''இலங்கை முஸ்லிம்களின் ஊடக இடைவெளியை யாழ் முஸ்லிம் இணையம் நிரப்பவேண்டும்''
(முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்)
இன்று நாம் தகவல் தொழிநுட்பயுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தப்பாரிய ஒரு புரட்சியை விஞ்ஞான வளர்ச்சியே எமக்குப் பெற்றுத்தந்தது என்றால் அது மிகையில்லை. ஊடகங்கள், கட்புல சாதனங்களாகவும், செவிப்புல சாதனங்களாகவும், கட்புல செவிப்புல சாதனங்களாகவும். (தொலைக்காட்சி, இணையம்) செயற்பட்டு வருகின்றன.
முஸ்லிம்களால் வெளியிடப்பட்ட பத்திரிகைகள்.
1. 1841-புதினாலங்காரி -வாப்பு மரைக்கார்,நெயித்தமரைக்கார்.
2. 1882-முஸ்லிம் நேசன் -மு.க.சித்திலெப்பை.
3. 1886-சர்வசன நேசன் -ஏ.எஸ்.சி.மொகைதீன்.
4. 1892-ஞானதீபம் -ஏ.எஸ்.சி.சித்திலெப்பை.
5. 1893-இஸ்லாம் மித்திரன் -எல்.எம்.ஒத்மன்.
6. 1900-முஸ்லிம் பாதுகாவலன் -ஐ.எம்.அப்துல் அஸீஸ்.
7. 1901-முஸ்லிம் பாதுகாவலன் -ஐ.எம்.அப்துல் அஸீஸ்.
8. 1906-மிஸ்பாருல் இஸ்லாம் -எம்.எல்.எம்.முஹம்மது காசில் ஆலிம்.
9. 1908-முஸ்லிம் -ஐ.எல்.அப்துல் அஸீஸ்.
10. 1914-இலங்கை முஸ்லிம் -கே.கே.ஹமீத்.
11. 1917-லங்கா மித்திரன் -எம்.என்.அஹமட்லெப்பை.
12. 1919-ஹாதாயத்துல் இஸ்லாம் -எச்.எச்.அளலான செய்யதுஹசன்.
13. 1919-தூதன் -ரி.கே.லை.
14. 1920-சம்சுல் இஸ்லாம் -ஐ.எம்.எஸ்.முஹம்மது யூசுப் ஆலிம்.
15. 1930-தினத்தபால் -க.எ.மீரா முகைதீன்.
16. 1930-தப்லிக்குல் இஸ்லாம் -இஸ்லாம் அச்சியந்திரச்சாலை.
17. எழுச்சிக்குரல்
18. பாமிஸ்
இன்று எமது நாட்டில் தமிழ் பத்திரிகைகள் தின இதழ்களாகவும், வாரஇதழ்களாகவும் வெளிவருகின்றன தினகரன், வீரகேசரி,சுடரொளி போன்றன நாளிதழ்களாகவும், வார இதழ்களாகவும் வெளிவருகின்றன. தினமுரசு, மித்திரன், ஜீனியஸ், விஜய், மீள்பார்வை, நவமணி, விடிவெள்ளி வார இதழ்களாகவும் வெளி வருகின்றன.
முஸ்லிம் ஊடகவியலாளர்கள் பலர் எமது நாட்டில் இருக்கின்ற போதும் முஸ்லிம்களுக்கான தனியான ஒரு தினப்பத்திரிகைகளோ, தொலைக்காட்சி அலைவரிசையையோ நடத்த முடியாத ஒரு கையறு நிலையிலேயே முஸ்லிம் சமூகம் உள்ளது. தனியான முஸ்லிம் ஊடகம் அமைக்கப்பட வேண்டுமெனும் கருத்தியல் இன்று பல மட்டங்களிலும் பேசப் பட்டு வருகின்றது. அறிஞர் சித்திலெப்பை முதல் உருவாக்கப்பட்ட முஸ்லிம் பத்திரிகைகள் குறிப்பிட்ட காலப் பகுதியில் நிறுத்தப்பட்ட வரலாற்றை நாம் பார்க்கிறோம். உதாரணம் எழுச்சிக்குரல், முஸ்லிம்நேசன், இஸ்லாமிய மித்திரன்.
முஸ்லிம் சார்பு கட்புல சாதனங்கள் (பத்திரிகைகள்) இடை நடுவில் நிறுத்தப் படுவதற்கான காரணங்களாக அச்சுறுத்தல்கள் அமையவில்லை மாறாக வேறு காரணங்களாவன.
