பாவப்பட்ட எண்..!
(தம்பி)
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து கடைசியில் 'கடிக்கக் கூடாத' எதையோ - கடித்த கதை பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். 13ஆவது திருத்தச் சட்டத்தினை அரசியல் யாப்பிலிருந்து நீக்க வேண்டும் என்கிற குரல்கள் அரச தரப்பிலிருந்து எழுகின்ற போது, 'ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்த' கதை நினைவுக்கு வருகிறது. ஏற்கனவே, நிறைய விடயங்களைக் கடித்துக் குதறியுள்ள அரசு, இப்போது 'பதின் மூன்றை' குறி வைத்துள்ளது.
அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் என்பது – மாகாணசபை முறைமையை உருவாக்குவதற்கானதொரு சட்டமாகும். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதென்பது, நாட்டிலுள்ள மாகாணசபை முறைமையை ஒழித்துக் கட்டுவதாகும்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வாக 1987 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டதொரு திட்டம்தான் மாகாணசபை முறைமை. 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அபிலாஷைகள் – முற்று முழுதாக நிறைவு செய்யப்படவில்லை. ஆயினும், ஏதோவொரு வீதத்தில் பிரச்சினைக்கான தீர்வு 13ஆவது திருத்தச் சட்டத்தால் நிரப்பப்பட்டிருந்தது.
இருந்தபோதும், மாகாணசபை முறைமையை விடுதலைப்புலிகள் இறுதிவரை ஏற்றுக் கொள்ளவேயில்லை. அரசுகளும், 13 ஆவது திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பொலிஸ், காணி உள்ளிட்ட அதிகாரங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் களவாடிக் கொண்டு வந்தது, வருகிறது. மாகாணசபைக்கான அதிகாரங்களை பறித்தெடுக்கும் முயற்சியின் மற்றொரு செயற்பாடுதான் திவிநெகும சட்ட மூலம் என்பது பற்றி நாம் அறிவோம்!
13 ஆவது திருத்தச் சட்டத்தை உடனடியாக ரத்துச் செய்ய வேண்டும் என்று அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ தனது நேர்காணலொன்றின் போது கூறியிருந்தார். அதுவும், த.தே.கூட்டமைப்பு – டெல்லி சென்றிருந்த வேளையில்தான் பாதுகாப்பு செயலாளர் இந்தக் கோசத்தை முன்வைத்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் பட்டாலி சம்பிக்க ரணவக்க 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று கூறினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் விமல் வீரவன்ச 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குங்கள் என்று ஜனாதிபதிக்குக் கடிதமொன்றினை எழுதியிருந்தார். அதன் பிறகு '13ஆவது திருத்தத்தை ரத்துச் செய்வது பற்றி தேவையென்றால் பரிசீலிப்போம்' என்கிறார் ஜனாதிபதியின் சகோதரர் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ.
13ஆவது திருத்தத்தினை ஏன் நீக்க வேண்டும் என்று பஷில் ராஜபக்ஷ கூறுவதிலிருந்தே, ஆட்சியாளர்களின் கோபத்தினையும், நோக்கத்தினையும் புரிந்து கொள்ள முடிகிறது. 'வட மாகாணத்தில் சமுர்த்தி போன்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கும், திவிநெகும போன்ற சட்ட மூலங்களுக்கு அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கும் 13ஆவது திருத்தச் சட்டம் தடையாக இருக்கும் என்று கருதப்பட்டால், அதை ரத்துச் செய்வது தொடர்பில் பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவது குறித்து ஆராய்வோம்' என்கிறார் பஷில் ராஜபக்ஷ.
அதாவது, திவிநெகும சட்ட மூலத்தினை நிறைவேற்றிக் கொள்வதில் அரசாங்கம் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள்தான் - பதின் மூன்றை நீக்குவது தொடர்பில் அரசை இவ்வாறு தீவிரமாக யோசிக்க வைத்திருக்கிறது. மாகாணசபை முறைமை உள்ளவரை – திவிநெகும போன்ற சட்ட மூலங்களை நிறைவேற்றிக் கொள்வதில் மத்திய அரசால் தனித்துச் செயற்பட முடியாது. இதன்போது மகாணசபைகளிடம் மத்திய அரசு மண்டியிட்டே ஆக வேண்டும். அதனால்தான், மாகாணசபை முறைமையையே இல்லாமலாக்கினால் என்ன என்று அரசு யோசிக்கின்றது.
ஆனால், ஆட்சியாளர்களின் இந்த யோசனை ஆபத்தானது. '13ஆவது திருத்தத்தினை நீக்கினால் மீண்டும் ஆயுதப் போர் வெடிக்கும்' என்று கம்யூனிஸ்ற் கட்சியின் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான டியூ குணசேகர கூறியுள்ளார். மேலும், இதனால், இந்தியாவை இலங்கை நேரடியாகப் பகைக்கும் ஒரு நிலைவரமும் உருவாகும்.
