Header Ads



இன்னும் தொடருமா இந்த பரிதாப வாழ்வு..?


(சுஐப் எம். காசிம்)

வடபுல முஸ்லிம்கள் சொந்த மண்ணிலிருந்து புலிகளால் விரட்டப்பட்டு 22 ஆண்டுகளாகின்றன. இடப்பெயர்வுக்கு முற்பட்ட காலத்திலே இந்த முஸ்லிம்கள் தமிழ் மக்களோடு மிக அந்நியோன்யமாகவும் ஒற்றுமை, சகோதர உணர்வுடனும் வாழ்ந்த வரலாறு மீட்டுப்பார்க்க வேண்டியதாகும். 

மன்னார் மாவட்டத்தைப் பொறுத்த மட்டிலே கல்விப் பணிபுரிந்த எருக்கலம்பிட்டி மத்திய கல்லூரி, மன்னார் அல்-அஸ்ஹர், விடத்தல்தீவு அலிஹார், தாராபுரம் அல்மினா, பெரியமடு ம. வி , முசலி ம. வி ஆகிய முஸ்லிம் கலாசாலைகளில் முஸ்லிம் மாணவர்களோடு இந்து, கிறிஸ்தவ மாணவர்களும் ஒற்றுமையுடன் கற்றுத் தேர்ந்தனர். அதுபோலவே மன்னார் சென்சேவியர், கொன்வன்ற், சித்தி விநாயகர், அடம்பன் ம. வி போன்ற பெரும் தமிழ் பாடசாலைகளில் முஸ்லிம் மாணவர்கள் கணிசமானளவு கற்றுப் பயனடைந்தனர். 

இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் என்ற பேதமின்றி எல்லாப் பாடசாலைகளிலும் எல்லா இன ஆசிரியர்களும் தியாக சிந்தையுடன் கல்வி கற்றனர். இது கடந்த கால பசுமையான வரலாறு. இதேபோன்று யாழ். நகர்க் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்று சமூகத்தில் அந்தஸ்து பெற்று வாழுகின்றனர். முஸ்லிம் பாடசாலைகளில் கற்பிக்க முஸ்லிம் ஆசிரியர்கள் உருவாகுவதற்கு முன்னர், தமிழாசிரியர்கள் மட்டுமே தன்னலம் கருதாது கல்விப் பணி புரிந்து முஸ்லிம் சமூகத்தின் கல்விக்கு ஆக்கமளித்தனர். வடபுல இன நல்லுறவுக்கு இவ்வாறே கல்விக் கூடங்கள் வித்திட்டன. இவை தவிர விளையாட்டு, கலை, கலாசார நிகழ்ச்சிகள், போட்டிகள் அனைத்தும் இன பேதமின்றி மாணவர்கள் பங்குபற்றும் களங்களாக அமைந்தன. 

முஸ்லிம்கள் மற்றைய சகோதரர்களின் விழாக்கள், திருமணங்களில் பங்குபற்றியது போலவே மற்றவர்களும் முஸ்லிம்களின் வைபவங்களில் பங்கேற்றனர். கல்வித் தெய்வமாக இந்துக்களால் போற்றப்படும் சரஸ்வதிக்கு விழா கூட தமிழ் மாணவர்களால் முஸ்லிம் பாடசாலைகளில் எடுக்கப்பட்டதே வரலாறு. 

இவை தவிர விவசாயம், மீன்பிடி, வர்த்தகம், அரச ஊழியம் போன்ற தொழில் மையங்களும் இன உறவை வளர்த்தன. குடிநீர் பெறும் இடங்கள், குளிக்கும் இடங்கள், போக்குவரத்து வாகனங்கள் கூட இன நல்லுறவுக்கு பாலமாக அமைந்தன. மன்னார் மாவட்டம் மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டாலும் வடபுலத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும் இது போன்றே இன நல்லுறவு இரு சமூகங்களாலும் பேணப்பட்டு வந்ததே வரலாறு. வடபுலத்திலே தமிழ் - முஸ்லிம் இன உறவு மகிழ்ச்சியோடு குறிப்பிடும் அளவு சிறப்புற்றிருந்தது. மேலோங்கியிருந்தது.