1. முஸ்லிம்கள் பரம்பரை பரம்பரையாகச் சில தமிழர்களால் வெளியிடப்படும் பத்திரிகைளை விரும்பி வாசிக்கின்றமை உதாரணம் தினகரன், வீரகேசரி, சுடரொளி.
2. பொருளாதார ரீதியில் பலமாகவுள்ள முஸ்லிம் தனவந்தர்கள் தமது நிறுவனங்கள் தொடர்பான விளம்பரங்களை தமிழர் சார்பு தமிழ் பத்திரிகைகளில் விளம்பரம் செய்கின்றமை இதனால் பொருளாதார ரீதியாக அப்பத்திரகைகள் வலுவடைகின்றன.
3. முஸ்லிம் பத்திரிகைகளை வெளியிடுவோர் எதிர் கொள்ளும் பொருளாதார சிக்கல்கள்.
4. தனவந்த முஸ்லிம்கள் பத்திரகைத்துறையிலோ, ஊடகத்துறையிலோ முதலீடு செய்ய முன்வராமை.
5. தமிழர் பத்திரிகைகளை முஸ்லிம்கள் வாசிப்பது போல முஸ்லிம் பத்திரிகைளை தமிழர் விரும்பி வாசிப்பது இல்லை.
இவ்வாறாக தமிழில் வெளிவரும் முஸ்லிம் பத்திரிகைகளை வலுப்படுத்துவதற்கான தேவை எப்போதையும் விட இப்போது வேண்டப்படுகின்றது. தமிழ், ஆங்கில, சிங்கள ஊடகங்கள் சில முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், காமுகர்களாகவும், நிலத்தை அபகரிப்பவர்களாகவும், வியாபாரிகளாக ஏனையோரை சுரண்டுபவர்களாகவும், அதிகம் மாடுகளை கொலை செய்பவர்களாகவும், சனத்தொகையை பெருக்குபவர்களாகவும் பிரச்சாரம் செய்து முஸ்லிம்கட்குஎதிராக ஏனைய சமுகத்தோரைதூண்டி விடும் காரியத்ததை செய்து விடுகின்றன. ஆகவே இவற்றிற்கு சரியான பதில்களை நாம் ஊடக பாசையில் சிறப்பாக வழங்கவேண்டியுள்ளது.
அடுத்து தகவல் புரட்சின் கடைக்குட்டியான இணையத்தளங்களை பார்க்கின்ற போது ஆயிரக்கணக்கான தளங்கள் பல மொழிகளிலும் உள்ளன. தமிழர்களால் நடாத்தப்படும் இணைய தளங்கள் நுற்றுக்கணக்கில்உள்ளன.அவை தமிழர்கட்கு நடைபெறும் கலை, கலாச்சார பிரச்சினைகள், துன்பம், அவலங்கள், உரிமை மீறல்கள், என்பவற்றை உடனுக்குடன் வெளிப்படுத்தி தம் சமுகப்பிரச்சினையை உடனுக்குடன் வெளிப்படுத்தி வருகின்றன.
தமிழ் சமூகத்துடன் ஒப்பிடும்போது முஸ்லிம்களால் நடாத்தப்படும் இணைய தளங்கள் விரல்விட்டு எண்ணக்கூடியளவில் உள்ளன.
உதாரணம் - யாழ் முஸ்லிம்.கொம்
இவ்வாறு நடாத்தப்படும் சில இணைய தளங்கள் உரிய வேளைக்குப் புதிய புதிய செய்திகளை பதிவேற்றம் செய்ய முடியாமல் திண்டாடுவதை காணமுடிகின்றது. தகவல் தொழில்நுட்ப அறிவுடைய முஸ்லிம் இளைஞர் யுவதிகள் தம் அறிவை முஸ்லிம் சமுகத்திற்காக பயன்படுத்த வேண்டும். முந்திக் கொண்டு புதிய நம்பகச் செய்திகளை தளங்கள் வழங்க வேண்டும்.
எனது பார்வையில் யாழ் முஸ்லிம் இணைய தளம் இன்று இலங்கை முஸலிம்களாலும், தமிழ் பேசும் உலக முஸ்லிம்களாலும் அதிகம் பார்வையிடப்படும் இணைய தளமாக ஜப்னா முஸ்லிம். கொம் திகழ்கிறது. என்றால் அதுமிகையில்லை. இவ்விணையம் சமுகப்பணியையும், அறப்பாணியையும் செய்து வருகின்றது.
