக்கு காணக்கிடைத்தாலும் தினசரி பத்திரிகைகள் ஏனைய ஊடகங்களை மிஞ்சுமளவுக்கு நிமிடத்திற்கொருமுறை செய்திகனை தேடுவதற்குறிய ஒரு செயதிச் சேவையாக எங்கள் உள்ளங்களில் இடம் பிடித்திருப்பதை தெரிவிப்பதில் அளப்பரிய மகிழ்ச்சி. யாழ் முஸ்லிம் இணையத்திற்கு எனது மணமார்ந்த வாழ்த்துக்கள்.
.......................................................



ஆண்டவர் இயேசுக்கிறீஸ்த்துவின் நாமத்தில்
அன்புடன் வாழ்த்தும்
உங்கள் சகோதரன் 
குருசு சின்னப்பு கசியானுஸ்
(இலண்டன்)



அன்புடன் யவ்னா முஸ்லீம் இணையத்தள நடத்தினரிற்கும், அதன் செற்பாட்டாளர்களிற்கும், செய்தி கொடுப்பனர்களிற்கும்..கர்த்தரும் ஆண்டவருமாகிய இயேசுக் கிறீஸ்த்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். அண்மையிலதான் உங்கள் பக்கத்தைக் காண கர்த்தர் கிருபை செய்தார்.

அநேக விபரங்களை அறிந்தேன். இன்னும் அறிய வாஞ்சிக்கின்றேன். யாழில் நின்று ஒரு பத்திரிகையைப் பார்ப்பதைப் போன்ற உணர்வு எனக்கு உண்டாகிறது.  விரட்டப்பட்ட முஸ்லீம்களின் நிலையை அறிய ஆவலாயிருந்தும் அதை அறியததர எனக்கு யாருமில்லை. ஒரு நண்பன் மூலம் அறிவதைப் போலல்லாவிடினும் ஏராளமான விடயங்களை அறிந்துகொள்ளுகிறேன். உங்கள் வெளிப்படையான செய்திகளிற்காக நன்றிகள் பல. ஏனைய மீள் குடியமர்த்தப்பட்ட நெருக்கடியைப்போல் மீள் குடியமர சென்ற வடபகுதி முஸ்லீம்களிற்கும் உண்டு. இழப்புக்களோடு, விரட்டப்பட்ட நோவின் சுவடுகள் மீண்டும் மீண்டும் செய்திகளில் வெளிப்படுவது அன்றைய நோவுகளை மட்டுமல்ல இன்றைய விடிவின்மையையும் காட்டுகிறது. ஆயினும் உரியவர்கள் உதவிகளைச் செவ்வனே செய்யாதிடினும், சிதறுண்டிருக்கும் முஸ்லீம்களையும் விழிக்கப்பண்ணி, உதவும் வல்லமைகொண்ட கரங்களைக் கூட்டிச்சேர்த்து ஒன்றாக எழுந்து கட்ட ஊக்குவிக்கும் உங்கள் செயலும் பெரு வல்லமைபெற்று மீண்டும் உங்களை உயர்ந்திருக்கச் செய்யும். கல்வியிலும், விளையாட்டிலும், நல்லாக்கங்களிலும், அன்பிலும், சந்தோசத்திலும், சமாதானத்திலும் ஓங்கி மேம்பட்டு வாழ்வீர்கள். ஆண்டவர் உங்களிற்குத் துணை செய்வார். 

பல வகையான செய்திகளுடன் மரண அறிவித்தல்களையும் அந்த தின செய்தியுடன் தருவதும் நன்று.  உங்கள் முயற்சி மேலும் சிறந்து மேலோங்கி வளர்வதாக! தன்னை மறைத்து பெரு விருட்சத்தைத் தாங்கும் ஆணிவேர்போல் செயல்படும் உங்கள் சேவை நீடூழி வாழ்வதாக!
......................................................................................................................................


தேசமாண்ய : எஸ்.எல். மன்சூர்(கல்விமாணி)
ஆசிரிய ஆலோசகரும், எழுத்தாளரும்.
அட்டாளைச்சேனை.