முஸ்லிம்களின் வெளியேற்றம்:-

இவ்வாறு சுமுகமாக வாழ்ந்த காலத்திலே தான் இனப்பிரச்சினை தோற்றம் பெற்றது. அரசுக்கும் இயக்கங்களுக்குமிடையே ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்றன. அதுபோல சகோதர இயக்கங்களுக்கிடையேயும் மோதல்களும் களையெடுப்புக்களும் நிகழ்ந்தன. இத்தகைய பயங்கரமான சூழ்நிலைகளிலும் கூட முஸ்லிம்கள் வெளியேற நினைக்கவில்லை. அனைத்துக்கும் தாக்குப்பிடித்து சொந்த மண்ணிலே தான் வாழ்ந்து வந்தனர். முஸ்லிம் வீடுகளில் தஞ்சமடைந்த இயக்க உறுப்பினர்களை முஸ்லிம்கள் காட்டிக்கொடுக்கவில்லை. இயன்றவரை காப்பற்றி பாதுகாப்பாக வெளியேற்ற முஸ்லிம் சமூகம் அஞ்சவில்லை, தயங்கவுமில்லை. 

மற்றைய இயக்கங்களை செயலிழக்கச் செய்த புலிகள் தமது தேவைகளுக்கு முஸ்லிம்களைப் பயன்படுத்தினர். சாப்பாட்டுப் பார்சல்கள், பணம், விளைவுப் பொருட்களை, புலிகளுக்கு வழங்கி உதவினர். புலிகளின் தேவைகளுக்கு வாகனங்களையும் கொடுத்துதவினர், இருந்தபோதும் தமக்கு சந்தேகமாகவுள்ள முஸ்லிம்களை புலிகள் கொன்றொழிக்க தவறவில்லை. முஸ்லிம் அதிகாரிகளைக் கூட புலிகள் விட்டுவைக்கவில்லை. பொறுமை காத்து வாழ்ந்த நிலையிலேதான் இற்றைக்கு 22 ஆண்டுகளுக்கு முன்னர் 90 ஒக்டோபர் கடைசிப் பகுதியில் உடனடியாக முஸ்லிம்கள் வெளியேறவேண்டுமெனப் பணிக்கப்பட்டனர். 

இத்தகைய தர்மசங்கடமான நிலையை முஸ்லிம் சமூகம் கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. ஏகப் பெருவெளியிலே, இருட்கடலிலே, குந்துவதற்கு கம்போ மரமோ அற்ற பறவைகள் போல முஸ்லிம்கள் தத்தளித்தனர். ஒரு வாரமோ ஒரு மாதமோ வெளியேற அவகாசம் கிடைத்திருப்பின் வேண்டிய பொருட்களோடு வெளிச்செல்ல வாய்ப்புக் கிடைத்திருக்கும். அவ்வாறு நடைபெற வில்லை. வெளியேறும் போது மக்களை கர்ண கடூரமாக சோதனையிட்டே விரட்டினர். நகைகள், பணம் கொண்டு சென்றவர்களிடம் இவை தமிழ் மண்ணில் உழைத்தவை, உங்களுக்கு அவை சொந்தமில்லை என அவைகரள அபகரித்தனர். முஸ்லிம்களை விரட்டியபோது இவ்வாறான காட்டு தர்பார் நடவடிக்கைகளையே புலிகள் கையாண்டனர்.

வடபுல முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள்

இந்த இழப்புகள் பலகோடி ரூபா பெறுமதியானவை. வடபுல முஸ்லிம்கள் தம் வாழ்வில் உழைத்த, அனுபவித்த அனைத்து உடமைகளையும் புலிகளுக்கு தாரைவார்த்தனர். மோட்டார் வாகனங்கள், உழவு இயந்திரங்கள், மோட்டார் சைக்கிள், பைசிக்கள், தொலைக்காட்சி, வானொலி, தோணிகள், வலைகள், விவசாய, உபகரணங்கள் அனைத்தையும் ஒப்படைத்தனர். தாம் வளர்த்த கால்நடைகளும் அனைத்து இழப்புக்குள்ளும் அடங்கும். பல இலட்சம் பெறுமதி வாய்ந்த கடைகளில் சாமான்களை உள்ளே வைத்து பூட்டிய பின்னர் திறப் புகள் பறித்தெடுக்கப்பட்டன. மேலதிக நகை, பணம் அபகரிக்கப்பட்டன. சிலர் நகைகளையும் பணத்தையும் மண்ணில் புதைத்து வெளியேறினர். 

