தலையாட்டிகளின் அரசியல்..!
(தம்பி)
திவிநெகும என்கிற சட்ட மூலம் ஏற்படுத்திய புயல் ஓய்வதற்கு முன்பு, உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் மேற்படி இரண்டு சட்ட மூலங்களும் சிறுபான்மை சமூகங்களுக்குச் சந்தோசமான சமாச்சாரங்களாகத் தெரியவில்லை. திவிநெகும சட்ட மூலமானது மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசு பறித்தெடுப்பதற்கான முயற்சியாகும் என்று விமர்சிக்கப்படுகிறது. அதேபோல, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளுராட்சி திருத்தச் சட்ட மூலமானது, சிறிய அல்லது சிறுபான்மை சமூகங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே பலவீனப்படுத்தும் வகையிலானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மாகாணசபை முறைமை உருவாகுவதற்குக் காரணமான 13 ஆவது திருத்தச் சட்டத்தையே உடனடியாக ரத்துச் செய்யப்பட வேண்டுமென்று கூறியுள்ளார் பாதுகாப்பு செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ. இது சிறுபான்னை சமூகங்களிடையே பாரிய அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருக்கிறது. கிட்டத்தட்ட மரத்தால் விழுந்தவனை – மாடு, யானை, பன்றி, காண்டா மிருகம் என்று அத்தனை உருப்படியான மிருகங்களும்; கூட்டாகச் சேர்ந்து ஏறி மிதித்த கதை போலதான் இது இருக்கிறது.
கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது - இலங்கையிலுள்ள சிறுபான்மை சமூகங்கள் அரசியல் ரீதியாகப் பலம் பெறுவதையோ, அந்த சமூகங்களிடம் கொஞ்சமேனும் அரசியல் அதிகாரம் சென்றடைவதையோ 'ராஜபக்ஷ'கள் விரும்பவில்லை என்பது அப்பட்டமாகப் புலப்படுகிறது.
இதை இன்னொரு வகையில் கூறினால், சிங்களப் பெரும்பான்மையிடம், சிறுபான்மை மக்கள் சரணாகதி அரசியல் செய்ய வேண்டும் என்பதே இவர்களின் பெரு விருப்பாகத் தெரிகிறது.
துரதிஷ்டவசமாக, இவர்களின் இந்த விருப்பத்துக்கு முட்டுக் கொடுக்கும் வகையில்தான் முஸ்லிம் அரசியல் கட்சிகள் செயற்பட்டு வருகின்றன. குறிப்பாக, முஸ்லிம் மக்களின் கணிசமான ஆதரவைப் பெற்றுள்ள மு.காங்கிரசே - ராஜபக்ஷகளின் இந்த வியூகத்துக்குப் பலியாகி இருப்பதை நினைக்கையில் வெட்கமாக இருக்கிறது.
'எடுப்பதற்கெல்லாம் மு.காங்கிரசையே இந்த ஊடகங்கள் விமர்சிப்பதும், திட்டுவதும் அத்தனை அழகில்லை. அது ஊடக தர்மமும் இல்லை. மற்றைய முஸ்லிம் கட்சிகளையும், அதன் தலைவர்களையும் தவிர்த்து விட்டு, மு.கா. தலைவரை மட்டும் குறி வைத்துத் தாக்குவது போல் ஏன் இவர்கள் எழுதுகின்றார்கள்?' என்று - மு.காங்கிரசின் தீவிர தொண்டரான நண்பரொருவர் நம்மிடம் கேட்டார்.
அமைச்சர்களான அதாஉல்லா மற்றும் றிசாத் பதியுத்தீன் ஆகியோரைத்தான் 'ஏனைய முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் என்று' நண்பர் குறிப்பால் உணர்த்தினார்.
சரியாகச் சொன்னால், அமைச்சர்கள் அதாஉல்லாவும், றிசாத் பதியுத்தீனும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் சேவகர்கள். மஹிந்த ராஜபக்ஷவைப் பகைத்துக் கொண்டு – அரசியல் செய்வதை இவர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது. மட்டுமன்றி, 'நாங்கள் மஹிந்த கம்பனிக்காரர்கள்' என்று - தங்களையே இவர்கள் பகிரங்க மேடைகளில் சொல்லிப் பெருமைப் பட்டுக் கொள்கின்றார்கள். இவ்வாறானவர்கள், மகிந்த ராஜபக்ஷவுக்குத் தலையாட்டிகளாக இருக்கின்றனர் என்பதொன்றும் ஆச்சரியமான விடயமே அல்ல! மட்டுமன்றி, தாங்கள்தான் முஸ்லிம் சமூகத்தின் மீட்பர்கள் என்றோ, முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு பிரச்சினையென்றால் மஹிந்த ராஜபக்ஷவைக் கூட, நாங்கள் துச்சமென மதித்துத் தூக்கி எறிவோம் என்றோ இவர்கள் ஒரு போதும் கூறவுமில்லை. ஆனால், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் இவற்றையெல்லாம் கூறினார்.
அதனால்தான், மு.காங்கிரசும் அதன் தலைமையும் தடுமாறும் போதும், தவறு விடும் போதும் கடுமையான விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இது தவிர்க்க முடியாதது.
விரும்பியோ அல்லது விரும்பாமலோ ராஜபக்ஷ அரசாங்கத்துக்குத் தலையாட்ட வேண்டியதொரு பொறிக்குள் - மு.காங்கிரசும் அதன் தலைமையும் தள்ளப்பட்டுள்ளது. இந்தப் பொறியில் இருந்து தப்புவதென்பது அத்துணை இலகு அல்ல!
கிழக்கு மாகாணசபையின் அங்கீகாரத்துக்காக திவிநெகும சட்ட மூலம் கொண்டு வரப்பட்ட போது, மு.காங்கிரசுக்கு அரச உயர் மட்டத்திலிருந்து கடுமையான தொனியில் ஒரு செய்தி சொல்லப்பட்டதாக அறியமுடிகிறது. அதாவது, 'திவிநெகும சட்ட மூலத்தினை கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர்கள் எதிர்ப்பதாக இருந்தால், கிழக்கு மாகாணசபையின் ஆட்சியிலிருந்து விலகி, எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்து கொண்டு அதைச் செய்யுங்கள். அது பற்றி எங்களுக்குக் கவலையில்லை' என்று பொருள்படும் வகையில் - அந்தச் செய்தி சொல்லப்பட்டதென்று கட்சியின் உள்வீட்டுக்காரர் ஒருவரே கவலையோடு கூறினார்.
அதாவது, கிழக்கு மாகாணசபையிலோ, மத்திய அரசாங்கத்திலோ - ஆளுந்தரப்பிலிருந்து மு.கா. சென்று விடுமென்று அரச தரப்புக்கு எதுவித அச்சமும் இல்லை. ஆனால் - அரச தரப்பு எங்கே தங்களை ஆளும் தரப்பிலிருந்து தூக்கி வீசி விடுமோ என்று மு.கா பயப்படுகிறது. அதனால்தான், மஹிந்த அரசு ஊதுகின்ற மகுடிக்கு ஏற்றாற்போல் படம் எடுத்தாடுகிறார் மு.கா. தலைவர்!
மு.கா. தலைமை விடுகின்ற தவறுகள் நியாயப்படுத்த முடியாதவை. ஆனால், கட்சியைக் காப்பாற்றுவதற்காகவே அவற்றினை - தான் செய்ததாக மு.கா. தலைமை கூறுகிறது. 'மு.காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் ஓடிப்போய் அரசுடன் ஒட்டிக் கொள்ளும் நிலைவரங்களைத் தடுப்பதற்காகவே, மு.கா. தலைவர் கண்களை மூடிக்கொண்டு குழிகளுக்குள் விழுகின்றார்' என்று – மு.கா. தலைவரே பல இடங்களில் மிகப் பகிரங்கமாக வாக்குமூலம் வழங்கியிருக்கின்றார்.