கடந்த இரண்டாண்டுகளில் இவ்வளவு எதிர்பார்ப்பினை நிறைவு செய்வதில் பாரிய பங்களிப்பினை தினந்தோறும் தமிழ்பேசும் மக்களுக்கு, குறிப்பாக முஸ்லீம் மக்களின் தனித்துவமிக்கதும், காத்திரமான படைப்புக்களையும் வெளியிட்டு வரும் யாழ் முஸ்லீம் வெப்தளத்தினை வாழ்த்துவதில் மிக மிக மகிழ்ச்சியடைகின்றேன். உண்மையில் இலங்கை வாழ் முஸ்லீம்;களின் அடையாளங்களையும், சீர்படுத்துதல்களையும், அரசியல் மற்றும் அனைத்துவகை விடயங்களையும் தினந்தோறும் நடுநிலைமையில்  இருந்து ஒரு ஆய்வுகூடம் போன்று நிதானித்து மக்களின் கருத்தறியும் சுதந்திரத்திற்கு பாதகமில்லாத ஒரு நற்காரியத்தை நண்பர் அன்சிர், இந்த யாழ்முஸ்லீம் வெப்தளத்தின் ஊடாக மக்களை ஒன்றுசேர்த்தமைக்கு அவருக்கும், யாழ்முஸ்லீம் தளத்திற்கும் அதன் அபிமான வாசகர் என்கிற அடிப்படையிலும், பல்வேறு கல்வி மற்றும் சமூக கட்டுரைகளையும், செய்திகளையும் எழுதுபவன் என்ற  அடிப்படையிலும் உள்ளார்ந்தமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்றைய கல்விப் புலத்தில் ஒவ்வொரு ஆசிரியனும் கட்டாயம் தேடல் உள்ளவர்களாக காணப்படுதல் அவசியமாகும். அந்த தேடல்களுக்கு கட்டியம் கூறுகின்ற பலதரப்பட்ட செய்திகளையும், ஆக்கங்களையும் வெளியிடுகின்ற யாழ்முஸ்லீம் வெப்தளத்தை கையிலுள்ள செல்போன்கள் மூலமாக உடனுக்குடன் பார்த்தறிகின்ற பல ஆசிரியர்களையும், கல்வியியலாளர்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்ற ஒரு தளமாக இந்த யாழ்முஸ்லீம் காணப்படுவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக இலங்கையின் வடக்கு கிழக்கு மக்களின் அபிமானத்திற்குரிய தளமாக காட்சிதரும் இத்தளத்தின் வளர்ச்சிக்கு வாசகர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.

இலங்கைவாழ் முஸ்லீம்களுக்கு தனியானதொரு இலத்திரணியல் ஊடகம் ஒன்றின் அவசியம் பேசப்பட்டுவருகின்ற இக்கால கட்டங்களில் தனித்துவமிழக்காது இஸ்லாமிய உம்மாவின் ஒற்றுமைக்காகவும், போரினாலும், அரசியல் மற்றும் மேலாதிக்க வெறியர்களினாலும் இன்னும் பலதரப்பட்ட அடிவருடிகளினாலும் அல்லலுற்று அலைந்தாடும் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் நாலாபுறமும் வாழ்ந்துவரும் முஸ்லீம்களுக்காகவும், ஓங்கி கூவிக்கொண்டிருக்கும் யாழ்முஸ்லீம் வெப்தளத்தின் ஓயாத எழுச்சிக்கும், அதன் காத்திரமான பங்களிப்புக்கும் இன்றைய இரண்டாண்டு பூர்த்திக்கு மணி மகுடம் சூட்டும் இந்நாளில் வாழ்துக்களைச் சொறிகின்றேன். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருள் என்றென்றும் உரித்தாகட்டும்.
...............................................................................................................................................


பங்களாதேஷ் சர்வதேச  பல்கலைகழகத்திலிருந்து  MOHAMED SAFRAN
(AKURANA)

மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள JAFFNA MUSLIM இணையத்தளத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வெளிநாடுகளில் வாழும் என் போன்றோருக்கு JAFFNA MUSLIM இனது சேவை இன்றியமையாததாகும். கடந்த காலங்களில் இலங்கை மற்றும் சர்வதேச  செய்திகளை உடனுக்குடன் வழங்கியிருந்தீர்கள். உங்கள் சேவை என்றும் தொடர வல்ல நாயன் அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றேன்.
.........................................................................................................................................................