அவை மண்ணோடு மண்ணாவிவிட்டதேயொழிய மீளப் பெற முடியவில்லை. முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல்லாயிரம் கால்நடைகளும் வீட்டி லுள்ள தளபாடங்களும் விற்பனைக்குள்ளாகியதாக பின்னர் அறிய முடிந்தது. ஐப்பசியில் வெளியேறியதால் வயல்கள் அனைத்திலும் பயிர்கள் செழித்துக் காணப்பட்டன. அவையும் கைவிடப்பட்டன. முஸ்லிம் கல்விமான்கள், ஆசிரியர்களின் வீடுகளில் இருந்த அறிவுக்களஞ்சியமான நூல்களும் இழக்கப்பட்டன. 

பாடசாலைகள், பள்ளிவாசல்கள் அனைத்தும் நாசம் செய்யப்பட்டு பெறுமதிமிக்க பொருட்கள் சூறையாடப்பட்டன. இடப்பெயர்வால் கட்டுக்கோப்பான கல்விப் போதனை இல்லாதொழிந்து மாணவ சமூகம் சிதறடிக்கப்பட்டது. இப்பாடசாலைகளில் கற்பித்த நல்லாசிரியர்கள் வெவ்வேறிடங்களில் முகாமில் வாழ நேர்ந்ததால் ஆசிரிய மாணவ தொடர்பு அற்றுப்போனது. 

பாரம்பரியமாக செய்து வந்த காணிகளும் தொழில் மையங்களும் கைவிடப்பட்டதால் இந்த மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டனர். இடம்பெயரும் போது சுமார் ஒரு இலட்சமாகவிருந்த அகதிகளின் தொகை 22 ஆண்டுகளிலும் பல்கிப் பெருகியது. இதனால் வீட்டு வசதிக்குறைபாடு, தொழில் இன்மை, செய்யும் கூலித் தொழிலினால் பெறப்படும் ஊதியம் போதாமை, பிள்ளைகளின் கல்விச் செலவு, வளர்ந்த பிள்ளைகளின் வாழ்க்கை அமைப்புக்கான பணத்தேவை எனப்பல்வேறு நெருக்கடிகள் அகதி மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்தின. வாழ்க்கையில் சபலத்தையும் சலனத்தையும் ஏற்படுத்தின. அதனால் இந்த மக்கள் பணத்தேவைக்கு தாம் முன்னர் வாழ்ந்த பாரம்பரிய பிரதேசத்திலுள்ள வீடுகள், காணிகள், வயல் நிலங்கள் ஆகிய அசையாத சொத்துக்களை மிகக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவங்களும் நிறைய உண்டு. துரதிஷ்ட வசமாக வடபுல முஸ்லிம்களின் பொன்கொழிக்கும் வயல்கள் விற்பனைக்குள்ளாகின. 

வடபுல முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இந்நாசகார நடவடிக்கையை சர்வதேச சமூகம் கூடக் கண்டிக்கவில்லை. மனிதநேய ஆர்வலர்கள் என்று கூறப்படும் அனைவருமே மெளனம் காத்தனர். 

இந்நிலை மிகவும் துரதிஷ்டவசமான துரோகத்தனமாகவே அமைந்தது. புண்பட்ட உள்ளத்தோடு புத்தளம் மற்றும் தென்னிலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் வந்த முஸ்லிம்கள் முகாம்களில் குடியமர்த்தப்பட்டனர். தென்னிலங்கை முஸ்லிம்களும் குறிப்பாக புத்தளம் முஸ்லிம்களும் அகதிகளை அன்புடன் ஆதரித்தனர். வரவேற்றனர். பசிக்குணவளித்து, வளங்களில் பங்களித்து பராமரித்தனர். முகாம் வாழ்க்கையில் பல்வேறு இன்னல்களை அகதிகள் அனுபவித்தனர். எனினும் அன்று மீள்குடியேற்ற அமைச்சராகவிருந்த மர்ஹும் அஷ்ரப் அடிப்படை வசதிகள் கிடைக்க வழிவகுத்தார். மக்கள் பிரதிநிதிகளாகவிருந்த மர்ஹும் மசூர் அரச நன்கொடையோடு தன் சொந்த நிதியையும் வழங்கி தேவைகள் நிறைவேற உதவினார். 

