ஹக்கீமாரும், பம்மாத்து அரசியலும்
(அபூ ஸைய்யாப்)
சிறுவர்களின் கவனக் குவிப்பு ஆற்றலைப் பரீட்சிப்பதற்காக கிராமப் புறங்களில் ஒரு விளையாட்டு இருக்கிறது.
கோழி பற பற... என்றால், பறப்பது போல் கைகைளை உயர்த்த வேண்டும். கொக்கு பற பற... காகம் பற பற... மைனா பற பற... என்ற போதெல்லாம் கைகளை உயர்த்துவர். மரம் பற பற... என்றபோது கைகளை உயர்த்தினால் கைகளை உயர்த்தியவர்கள் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள்.
அமைச்சர் ரஊப் ஹக்கீம் கோழி பற பற, கொக்கு பற பற என்ற போதெல்லாம் கைகளை உயர்த்திய கிழக்கு மாகாண சபையின் மு.கா. உறுப்பினர்கள் இப்போது மரம் பற பற என்றபோதும் கைகளை உயர்த்தி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்கள்.
திவி நெகும சட்டமூலத்துக்கு ஆதரவாகக் கிழக்கு மாகாண சபையில் கைகளை உயர்த்தியதன் மூலம் மு.கா. மற்றுமொரு சாணக்கியமற்ற அரசியல் நகர்வை மேற்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே கிழக்கு மாகாண சபையில் தனித்துப் போட்டியிட்டு முஸ்லிம்களின் வாக்குகளைச் சுருட்டிக் கொண்டு இறுதியில் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டமை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சன மழையின் தூவானம் ஓயும் முன்னமே இடியுடன் கூடிய மழையொன்று பெய்திருக்கிறது கிழக்கு மாகாண சபையில்!
இந்தியஇலங்கை ஒப்பந்தத்தின் மூலம் சிறுபான்மையினருக்கான அரசியல் ஏற்பாடாக முன்வைக்கப்பட்ட மாகாண சபை, யானை உண்ட விளாம்பழமாய் இருக்கும் இத்தருணத்தில் அதில் எஞ்சியிருந்தவற்றையும் தாரைவார்க்க கைகளை உயர்த்தியிருக்கிறார்கள் மு.கா. காரர்கள்.
மாகாண சபை அதிகாரத்திலுள்ள பொலிஸ், காணி அதிகாரங்களைத் தன்னகப்படுத்தியுள்ள மத்திய அரசாங்கம், மாகாண சபையில் உருப்படியாக விட்டு வைத்திருந்த ஓரே ஒரு நல்ல விடயம்தான் சமூகத்தின் அடிமட்டம் வரை சேவை செய்ய முடியுமான சமுர்த்தி அதிகார சபை.
இன்று அதனையும் தங்கத் தட்டில் வைத்து தூக்கிக் கொடுத்திருக்கிறது மு.கா.
இச்சட்டத்திலுள்ள 70 வீதத்திற்கு மேற்பட்ட விடயங்கள் 13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீண்டும் மத்திய அரசாங்கத்திலுள்ள ஓர் அமைச்சின் கீழ் செயற்படுவதற்கான ஒரு திட்டம் என்பதே பயங்கரமான விடயம்.
திவிநெகும சட்டத்தினூடாக, அடிமட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய வீதிப் புனரமைப்பு, உதவித் தொகை வழங்குதல் போன்றவற்றை உள்ராட்சி, மாகாண சபைகளையும் தாண்டி ஓர் அமைச்சர் செய்யும் நிலை ஏற்படப் போகிறது. எனவே, 13ஆம் திருத்தச் சட்டத்தில் வலது கையால் கொடுத்த அதிகாரங்களை இடது கையால் மீளெடுக்கும் செயல்தான் இச்சட்டமூலம். காணி, பொலிஸ் அதிகாரங்கள் கூட வெறும் எழுத்தில்தான் இருந்தன. அவை போக எஞ்சிய அதிகாரங்களையும் பறித்தெடுக்கும் வேலையே இச்சட்டமூலம்.
