ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் இந்துக் கோயில்கள் புனரமைப்பு!
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று 7 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும்- ஜனாதிபதியின் 67 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில்கள் தமிழ் மக்களின் பூஜை வழிபாட்டுக்காக புனரமைக்கப்படவுள்ளதாக நீர்பாசன அபிவிருத்தி மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மொபிடல் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறுகையில்:
30 வருடகால பயங்கரவாத நடவடிக்கை காரணமாக சீரழிந்துபோயிருந்த நாட்டை ஒரே தேசமாக- ஒரே குடையின்; கீழ் ஒன்றுபடுத்தி வரலாற்றுச் சாதனை புரிந்தவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
அவர் ஜனாதிபதியாகப் பதவியேற்று 7 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டும் ஜனாதிபதியின் 67 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் நாடு முழுவதிலும் சகல சமய வழிபாடுகளை 'கிருவாபத்துவென் தல் அருணட்ட" என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள சகல மாவட்டங்களிலும் சர்வ சமய வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் தமிழ் மக்களின் சமய வழிபாட்டுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இந்துக் கோயில்களை புனரமைக்கவும் நடவடிக்கை எடுதக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தெற்கில் மாத்தறையில் இருந்து வடக்கில் வவுனியா வரையில் 705 கிலோ மீற்றர் தூரம் கொண்ட சைக்கிள் சவாரியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் முன்னணி சைக்கிளோட்ட வீரர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment