தாய் நாட்டின் மேன்மையை உலகிற்கு பறைசாற்றுங்கள் - டுபாயில் ஜனாதிபதி மஹிந்த
உலகெங்கும் பரவி வாழும் இலங்கையர்கள் அனைவரும் தாய் நாட்டின் மேன்மையைப் பறைசாற்றும் யுகம் உருவாகியுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். முப்பது வருட பயங்கரவாத யுத்தத்துக்குப்பின் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள சமாதானம் மற்றும் அபிவிருத்தி ஆச்சரியமிக்கது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
துபாய் நாட்டிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்நாட்டிலுள்ள இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த ஜனாதிபதி: பயங்கரவாதத்தின் பாதிப்புகளாலேயே எமது மக்களாகிய நீங்கள் தாய் நாட்டை விட்டு இங்கு வந்து. நாட்டின் அபிவிருத்தியைப் புறந்தள்ளி நாட்டைப் பின்தள்ளிய பயங்கரவாதம் தற்போது தோற்கடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் சகல பகுதிகளிலும் சகல இன, மத மக்களும் சமாதானமாக வாழக்கூடிய சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தருணத்தில் நீங்கள் தாய் நாட்டை விட்டு இங்கு வாழ்ந்தாலும் தாய் நாட்டின் மேன்மையை உலகிற்கு பறைசாற்ற வேண்டும். அதேவேளை தாய் நாட்டின் தற்போதைய சூழலை கண்களால் கண்டுணர நேரில் வாருங்கள் எனவும் இதன் போது ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
உலக எரிசக்தி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டுபாய் நாட்டிற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று முன்தினமிரவு அங்கு வாழும் இலங்கையர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதி இங்கு மேலும் தெரிவித்ததாவது: வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் அந்த நாடுகளிலிருந்து கொண்டு மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு நாட்டின் மேன்மைக்கும் கெளரவத்திற்கும் உறுதுணையாகும்.
தற்போது பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றவர்களால் இலங்கையைப் பற்றிய தவறான கருத்துக்கள் இன்டர்நெட் மூலம் உலகம் முழுவதிலும் கொண்டு செல்லப்படுகிறது. அதேபோன்று பரப்பப்படும் தகவல்கள் இலங்கையின் கீர்த்திக்குப் பங்கம் ஏற்படுத்துவதாகவுள்ளன. இதனைப் பார்வையிடுவோர் உண்மையை உணர்ந்து கொள்ளல் முக்கியமாகும்.
இலங்கைக்கு ஒருமுறை மாத்திரம் வந்து சென்றவர்கள் இலங்கையின் சமாதான நிலை மற்றும் அபிவிருத்தி பற்றி குற்றம் சுமத்த முடியாதென கூறிய ஜனாதிபதி அவர்கள் பயங்கரவாதம் காரணமாக பீடிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு வாழ் மக்களுக்கு அபிவிருத்தியின் உரிமை மாத்திரமின்றி, நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் அனுபவித்து வருகின்ற சகல உரிமைகளையும் அவர்களும் அனுபவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு அபிவிருத்தியை கிராமத்திற்கு கொண்டு செல்லவும் அரசாங்கத்தால் முடிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், முன்னேற்றமடைந்த பாடசாலைகள், நவீன மருத்துவமனைகள், நெடுஞ்சாலைகள் மாத்திரமன்றி இன்று நாட்டின் மின்சாரத்திற்கான தேவையின் 90 சதவீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அது மிக விரைவில் நூறு சதவீதமாக பூர்த்தி செய்யப்படும் எனவும் வலியுறுத்தினார்.
இதற்கிடையே துறைமுகங்கள், விமான நிலையங்கள், நீர்ப்பாசன திட்டங்கள் என்பனவும், அதிவேக நெடுஞ்சாலைகளும் இன்று நாட்டிலே நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தாம் தொழில் அமைச்சராக இருந்த போது டுபாய் நாட்டிற்கு வருகை தந்ததாகவும் நினைவு கூர்ந்தார். அதன் போது டுபாய் நாட்டிலே தொழில்புரிந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் ஞாபகப்படுத்தினார்.
ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் ஜனாதிபதி அவர்களும் இச்சுற்றுப் பயணத்தில் பங்கேற்றதுடன் வெளியுறவு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, மேல் மாகாண சபை உறுப்பினர் நவுசர் பெளசி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தினகரன்
Post a Comment