13ஆவது திருத்தச் சட்டம் என்பது இலங்கை விரும்பிச் செய்த ஒன்றல்ல. அது இந்தியாவின் திட்டமாகும். இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவானதே 13ஆவது திருத்தச் சட்டம். இந்திய அரசு - கிட்டத்தட்ட இலங்கை அரசாங்கத்தின் காதைப் பிடித்துத் திருகி இதைச் சாதித்திருந்தது. எனவே, 13ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்குவதென்பது இந்தியாவின் கௌரவப் பிரச்சினையோடு சம்பந்தப்பட்டதாக மாறி விடும் என்பதால் - இந்தியா இது விடயத்தில் 'சும்மா' இராது!
இந்த நிலையில், திடுதிப்பென '13ஆவது திருத்தச் சட்டத்தினை ரத்துச் செய்யும் நோக்கம் தற்போது அரசாங்கத்துக்கு இல்லை' என்று கூறியிருக்கின்றார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல. அமைச்சரின் கூற்றினை மிக நுணுக்கமாகக் கவனிக்கும் போது ஒரு விடயத்தினை புரிந்து கொள்ள முடியும். அதாவது, 'ரத்துச் செய்யும் நோக்கம் தற்போது இல்லை' என்றுதான் அமைச்சர் கூறியிருக்கின்றார். 'தற்போது இல்லை' என்பதற்கும், 'அறவே இல்லை' என்பதற்கும் அர்த்தங்கள் வேவ்வேறானவை.
இந்த நிலையில், பதின் மூன்றை நீக்கும் அரசின் கோசம் தொடர்பில் சிறுபான்மை சமூகங்களைப் பிரிதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் என்ன நிலைப்பாட்டினை எடுக்கும் என்பது பற்றி இப்போதே கதைகள் அடிபடத் தொடங்கி விட்டன. த.தே.கூட்டமைப்பு இப்போதே இதை எதிர்க்கத் தொடங்கியுள்ளது. 13ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்படுமாயின் தமிழ் மக்கள் கிளந்தெழுவார்கள் என த.தே.கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரா. துரைரட்ணம் கூறியிருக்கின்றார். ஆனால், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடுகள்தான் வழமைபோல் மூடுமந்திரமாக உள்ளது.
குறிப்பாக, மு.காங்கிரஸ் இது விடயத்தில் என்ன நிலைப்பாட்டினை எடுக்கும் என்று தெரியவில்லை. '13ஆவது திருத்தச் சட்டத்தினை ஒழிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவதை மு.காங்கிரஸ் எதிர்க்கிறது' என்று அந்தக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 'மாகாணசபை முறைமையினை பாதுகாப்பது' தொடர்பாக மேல்மாகாண சபையில் கடந்த செவ்வாய்கிழமையன்று ஐ.தே.கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தனிநபர் பிரேரணையொன்றினைக் கொண்டு வந்திருந்தார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்தப் பிரேரணைக்கு எதிராக மு.காங்கிரஸ் உறுப்பினர்கள் அங்கு வாக்களித்தார்கள். அதாவது, அரசியல் யாப்பில் காணப்படுகின்ற மாகாணசசபை முறைமையினைத் தொடர்ந்து பாதுகாப்பதை மேல் மாகாணசபையில் மு.கா. எதிர்த்துள்ளது. இதை இன்னொரு வகையில் சொன்னால், மாகாணசபை முறைமையினைப் பாதுகாக்கத் தேவையில்லை என்று மு.கா. தெரிவித்திருக்கிறது.
திவிநெகும சட்ட மூலத்தின் போதும், மு.கா. இதைத்தான் செய்தது. திவிநெகும சட்ட மூலம் குறித்து - ஆரம்பத்தில் விமர்சித்தது. பிறகு, கால அவகாசம் தேவை என்றது. அதன் பிறகு, மேல் மாகாணசபையிலும், கிழக்கு மாகாணசபையிலும் அந்தச் சட்ட மூலத்தினை மு.கா. ஆதரித்தது.
எது எவ்வாறிருந்த போதும், அரசு - நினைத்த மாத்திரத்தில் மாகாணசபை முறைமையினை நீக்கி விட முடியாது. சட்டப் பிரச்சினை, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற வேண்டிய தேவை, இந்தியா மற்றும் ஏனைய சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு, உள்நாட்டில் ஏற்படும் அரசியல் கொந்தளிப்பு என்று - ஆயிரத்தெட்டு ஆறு கடல்களை - இது விடயத்தில் அரசு கடக்க வேண்டும்.
ஆனால், மஹிந்த அரசு இந்தத் தடைகள் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளும் என்றும் நாம் எதிர்பார்க்க முடியாது. நினைத்ததை 'எவ்வாறேனும்' நடத்தி முடிக்கும் குணம் கொண்டவர்கள்தான் நாட்டில் - ஆட்சியாளர்களாகவும், பங்காளிகளாகவும் இருக்கின்றனர் என்பதையும் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. எனவே, சிறுபான்மை கட்சிகள் இது விடயத்தில் தமக்குள்ள துரும்பினை துணிவுடன் பயன்படுத்தினால் மட்டுமே – வெற்றிபெற முடியும்.
ஆனால், நம்மவர்கள் - கட்சியைக் காப்பாற்றுவதற்காக, 'சேதாரமில்லாத விட்டுக் கொடுப்புகளை' இதிலும் செய்யத் தொடங்குவார்களாயின், கடைசியில் - அம்போதான்!
·
Post a Comment