எந்த வொரு தொய்வும் ஏற்படாமல் ஏனைய ஊடகங்களை முந்திக் கொண்டு தகவல்களை வெளியிடுகின்றது. இதில் வரும் செய்திகள் நம்பகம் நிறைந்ததாகவும், சுதந்திரமாகவும் உள்ளன. எழுத்தாளர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதுடன் புதிய புதிய எழுத்தாளர்களுக்கு களமும் அமைத்துக் கொடுத்து வருகின்றது.
இன்றைய ஊடகங்கள் ஏதாவது ஒரு அரசியல் கட்சிகளுக்கோ அல்லது அரசியல் வாதிளுக்கோ, ஒரு குழுவுக்கோ, அல்லது முஸ்லீம் மார்க்கப் பிரிவினருக்கோ சார்பாக நின்று பணிபுரிவதை நாம் அறிவோம். ஆனால், மாறாக இவ்விணையம் பக்கச் சார்போ பாரபட்சமோ இன்றி நடு நிலமையாக நின்று செய்தியை வெளியிடுவது இதன் நீண்ட கால இருப்புக்கு கட்டியம் கூறுவதாக உள்ளது.
ஊடகப்பயங்கரவாதம் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்கும் இக்கால கட்டத்தில் உடனுக்குடன் பதில் வழங்கும் துணிவும், தைரியமும் பாராட்டத்தக்கது. முஸ்லிம்களின் காவலனாக இன்று பணி புரிவதை நாம் எப்படி சொல்லாமல் விடுவது.
உலக முஸ்லிம்கட்கும், உலக முஸ்லிம் நாடுகளிலும் நடை பெறும் அச்சுறுத்தல்கள், அழிவகள், பயங்கரவாதம் (சியோனிச) போன்றவற்றையும் உடனுக்குடன் தரும் உன்னத சேவை எம்மைக்கவர்ந்துள்ளது. லிபிய புரட்சி,எகிப்திய புரட்சி, பர்மிய புரட்சி,பலஸ்தீனப் பிரச்சினை டியுனிச பிரச்சினை, பர்மிய முஸ்லிம்கள் மீதான மனித உரிமை மீறல்கள், போன்றவற்றை முதலில் உங்கள் ஊடகத்தின் மூலமே நாம் அறிகிறோம்.
1990 ஒக்டோபரில் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மறக்கடிக்கப்பட்ட வரலாற்றுக் கதைகளையும் உரிமை மீறல்களையும் மீண்டும் உயிர்ப்பித்து தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பிரச்சாரப் படுத்தி வரும் யாழ் முஸ்லிம் இணையத்தின் பணி வரலாற்றில் வைர வரிகளால் பொறிக்கப்பட வேண்டியனவாகும்.
யாழ் முஸ்லிம் இணையமே: நீ வாழ்விழந்த வடபுல முஸ்லிம்களின் உயிர்மூச்சாவாய், உலக முஸலிம்களின் உறவுப் பாலமாவாய், இலங்கை முஸ்லிம்களின் இனிய இதயமும் ஆவாய்,உன் பணி சிறக்க என் பிரார்தனைகள் என்றும் உண்டு.
இலங்கை முஸ்லிம்களின் ஊடக இடைவெளியை உன்னைக் கொண்டு இறைவன் மேலும் மேலும் நிரப்புவானாக..!
இரண்டு வயதைக் கொண்டாடும் உன் பணிக்கு உன்னை பார்வையிட்ட 50 இலட்சத்திற்கும் அதிகமான வாசகர்களின் வாழ்த்தும் பாராட்டும் என்றும் உரியவை இரண்டு வயதையுடைய நீ நின்சேவையால் 25 வயது வாலிபன் போல் தோற்றம் காட்டுகிறாய்.
உன்னை வலுப்படுத்த சில ஆலோசனைகள்..
* ஆங்கில, சிங்கள மொழிகளிலும் நீ வெளி வர வேண்டும்.
* ஜெயபாலன் ஐயா போன்ற நடு நிலைவாதிகளின் ஆக்கங்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.
* படித்தவர் மட்டுமன்றி பாமரனிடமும் நீ செல்ல வேண்டும்.
* உன் வளத்தை பயன்படுத்தி வடபுல முஸ்லிம்களின் வரலாற்றை மாவட்ட ரீதியாக ஆவணப் படுத்த வேண்டும்.
* தமிழ் முஸ்லிம் உறவுக்கு இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
* உன் தனித்துவம், தைரியம் கெடாமல் விளம்பரங்களுக்கும் இடம் கொடுக்க வேண்டும்.
* தொடராக வெளிவர ஸ்திரப் படுத்தப்பட வேண்டும்.
Post a Comment