புத்தளம் நகரசபைத் தலைவராகவிருந்த பாயிஸ் அவர்களும் குடிநீர்வசதி மின்சாரமும் வழங்க உதவினார். இவை தவிர அமைச்சர் ரிசாட் பதியுதீன் மீள்குடியேறிய அமைச்சராகிய பின்னர்தான் அகதிகளின் வாழ்வில் விடிவு ஏற்பட்டது. ரிசாட் தாமும் அகதி வாழ்வை அனுபவித்ததால் அகதி மக்களின் பிரச்சினைகளை சரிவர இனங்கண்டார். அவர்களின் அடிநாதப் பிரச்சினைகளை அனுபவரீதியாக உணர்ந்ததால் தக்க நிவாரணமளித்தார். அகதிகளின் கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, தெரு அமைப்பு முன்பள்ளிப் பாடசாலைகள் அமைப்பு, பள்ளிவாசல் நிர்மாணம், குர்ஆன் மதரசாக்கள் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்தி நிவர்த்தி செய்தார். இவை தவிர ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தார். கல்வி பெற்றுத் தொழிலின்றி இருந்த இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பளித்தார். இளம் அரசியல்வாதியான ரிசாட் அகதி மக்களின் வாழ்விலே ஏற்படுத்திய மாற்றங்கள் காலத்தால் அழியாதவை. என்றும் நினைவு கூரப்பட வேண்டியவை. 

யுத்த முடிவும் மீள்குடியேற்றமும் 

போர் முடிவுற்றது. இடம்பெயர்ந்து அகதி நிலையடைந்த மக்கள் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள். அகதி மக்கள் இரு வகையினர். 1990 இல் புலிகளால் விரட்டப்பட்ட வடபுல முஸ்லிம்கள் முதல்வகை. போரில் அகப்பட்டு மடிந்து விடாமல், பாதுகாப்புத்தேடி வெளியேறி யோர் இரண்டாம் வகையினர். முதல்வகையினர் 22 ஆண்டுகளாக மீள்குடியேற்றம் செய்யப்படாமல் பல்வேறு மாவட்டங்களில் வாழ்கின்றனர். இரண்டாம் வகையினர் போர் உக்கிரமடைந்த வெவ்வேறு காலப்பகுதியில் வெளியேறியோர். 

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணியை அரசு யுத்தம் முடிந்த உடனே ஆரம்பித்தது. கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பிரதேசங்களில் படிப்படியாக மீள்குடியேற்றம் இடம்பெற்றன. மீள்குடியேற்றச் செயற்பாடுகளில் திருப்தி இல்லையென்ற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க புலம்பெயர் தமிழர்களும் தமிழ்க்கட்சிகள் சிலவும் இதனை அரசியல் ஆயுதமாகப் பாவித்தும் வருகின்றன. எனினும் அரசு தமது பணியை தொடர்ந்தும் மேற்கொள்கின்றது. மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த அமைச்சர் றிசாட் பதியுதீன் சுறுசுறுப்பாகவும் திறமையாகவும் மீள்குடியேற்றப் பணிகளில் ஈடுபட்டார். பலரது பாராட்டையும் பெற்றார். 

முந்திய வகையினரான வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் அவர் கவனஞ்செலுத்தினார். 22 ஆண்டுகளுக்குப் பின் சொந்த மண்ணை மிதித்த முஸ்லிம்கள் தம் இடங்களைப் பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர். வீடுகள் தரைமட்டம், பள்ளிகள், பாடசாலைகள், பொதுக்கட்டடங்கள் அனைத்துமே அழிந்து கிடந்தன. உயர்ந்த மரங்கள் வளர்ந்த காடாகக் கிராமங்கள் காட்சி தந்தன. கண்கள் குளமாகிப் பிரமித்துப் போன மக்கள் காடுகளை அழிக்க முயன்றனர். அமைச்சர் ரிசாத்தின் உதவியினால் கிராமங்கள், வயல்களில் உள்ள காடுகள் வெளியாக்கப்பட்டன. 