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நியமனம் மற்றும் ஆட்சியமைக்கும் விடயத்தில் இழுத்தடித்து பூச்சாண்டி காட்டிய ரஊப் ஹக்கீமார் தான் ஏற்கனவே எழுதிப் பொக்கட்டுக்குள் வைத்திருந்த முடிவை வாசிக்கப் பத்து நாட்களை எடுத்துக் கொண்டார்.
பின்னர், ஆட்சியமைக்க அரசாங்கத்துக்குக் கை கொடுத்த அவர், முதலமைச்சர் நியமன விவகாரத்தில் பாம்புக்கும் நோகாமல் பாம்படித்த கம்புக்கும் நோகாமல் மெல்ல நழுவிக் கொண்டார்.
தனது எதிரியான அமீரலி முதலமைச்சராக வராமல் வேறு யார் வந்தாலும் பரவாயில்லை என்பதில் அவர் விடாப்பிடியாக இருந்தார். பின்னர் நஜீப் ஏ. மஜீத் முதலமைச்சராக அமர்த்தப்படவே அதனை வாய் நிறையப் பற்களோடு வரவேற்று, பக்கத்தில் இருந்து போட்டோவும் எடுத்துக் கொண்டார்.
நஜீப் ஏ. மஜீதும் ஏற்கனவே மு.கா.வில் இருந்து தனக்குக் காலைவாரி விட்டு சென்றவர்தான் என்பதைத் தெரிந்திருக்கும் ரஊப் ஹக்கீமுக்கு, அமீரலி எனும் புலி வாய்க்குள் தனது விரல்களை விட்டுக் கொள்வதை விட, இது புத்திசாலித்தனமாகத் தெரிந்தது.
நஜீப் ஏ. மஜீத் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டதெல்லாம் மு.கா. சார்பாகக் களமிறங்கியபோதுதான். பின்னர் மு.கா.விலிருந்து வெளியேறி, ஐ.ம.சு. கூட்டமைப்பு சார்பில் களமிறங்கிய சந்தர்ப்பங்களிலெல்லாம் வெறுங் கையோடு வீட்டுக்குப் போன சரித்திரமே பதிவாகி இருக்கிறது.
எனவே, எதிர்காலத்தில் மு.கா. வின் மூக்கணாங் கயிற்றில் தொங்கிக் கொள்வது குறித்து அவர் சிந்திக்க நிறையவே சந்தர்ப்பம் இருக்கிறது. எனவே, ஹக்கீமார் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி எதிர்காலத்தில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களைப் பறித்துக் கொள்ள நினைத்திருக்கலாம்.
மற்றப்படி அமீரலிக்கோ அதாஉல்லா சார்பான ஒருவருக்கோ, முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பது மு.கா.வின் அரசில் தற்கொலைக்கு சமனாக அவர் கருதி இருக்கலாம். அதேவேளை, அதற்குப் பிறகு அஷரஃப் அவர்களின் புகைப்படத்தைத் தூக்கிக் கொண்டு கிழக்குப் பக்கம் தலை வைத்தும் தூங்க முடியாத நிலை உருவாகியிருக்கும். பின்னர் தனது சொந்த மாவட்டமான கண்டியில் வீடெடுத்து குடி புக வேண்டிய நிலை உருவாகலாம் எனவும் ஹக்கீமார் சிந்தித்திருக்கலாம்.
எனவே, இந்த காய்நகர்த்தல்களின் பின்னணியில் சமூக அக்கறை சுத்தமாய் இல்லை. எப்படியோ முதலமைச்சர் நியமன விவகாரத்தில் ஹக்கீமாருக்கு பெருமூச்சுதான்!
மு.கா. ஏன் தனது கட்சி சார்பான ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை பெறாமல் விட்டுக் கொடுத்தது என்ற கேள்விக்கு ரஊப் ஹக்கீம் இதுவரை ஒழுங்கான பதில் ஏதும் சொல்லவில்லை. சுழற்சி முறையில் இரண்டாம் கட்டத்துக்கான பதவிக்காலம் தமக்கு வழங்கப்படவுள்ளதாகக் கூறி வாயடைப்பு செய்யப்படுகிறதே ஒழிய, இது குறித்து அரசாங்கத்துடனான ஒப்பந்தம் எதுவும் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை.