துருக்கியிலிருந்து செய்யத் N. தீன்

வேறு பல தமிழ் இணையங்களைப் பார்த்து பல சமயங்களில் மிகமிக  கவலையடைந்த வேளை ஒரு நண்பர் மூலம் யாழ் முஸ்லிம் இணையம் கிடைக்கப்பெற்று மற்றற்ற மகிழ்சியடைந்தேன். பின்பு சில சமயங்களில் மகிழ்ச்சியடைந்ததும் உண்டு சில சமயமங்களில் கோபம் கொண்டதும் உண்டு. மகிழ்தது சிறந்த ஆக்கங்கள் வரும் போது கோபம் கொண்டது மட்டமான சில விடயங்களுக்காக, அந்த கோபத்துடன் சமாதானமும் அடைந்திடுவேன்   பிள்ளையுடன் தகப்பனுக்கு வரும் கோபம் போன்று.இதற்குப் பிறகும் இது போன்றே இருப்பேன்., பிள்ளை கெட்டுச்சுவராகிடக்கூடாது அல்லவா!? சிறந்தவைகளை கொண்டு அலங்கரிக்க அணைத்து வாசகர்களையும் கேட்டுக்கொள்வதோடு ஆசிரயர்,இணையத்துக்கு உதவி செய்யும் அன்பர்கள்,காலத்தை கொடுத்துதவும் நிர்வாகிகள் அணைவருக்கும் அல்லாஹ் உதவுவானாக என்று கேட்டவனாக மேலும் சிறப்புற வாழ்த்தி விடைபெறுகிறேன்.
............................................................................................................................

ஆலம் M நளர்.டோஹா, கட்டார்

வடக்கு முஸ்லிம்களின் செய்திகளை வெளிநாடுகளில் உள்ள எம்மை போன்றவர்கள் அறிந்து கொள்வதற்கு JAFFNA MUSLIM  இணையதளம் பேருதவியாக உள்ளது. அதுமட்டுமல்லாது மன்னார் உப்புக்குளம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட செய்திகளை  முழு விபரத்துடன் அறிய தந்ததும் இந்த JAFFNA MUSLIM தான். மேலும் மேலும் உங்கள் சேவை தொடர்ந்து வெற்றி கரமாக திகழ, உப்புக்குளம் மக்கள் சார்பாக வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
.......................................


சுலைமான் றாபி - நிந்தவூர்



1990.10.30  ம் திகதி இலங்கையில் முஸ்லீம்களும் உள்ளார்கள் என சர்வதேச அளவுகளில் பாசிச சக்திகளினால் புடம் போட்டுக்காட்டப்பட்ட வரலாற்று நிகழ்வாக அமையப்பெருகிறது. அது 2 தசாப்த நிகழ்வு... இது ஒரு புறமிருக்க இரண்டு  வருடங்களில் இரண்டு தசாப்த செய்திசேகரிப்பு உணர்வோடு ஒரு இணையம் உலக ரீதியில் அதிலும் குறிப்பாக ஆசிய மற்றும் ஐரோப்பாக் கண்டங்களில் வியந்து பார்கின்ற அதனோடு அலசி ஆராய்கின்ற செய்தித்திறமைகளை வெளிக்கொணர்கிறது..

ஆம் அதை ஆங்கிலத்தில் www.jafnamuslim.com  என்று அழைக்கலாம். உண்மைதான் ஒவ்வொரு சமூகங்களுக்கும் ஒவ்வொரு ஊடக அமைப்புக்கள் தோற்றம் பெற்று அந்தந்த சமூகங்களின் உரிமைகளையும், அவர்களின் அரசியல் மற்றும் சமூக கலாச்சார உணர்வுகளையும் சர்வதேசங்களுக்கு கொண்டு செல்கின்றது. இது ஒரு புறமிருக்க எமது இலங்கை தாய் திருநாட்டில் நமது முஸ்லிம் சமூகதிற்கு ஒரு பலமிக்க ஊடகதந்தையாக சுமார் இரண்டு வருடங்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அன்றாட உலக முஸ்லிம்களின் நிலைமைகள் என்ன? அவர்களின் அரசியல்  மற்றும் சமூகப் போராட்டம் என்ன? என்பது பற்றி ஆவலாக அறிவதற்கு தினம் தினம் மணிதியாலதிற்கு மணித்தியாலம் என்றெல்லாம்  இந்த இணையத்தளத்தினை  பார்வை இடுகின்றனர். இதிலும் இந்த இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட திகதியும் கூட ஒற்றுமை எனும்  கையிற்றை பலமமாக பற்றிபிடித்து கொள்ளுங்கள் என்கின்ற அல்- குர்ஆன் கட்டளைக்கு ஏற்றதைபோன்று தொண்ணூறாம் ஆண்டு எந்த மாதத்தில் எந்த திகதியில் முஸ்லீம்கள் உடுத்த உடையுடன், நம் தாய்மார்கள் தங்கள் செல்லக்குழந்தைகளுக்கு  பாலூட்டிய குறையுடன் அவர்கள் ஹலாலாக தேடிய சொத்துக்களை விட்டு விட்டு திட்டமிட்டு விரட்டியடிக்கப்பட்ட சம்பவத்தினை நினைவு கூருவதைபோன்று  இனி வரும் எந்த சமுதாயமும் அந்த சம்பவத்தினை மறக்கக்கூடாது  என்பதற்காக அதே மாதம் அதே திகதியில் அதே இடத்தில் "ஜப்னா முஸ்லிம்" உருவாக்கப்பட்டிருப்பது தான் இதற்கு கிடைத்த அதிஷ்ட இணையத்தள வருகையாளர்களாகும்.