அதன் பின்னர் சில கிராமங்களில் மக்கள் ஆங்காங்கே குடியேறி வாழ்கின்றபோதும் அது இன்னும் பூரண வெற்றியளிக்கவில்லை. காரணம் அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை. மீள்குடியேற்றத்துக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு நல்க மறுக்கின்றனர். அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியில்லை. சர்வதேசம் இந்த மக்கள் பற்றி பாராமுகமாக இருக்கின்றது. வன்னியின் மக்கள் பிரதிநிதியென்ற வகையிலும் அரசின் அமைச்சர் என்ற ரீதியிலும் அமைச்சர் ரிசாட் தனி மரமாக நின்று இந்த மக்களின் மீள்குடியேற்றத்துக்காக போராடுகின்றார். மீள்குடியேற்றத்தை விரும்பாத சக்திகள் அவர் மீது அவச்சொல்லை வீசுகின்றன. மீள்குடியேற்றம் திட்டமிட்டு தடுக்கப்படுகின்றது. குடியேறியுள்ள ஒரு சில குடும்பங்கள் பெரும் அவதிப்படுகின்றன. 

மாந்தையிலுள்ள விடத்தல் தீவுக்கான குடிநீர் ஏற்கனவே மணல் பிட்டிக்கிணறுகளில் இருந்து பெறப்பட்டது. 22 ஆண்டுகளில் அந்த கட்டமைப்பு முற்றாகச் சீர்கெட்டு அழிந்ததனால் அங்கு குடிநீர்க் கஷ்டம் உள்ளது. குடியேறியுள்ளவர்கள் ஒரு சிலருக்கு பவுசர் மூலம் குடிநீர் வழங்கப் படுகின்றது. 

இக்கிராமத்தின் கிழக்கில் உள்ள வெளிமருதமடுக் குளத்தை அண்டிய சன்னார்ப்பிரதேசத்தில் விடத்தல்தீவு மக்கள் முன்னர் மேட்டுநிலச் செய்கையில் ஈடுபட்டனர். அரச அனுமதிப்பத்திரம் வழங்கிய அப்போதைய மன்னார் அரச அதிபர் ஜெகநாதனின் பெயர் சூட்டப்பட்ட இப்பிரதேசம் ஜெகநாதன் பண்ணையென அழைக்கப்பட்டது. 

இப்பகுதி வளமான மண்ணிலே முஸ்லிம் மக்கள் மேட்டு நிலச் செய்கையில் பல ஆண்டுகள் ஈடுபட்டனர். ஆனால் இப்பிரதேசம் தற்போது வேறு மக்களின் குடியேற்றக் கிராமங்களாகக் காட்சியளிக்கின்றன. 

இப்பிரதேசத்தை இழந்த மக்கள் குடியேற்றப்படாத பகுதிகளைப் பண்படுத்த முயன்றனர். வன்னி எம்.பி என்ற வகையில் அமைச்சர் ரிசாட் இப்பிரதேசக்காடுகளை அகற்ற உதவினார். ஆனால் இந்தச் செயலைச் சில சுயநலமிகள் விரும்பாது அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினர். 

முஸ்லிம்களுடன் ஏற்கனவே இருந்த அந்நியோன்ய நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, முஸ்லிம்களை வடபுலத்தில் அந்நிய இனமாக நோக்கும் அல்லது பார்க்கும் மனநிலையைச் சிலரிடம் காணமுடிவதாக மீள்குடியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர். தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்று மையுடன் உடனிருந்து வாழவேண்டியவர்கள், முஸ்லிம் இனம் எதிர்கொண்ட கஷ்டங்களை மீளப்பார்த்து அவர்கள் மீது அனுதாபம் கொண்டு உதவ வேண்டியது தமிழ்ச்சகோதரர்களின் கடமையாகும். 

No comments

Powered by Blogger.