மு.கா. தலைவர் ஹக்கீம் சொல்வதில் உண்மைகள் இருக்கலாம். ஆனால், தனது தவறுகளை நியாயப்படுத்துவதற்கான காரணமாக அதைச் சொல்ல முடியாது.
திவிநெகும சட்ட மூலத்துக்கு கிழக்கு மாகாணத்தில் மு.கா. ஏன் ஆதரவளித்தது என்பதற்கான காரணத்தை மு.கா. தலைவர் ஹக்கீம் இதுவரை வாயைத் திறந்து சொல்லவில்லை. மு.கா.வின் செயலாளர் ஹசனலி இது விடயத்தில் கொறளி வித்தைக்காரர் போல் செயற்படுகின்றார். மக்கள்தான் பாவம். திவிநெகும சட்ட மூலத்தை தங்கள் பிரதிநிதிகள் ஏன் ஆதரித்தார்கள் என்று அவர்களுக்கு இதுவரை தெரியாது.
இது இப்படியிருக்க, மு.காங்கிரசின் உயர்பீடம் கடந்த வாரம் கூடியபோது 'திவிநெகும சட்ட மூலத்துக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஏன் ஆதரவளித்தார்கள்' என்று கேள்வியெழுப்பப்பட்டிருக்கிறது. வழமைபோல், ஒரு சில உயர்பீட உறுப்பினர்கள் மட்டும்தான் அங்கு தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் உரத்த குரலில் தெரிவித்திருக்கின்றனர். தலைவரின் அனுமதியின்றி சட்டமூலத்துக்கு ஆதரவு தெரிவித்த கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அங்கிருந்த சிலர் கூறியிருந்தார்கள்.
'அப்படியா? இதற்காக விசாரணைக் குழுவொன்றினை அமைத்தால் போச்சு' என்று தெரிவித்த கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம் - குழுவில் இடம்பெறுவோரின் பெயர்களை அறிவித்தார். அதுதான் உச்ச கட்டப் பகிடியாகும். கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீம், செயலாளர் ஹசனலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர்தான் விசாரணைக் குழு அங்கத்தவர்கள். அதாவது, திவிநெகும சட்டமூலத்தை ஆதரித்து கைகளை உயர்த்திய மு.கா.வின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை இவர்கள்தான் விசாரிப்பார்களாம்.
அப்படியென்றால், கடைசியில் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எதுவும் நடக்காது!
இப்படியே போனால், சிங்களப் பேரினவாதிகளைப் குஷிப்படுத்தும் சட்டமூலங்களைக் கொண்டு வந்து – சிறுபான்மை சமூகங்களுக்கு ஆட்சியாளர்கள் ஆப்படித்துக் கொண்டேயிருப்பார்கள். நமது தலைவர்களும் - கையாலாகத்தனமாக அவற்றினை ஆதரித்துக் கொண்டேயிருப்பார்கள்.
கடைசியில், சிறுபான்மை சமூகங்களுக்கென்று இங்கு எதுவும் இருக்காது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியாவில் இருக்கும் பஞ்சாயத்து முறைமையே போதுமானது என்று இந்த ஆட்சியாளர்கள் சில காலங்களுக்கு முன்னர் சொன்னது இங்கு நினைவுக்கு வருகிறது. மாகாணசபை முறைமையையும் பறித்தெடுத்துக் கொண்டு, உள்ளுராட்சி மன்ற முறைமையிலும் சிறுபான்மைக் கட்சிகளை பலவீனப்படுத்படுத்த நினைக்கும் இந்த ஆட்சியாளர்கள் - கடைசியில் ஊருக்கொரு பஞ்சாயத்தினை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அப்போது, ஒரு ஆலமரமும் - சொம்பும் இருந்தாலே சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்பார்கள்!
ஒரு பஞ்சாயத்தை நடத்துவதற்கு இவற்றினைத் தவிர வேறென்ன வேண்டும்?!
·
Post a Comment