இதில் முக்கியமாக நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விடயமாக தமிழ் இணையதள வரிசையில் சகோதர இனத்திற்காக உலகில் பல்வேறு தமிழ் இணையங்கள் வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த இணையங்களை பார்வை இடுகின்றவர்கள் கூட ஜப்னா  முஸ்லிமில் என்ன செய்தி வந்திருக்கிறது என்பதை பார்க்க முனைகின்றனர். இவ்விடத்தில்தான்  "ஜப்னா முஸ்லிம்"  தனது சமூகத்தை பற்றி பேசுகிறது. இதனால் ஏனைய ஊடகங்களை பார்த்த நமது சகோதர உள்ளங்கள் முஸ்லிம் சமூகத்தையும் பற்றி சிந்திக்க துவங்குகிறது. இதுவும் சமூக அமானிதமாக இங்கு உருவெடுக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

உலகில் பல ஊடகங்கள் தங்கள் தங்கள் இனத்திற்கும் ,தங்களுக்கு வாசியானவர்களுக்கும் வக்காலத்து வாங்கி அவர்களுக்கு மடிப்பிச்சை போட்டுகொண்டிருகிறது. இதனால் அவர்கள் ஒரு படி மேல் உயர்ந்தவர்களாக தங்களை இந்த அவ் ஊடகத்தின்  மூலமாக போடம் போட்டுகொண்டிருகிறார்கள். ஆனால்  இந்நிலை மாறி எந்த வித பக்கச்சார்பில்லாமல் எந்த அரசியல் கட்சிகளுக்கும் சோரம் போகாமல் தனது தனித்துவ   செய்தி பண்பின்  அடிப்படையில் தனது செய்திகளை இணையத்தில் பிரசுரிப்பதனால் நமது இலங்கையில் பல்வேறு செய்தி ஆர்வலர்கள் மத்தியில் பரிந்து பேசப்படுகின்ற சமூக வலைதளமாக காணப்படுகின்றது. முஸ்லிம் செய்திகளுக்கு  கூடுதல் கவனம் செலுத்தினாலும் சகோதர இன செய்திகளுக்கும் இங்கு முக்கியத்துவம் கொடுப்பது உயர்ந்த பண்பாகவும், ஒரு அமானிதப் பொருளினை பேணிக்காப்பதாகவும்  அமைகிறது. இதனால்தான் இலங்கையில் அன்றாடம் பிரசுரிக்கப்படும்  தமிழ் பத்திரிகைகளான தினகரன், வீரகேசரி, தினக்குரல், நவமணி, சுடரொளி இன்னும் பல பத்திரிகைகளின் செய்திகளை மேற்கோள் காட்டி ஒரு இணையத்தில் வெளியிடுவது இதுவே முதற்தடவையாகும். போட்டி நிறைந்த இந்த ஊடக கால கட்டத்தில் ஏனைய ஊடகங்களின் செய்திகளையும் தங்கள் வலைத்தளத்தில் பிரசுரிப்பெதேன்றால் மிகவும் சிரமமான காரியமாகும். இங்கு "ஜப்னா முஸ்லிம்" அவற்றை எல்லாம்  புறந்தள்ளி விட்டு  சமூகத்திற்காக மட்டும் குரல் கொடுப்பது இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் மிகப்பெரும் முஸ்லிம் உரிமைக் கோஷமாக வலம் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இது ஒரு புறமிருக்க இலங்கையிலும் அதிகமான பிரதேச செய்தியாளர்கள் இதற்கு  பங்களிப்புக்களை வழங்கினாலும் இலங்கைக்கு வெளியே அதிக செய்தியாளர்கள் இந்த ஊடகத்திற்கு தங்கள் பங்களிப்புக்களை வழங்கிக்கொண்டு வருவது "ஜப்னா முஸ்லிம்" சர்வதேச அளவில் பிரபல்யம் அடைந்திருப்பதற்கு சான்று பகர்கின்றது.

அல்ஹம்துலில்லாஹ் நமது முஸ்லிம் உம்மாவின் உன்னத பணி உயர்ந்த உள்ளத்துடன் வீறு நடை போட்டு வெற்றி அடைய அனைவரும் பிரார்த்திப்போம்.
...................................




No comments

Powered by Blogger.