அரசாங்கத்தைப் பகைத்துக் கொண்டு முஸ்லிம் சமூகத்தைப் பேரின மக்களுக்கு எதிரானவர்களாகவும் அபிவிருத்திக்குத் தடையானவர்களாகவும் காட்டிக் கொள்ளாமல், அரசாங்கத்துக்குள் உள்ளிருந்தபடியே உரிமைக் குரல் கொடுக்கப் போவதாக ஹக்கீமார் பி.பி.சி. வரை அறிக்கை விட்டார். ஆனால், திவி நெகும சட்ட மூலத்துக்கு ஆதரவளித்ததன் மூலம் இந்த அறிக்கைகளையெல்லாம் குப்பையில் தூக்கிப் போட்டிருக்கிறார் ரஊப் ஹக்கீம்.
கிழக்கு மகாகாண சபையில் அரசுக்கு ஆதரவளித்த சலசலப்பு சூடு பிடித்திருந்த சந்தர்ப்பத்தில், திவிநெகும சலசலப்புக்கு முகம் கொடுக்க ஹக்கீமாருக்குக் கிடைத்த நல்ல வாய்ப்புத்தான் அமெரிக்க சுற்றுப் பயணம்.
வெள்ளை மாளிகைக்குப் பக்கத்தில் இருந்து கொண்டே கோழி பற பற, கொக்கு பற பற சொல்லிக் கொண்டிருந்தார் ஹக்கீமார். திவி நெகும சட்டமூலமும் மாகாண சபைக்கு வந்தது ஹக்கீமார் பறக்க சொன்னார் கைககள் உயர்ந்தன.
பாவம் கிழக்கு மாகாண சபை மு.கா. உறுப்பினர்கள்!
அவர்கள் பச்சை மண்கள். இந்த சட்டமூலத்தின் தாக்கம் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. தலைவர் கட்டளை என்பதற்காகக் கைகளை உயர்த்தினார்களே தவிர, அவர்களுக்கு அந்தக் கையுயர்த்தலின் பாரதூரம் தெரியவில்லை. இது எனது கருத்தல்ல, மு.கா.வின் பிரதிப் பொதுச் செயலாளரும் கல்முனை மாநகர சபை பிரதி மேயருமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பரின் விமர்சனம்.
இந்தச் சட்டமூலம் குறித்து பழமும் உண்டு கொட்டையும் போட்டு வைத்துள்ள சட்டத்தரணி ரஊப் ஹக்கீமுக்கு இதன் பாரதூரம் தெரியாதா?
தெரியும்.
அப்படியானால், ஒன்றில் மேல் மட்டத்து அழுத்தம் இருந்திருக்க வேண்டும் அல்லது, யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்ற அலட்சியப் போக்கும் சுயநல அரசியலும் கைகளை உயர்த்தக் கட்டளை இட்டிருக்க வேண்டும்.
எப்படியோ, இந்த செயற்பாட்டுக்கும் ஹக்கீமாரின் பொக்கட்டில் பதில்கள் இருக்கும்.
சிறுபான்மையினரின் உரிமைக்காய் வழங்கப்படிருந்த மாகாண சபைகளைக் கூட யானை உண்ட விளாங்காயாய் மாற்றுவதற்கு ஆதரவளித்து விட்டு சிறுபான்மை உரிமை குறித்தும் தீர்வுத் திட்டம் குறித்தும் என்ன முகத்தோடு பேசப் போகிறNhம் என்று ஹக்கீமார் தனிமையில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இப்படியான பம்மாத்து அரசியலினால் எத்தனை காலத்துக்குத்தான் வண்டி ஓட்ட முடியும் என்பது குறித்தும் ஹக்கீமார் சிந்திக்க வேண்டும்.
neengal solwathu sariyentraalum, arasai pagaththu kondu kurippaaga mahindaraippagaththukkondu ethuwum seyya mudiyaada nilamai intru nattilullathu.muthalil naam theermanikkum shakthi enpathai marandu vida wendum,ithu thamilargalukkum porundum.
ReplyDelete